ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினை விட, தமிழ்நாட்டின் ஸ்டாலினைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள்!

10 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குஜராத் அரசு விழாவில் தி.மு.க.வைப் பற்றி தரம் தாழ்ந்து பேசிய
அமித்ஷாவுக்கு கடலூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் பதிலடி!

நெய்வேலி, டிச.12 ‘‘பெரியார் உலகம் என்பது ஜாதியற்ற உலகம்! பெண்ணடிமை நீங்கிய உலகம்! என்றும், மதமான ‘பேய்’ பிடியாதிருக்க வேண்டும் என்றும், திராவிடம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம்” என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நெய்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நெய்வேலியில் முப்பெரும் விழா!

கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நெய்வேலி வடக்குத்துப் பகுதியின்  ஆர்ச் கேட் அருகில் 9.12.2025 செவ்வாய் மாலை 5 மணியளவில், இதுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” தொடர் பரப்புரைப் பயணம், ‘‘வடகுத்து பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் வாசகர் வட்டத்தின் 100 ஆம் நிகழ்ச்சி”, ‘‘பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா” என்ற தலைப்புகளில் முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காட்டுமன்னார்கோவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கழகத் தலைவர் இரவு 9 மணிக்கு மேல் இரண்டாம் நிகழ்ச்சி நடக்கும் இடமான நெய்வேலி ஆர்ச் கேட்டுக்கு வந்தார். தோழர்கள் தீப்பந்தங்கள் ஏந்தி, கழகத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஒரு பக்கம் இருட்டில் எரியும் தீப்பந்தங்கள் மற்றொரு பக்கம் தோழர்களால் கழகத் தலைவரை வரவேற்க எழுச்சிகரமாக ஒலிக்கப்பட்ட முழக்கங்கள் – இரண்டும் சேர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி,  அந்த உணர்ச்சி கழகத் தலைவர் மேடையேறி பொதுமக்களுக்கு இரு கை கூப்பி வணக்கம் வைக்கும் வரையில் நீடித்தது.

வடக்கு நம்மை குத்துகிறது?
வடக்குத்து அதை சந்திக்கும்!

நான் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இவ்வளவு மகிழ்ச்சியை அண்மைக்காலத்தில் நான் அடையவில்லை. அதனால், எனக்குக் களைப்பே தெரியவில்லை. சிந்தனைச் செல்வன் அவர்கள் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். இங்கே உருவானவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர். அதேபோல் நம்முடைய சபா இராசேந்தி ரன் அவர்கள் பொறியாளர்; என்றைக்கும் நல்ல நெறியாளர். அதே மாதிரி எங்கள் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் மிகவும் நெருக்கமான புகழேந்தி அவர்களின் வாரிசு வழக்குரைஞர் இள.புகழேந்தி அவர்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைந்து இந்த வடக்குத்திலே நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
வடக்கு… நம்மைக் குத்துகிறது இப்போது. அந்த குத்துகளின் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டும். வடக்குத்து அதைச் சந்திக்கும்! வடக்குக் குத்தை சந்திக்கும். வடக்கு குத்து அன்றாடம் எப்படி; என்றைக்கு வரும் என்று தெரியாது. ஆனால், வந்து கொண்டிருக்கிறது. அத்தனை குத்துகளையும் சமாளிக்கும் ஆற்றல் வாய்ந்த ஒரு முதலமைச்சரை இந்தத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்று சொன்னால், அவர் தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியை உலகத்திற்குத் தந்துகொண்டிருக்கிற ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
– தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(9.12.2025, நெய்வேலி, ஆர்ச் கேட்

இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி தலைமையேற்று உரையாற்றினார். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் சி.மணிவேல் அனைவரையும் சிறப்பித்து வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். மேலும் பெரியார் உலகம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. மொத்தம் ரூ.25 லட்சம் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் பொறியாளர் வி.சிவக்குமார், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை நிலையச் செயலாளர் கனல் கண்ணன், தி.மு.க. குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் குண சேகரன், தி.மு.க. நெய்வேலி நகரச் செயலாளர், தொ.மு.ச.பொதுச்செயலாளர் குருநாதன், நெய்வேலி தொ.மு.ச.தலைவர் ஞான ஒளி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மருதமுத்து, சி.பி.அய்.(எம்.) நகரச் செயலாளர் பாலமுருகன், சி.பி.அய்.நகரச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். முன்னதாக புதுவை குமாரின் கொள்கை விளக்க இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார்.

தமிழ்நாடு

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தனது உரையில், ”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ”உலகம் எல்லாம் சுற்றி வந்தாலும் பிறந்த ஊருக்கு வரும் போது; பிறந்த மண்ணுக்கு வரும்போது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு, மேடையில் இருப்பவர்களை குடும்ப உணர்வுடன் சொந்தம் கொண்டாடிப் பேசினார். தொடர்ந்து, “வடலூரார் பிறந்த மண்ணிலே இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்று சொல்லிவிட்டு, மதமென்னும் ‘பேய்’ பிடியாதிருக்க வேண்டும்” என்று வள்ளலாரின் பொன் மொழியை நினைவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து, ‘பெரியார் உலகம்’ பற்றி சொல்ல வந்தவர், “எதிர்பார்த்ததை விட அதிகமாக தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் தலை தாழ்ந்த நன்றி” என்று கூறிவிட்டு, “பெரியார் உலகம் என்பது ஜாதியற்ற உலகம், பெண்ணடிமை நீங்கிய உலகம்” என்றார். மேலும் அவர், அமைச்சர் பேசும் போது பெண்கள் ஏராளமானோர் கவலையின்றி ஆசிரியர் பேச்சை கேட்பதற்காக வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதை நினைவூட்டி, “ஏன் பெண்கள் கவலைப்பட போகிறார்கள். அவர்களுடைய கவலை களைத் தான் தமிழ்நாடு அரசு தீர்த்துவிட்டதே” என்று காலை சிற்றுண்டித் திட்டம் பற்றி விவரித்தார். அதனால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிம்மதியை எடுத்துக்காட்டி, “அதனால்தான் கவலையில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்” என்று சொன்னதும் மேடையில் இருந்த அமைச்சர் சிரித்து அதை ஆமோதித்தார்.

கல்லூரிக்குச் சென்றால்
மாதா மாதம் ரூபாய் 1000/-

அதே போக்கில் தொடர்ந்து, திராவிடர் இயக்கம் பெண்களுக்கு கல்விச்செல்வத்தை சாமர்த்தியமாகக் கொடுத்த வரலாற்றை விவரித்தார். அதாவது, கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, 5 ஆம் வகுப்பு வரையிலும் படித்தால் திருமணத்திற்கு பணம் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கினார். படிப்பு முதல் தகுதி ஆக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை, ‘பொம்பளப் புள்ள படிச்சு என்ன ஆகப்போகுதுங்க?’ என்று பெற்றோரே அலுத்துக் கொள்வர். கொண்டு வந்த பிறகு, பெண்ணைப் பெற்றவர்கள், சரி, திருமணத்திற்கு பணம் கிடைக்குது என்று அதனால் பள்ளிக்கு அனுப்பினார்கள். அடுத்து, 10 ஆம் வகுப்பு வரையில் படித்தால் கூடுதலாக பணம் கொடுப்பதாகக் கலைஞர் அறிவித்தார். பெண்களை 10 ஆம் வகுப்பு வரைக்கும் படிக்க வைக்க பெற்றோர் சம்மதித்து அனுப்பி வைத்தனர். அடுத்து… 12 ஆம் வகுப்பு வரை வந்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டே வந்தவர், “இப்போது வந்திருக்கின்ற முதலமைச்சர் கல்லூரிக்குச் சென்றால் மாதா மாதம் ரூபாய் 1000/- என்று அறிவித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக இப்படிச் செய்த மதிநுட்பம் திராவிடர் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கு உண்டு” என்றதும் பலத்த கைதட்டல் எழுந்து அடங்கியது. அதைவிட ஒரு முக்கியமான; ஆழமான கருத்தை எடுத்துரைத்தார். அதாவது, “பெண்களுக்கு மாதாமாதம் 1,000/- கொடுக்கிறார்களே, அதற்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘மகளிர் உரிமைத் தொகை’. இது சலுகை அல்ல, உரிமை! சுயமரியாதை இயக்கம் தந்த அடிப்படை உரிமை! இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் கூட பார்த்துப் பார்த்து செய்யப்படுகிறது என்று வரிசையாகக் கூறிவிட்டு, ‘‘இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். உணர்ச்சி வசப்பட்ட மக்கள் பலமாகக் கைகளைத் தட்டினர்.

இந்தியா முழுவதற்கும்
பெண்களுக்குச் சொத்துரிமை வந்தது!

தொடர்ந்து அவர், ‘‘பெண்களுக்காக அம்பேத்கர் கொண்டு வந்த சட்ட முன்வடிவை ஸநாதனம் தோற்க டித்தது. மன வேதனைப்பட்டார் மாமனிதர் அம்பேத்கர். அன்றைக்கு காங்கிரசிலேயே ஸநாதனிகள் இருந்தார்கள்; காங்கிரசிலேயே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இருந்தனர். பிரதமர் நேருவால் எதுவும் செய்ய முடியவில்லை. குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம்? ஹிந்துத்துவ தத்துவம். மனம் நொந்துபோன அம்பேத்கர் இந்தக் கொள்கையை நிலைநாட்ட முடியாத பதவி எதற்கென்று கேட்டு ராஜினாமா செய்தார். இப்போ நம்மாளு என்ன பண்றான்? கொள்கை எல்லாம் இருக்கட்டுங்க, எனக்கு பதவி முக்கியம் அப்படிங்கறான். அதுவும் நேரா முதலமைச்சர் பதவி தான் வேணுங்கிறான் என்று சொன்னதும் மக்கள் சிரித்தபடியே கைதட்டினர். மாடி வீட்டுக்குப் போவதற்கு படியில் ஏற மாட்டேன். தாவித் தான் செல்வேன் என்று சொல்கிறான்’’ என்று ஒரு நகைச்சுவையாக உவமையையும் சொன்னார். அதற்கு மக்கள் ரசித்து சிரித்தனர். ‘‘பாண்டிச்சேரியில் ஒரு கட்சி நடத்திய  மக்கள் சந்திப்பில், எருமை மாடும் சேர்ந்து போகிறது” என்று கூறிவிட்டு, ‘‘எருமை மாட்டு மனப்பான்மையை மாற்றத்தான் பகுத்தறிவு இயக்கம் இத்தனை ஆண்டுகள் போராடி மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது” என்று சங்கடத்துடன் குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘1989 இல் தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை கொண்டு வந்தார் கலைஞர்! 2006 இல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது, கலைஞர் கொடுத்த ஊக்கத்தினால் இந்தியா முழுவதற்கும் பெண்களுக்குச் சொத்துரிமை வந்தது’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஒரு துளி ரத்தம் சிந்தாமல் செய்த புரட்சி!

தொடர்ந்து அவர், “நாங்கள் கண்களை மூடிக்கொண்டு எந்த ஆட்சியையும் ஆதரிக்கவில்லை. கொள்கைக்காகத்தான் ஆதரிக்கிறோம். இப்போது நமது முதலமைச்சர் ஒரு உத்தரவு போட்டு இருக்கார். அது என்னவென்றால்? பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவானால், அதுக்கு 10 விழுக்காடு சலுகை. பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, “எல்லாம் இவர்கள் காலத்தில்தான் வந்திருக்கின்றன என்று இவர்கள் தங்களின் பெயரப்பிள்ளைகளிடத்தில் பெருமையுடன் சொல்லலாம்” என்றார். பட்டா கொடுக்கும் போது கூட, ஆண்கள் பெயராலே கொடுக்காமல் பெண்களின் பெயரில் கொடுங்கள் என்று கலைஞர் உத்தரவு போட்டார் என்று சொல்லிவிட்டு, இந்திய அளவில் பெண்களுக்கு திராவிடர் இயக்கம் செய்த நன்மைகளைக் குறிப்பிடுவதற்காக, புரட்சியாளர் அம்பேத்கர் கொண்டு வந்த ‘இந்து கோட் பில்’ தொடர்பாக விவரித்தார். அதில் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டதை வேதனையுடன் சொல்லிவிட்டு, ”அம்பேத்கர் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?” என்ற கேள்வியுடன், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் – காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருவரும் பேசியதை, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற புத்தகத்திலிருந்து படித்துக் காட்டி, இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.ஆட்சி. அடிப்படை உரிமை; இந்த இயக்கம் செய்த புரட்சி; ஒரு துளி ரத்தம் சிந்தாமல் செய்த புரட்சி; அறிவாயுதம் ஏந்தி நடந்த அறிவுப்புரட்சி. அதனால் தான் இன்றைக்கு துணை முதலமைச்சர் தலைமையில் ‘அறிவுத்திருவிழா’ நடை பெறுகிறது என்று திராவிடர் இயக்கத்தின் 110 ஆண்டு கால வரலாற்றுத் தொடர்ச்சியை இணைத்துக் காட்டினார்.

எங்கள் ஸ்டாலினைக் கண்டு அஞ்சுகிறார்கள்!

இப்படி எல்லாம் அறிவுபூர்வமான திராவிடர் இயக்கத்தின் பணிகள் ஹிந்துத்துவவாதிகளை எரிச்சல் அடையச் செய்திருப்பதை சுட்டிக்காட்ட, உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ‘‘தி.மு.க.வை 2026 தேர்தலில் துடைத்து எறிவோம்’’ என்று பேசியதைச் சுட்டிக்காட்டி, ‘‘ஈட்டி எட்டிய வரைக்கும் பாயும்; பணம் இருக்கிறதே அது பாதாளம் வரையிலும் பாயும்; எங்கள் தந்தை பெரியாரின் கொள்கை இருக்கிறதே அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் தாண்டி அதற்கு அப்பாலும் பாயும்’’ என்பார். அது குஜராத்திலும் பாய்ந்திருக்கிறது என்று பெரியாரின் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியை நினைவுபடுத்திப் பேசியதும், கைதட்டல்களால் அந்தத் திடல் அதிர்ந்தது. தொடர்ந்து அவர், அதனால்தான் குஜராத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் தெரிகிறார். தூங்கும் போதும் அவருக்கு ஸ்டாலின் தெரிகிறார். ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினைக் கண்டு கூட இவர்கள் அவ்வளவு பயப்படவில்லை. ஆனால், எங்கள் ஸ்டாலினைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்றுதானே பொருள்?” என்று சொல்லி பலத்த கைதட்டல்களுக்கிடையே தமதுரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிறைவாக குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் கனகராசு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாவட்டக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் நா.தாமோதரன், கோ.புத்தன், இரமாபிரபா ஜோசப், மாவட்டச் செயலாளர் எழிலேந்தி, கடலூர் மாநகரத் தலைவர் தென்.சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வி.அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், கழகப் பேச்சாளர் சு.இராவணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர், வடக்குத்து கிளைச் செயலாளர் இரா.கண்ணன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், நெய்வேலி நகரத் தலைவர் ச.க.இசக்கிமுத்து, மாவட்ட மகளிரணித் தலைவர் செ.முனியம்மாள், தோழர் கோ.வேலு, மாவட்ட ப.க.அமைப்பாளர் சி.தர்மலிங்கம், வடக்குத்து கிளைத் தலைவர் தங்க.பாஸ்கர், பண்ருட்டி ஒன்றியத் தலைவர் இரா.கந்தசாமி, வடலூர் நகர செயலாளர் இரா.குணசேகரன், வடலூர் நகர அமைப்பாளர் நா.முருகன், நெய்வேலி நகர செயலாளர் கு.இரத்தினசபாபதி, பண்ருட்டி நகரத் தலைவர் ந.புலிக்கொடி, பண்ருட்டி நகரச் செயலாளர் கோ.காமராஜ், குறிஞ்சிப்பாடி நகரச் செயலாளர் தா.கனகராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நா.சிவ பாண்டியன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் பா.செந்தில்வேல் மற்றும் கடலூர், விருத்தாச்சலம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், மகளிரணித் தோழர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை இருந்து கண்டு, கேட்டு கருத்துகளை உண்டு மகிழ்ந்து சென்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *