மதுரை, டிச.12 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழ்நாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக பகவத் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி., இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருப்பரங்குன்றத்தில் வலதுசாரி அமைப்புகளுக்கும் காவல்துறை யினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மலை உச்சியில் உள்ள கோயிலில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. வலதுசாரி ஆர்வலர் தாக்கல் செய்த மனுவின் பேரில், மலை உச்சியில் புனித தீபம் ஏற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், பல ஆண்டுகளாக அருகிலுள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நீண்டகால நடைமுறையை மீறுவதாகவும் அரசு அதிகாரிகள் வாதிட்டனர். இந்த சர்ச்சைக்குரிய சூழலில், “தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சியே விரும்பிய பலனைத் தர போதுமானது” என்று பகவத் ஏற்கெனவே கூறியிருந்தார்.
பகவத் கருத்துகளுக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தமிழ்நாட்டில் தீயை மூட்டு வதற்காக வந்துள்ளார். இது தமிழ்நாட்டில் எடுபடாது, தமிழ்நாடு இதை முற்றிலுமாக நிராகரிக்கும்” என்று ஆணித்தரமாகப் பதிலடி கொடுத்தார்.
