திருவோணம், டிச.11- ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் வருகின்ற பிப்ரவரி மாதம் 25,26,27,28 ஆகிய 4 நாட்கள் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் கபடிப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ரூ.1 கோடி மதிப்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது போட்டிகள் தொடர்பான முன்னேற்பாடு கலந்துரையாடல் கூட்டம் ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேனாள் தஞ்சை காவல் உதவி ஆய்வாளர் தவமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் அய்யாத்துரை, மேனாள் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கரசூரியமூர்த்தி, மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், தஞ்சை நகர்மன்ற உறுப்பினர் வீரையன் உள்ளிட்ட ஊர் பஞ்சாயத்தார்கள், கபடி ஆர்வலர்கள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆண்கள். பெண்கள் இரு அணிகளுக்கும் முதல் பரிசாக ரூ 3 லட்சம். இரண்டாவது பரிசாக ரூ. 2 லட்சம், மூன்றாம் பரிசாக 1 லட்சம் (இரண்டு அணிகளுக்கு) வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஒக்கநாடு மேலையூர் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபடிக் கழகத்தினர் செய்து வருகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களை பணி
செய்யவிடாமல் தடுத்தால் புகார் தெரிவிக்கலாம்

சென்னை மாநகராட்சி
சென்னை, டிச.11- பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி அம்பத்தூர் மண்டலத்தில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7.12.2025 அன்று தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வேறு மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வெளி மண்டலத்தில் இருந்து வரும் தூய்மை பணியாளர்களை சிலர் பணி செய்ய விடாமல் தடுப்பதாக சென்னை மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் 1,457 தற்காலிக தூய்மை பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக பணிக்கு வராமல் போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, தூய்மை பணியாளர்கள் சீருடை அணிந்து பணிக்கு வரும் போது 3ஆம் நபர் யாரேனும் தடுக்க முயன்றாலோ, பணியை செய்ய விடாமல் தடுத்தாலோ உடனே 9445190097 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

சென்னை, டிச.11- தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 15ஆம் தேதி முதல் 19.12.2025 தேதி வரை (5 நாட்கள்) காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள். சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் ஈஆர்பி டேலி, ஜிஎஸ்டி. இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள். ஆகியவை பற்றி விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆவது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
