சென்னை, டிச. 11- டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நில அளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பணி நியமன ஆணை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
2025ஆம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப் பணியிடங் களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இணையவழி பட்டா மாறுதல்: இத்துறையின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணையவழி பட்டா மாறுதல் சேவையின் மூலம் 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் வகையில் 61.77 லட்சம் பட்டாக்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் வகையில் 79.25 லட்சம் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் வகைகளைத் தீர்வு செய்ய 60 நாட்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் தீர்வு செய்ய 31 நாட்கள் என இருந்து வந்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்கள் 30 நாட்களிலும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள் 14 நாட்களிலும் தீர்வு செய்யப்படுகிறது.
இலவச வீட்டு மனை: தமிழ்நாட்டில் அரசு நிலங்களில் நீண்டகாலமாக அனுபவம் செய்து வந்த ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் பல்வேறு திட்டத்தின் கீழ் இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 20.41 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலர் நா. முருகானந்தம், வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.சு.பழனிசாமி, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
