தண்டனை விதித்தது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம்
பெண் கொலை வழக்கில், இந்திய வம்சாவளி இந்தியருக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வாங்கேட்டி கடற்கரையில் கார்டிங்லி 24, என்ற பெண், தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேனாள் செவிலியர் ராஜ்விந்தர் சிங் 41, திடீரென அந்த பெண்ணை பல முறை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். மேலும் அந்த பெண்ணின் உடலை கடற்கரையின் மணல் மேடுகளில் பாதியளவு புதைத்தார். நாயை அருகிலுள்ள மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு தப்பிவிட்டார்.
கொலை நடந்த மறுநாள், சிங் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சிங்கை, கண்டுபிடித்துத் தருவோருக்கு குயின்ஸ்லாந்து காவல்துறை 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வெகுமதி வழங்குவதாக அறிவித்தது. அதன் பிறகு, கடந்த 2022 நவம்பரில் டில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு புதுடில்லியில் உள்ள ஒரு குருத்வாராவில் ராஜ்விந்தர் சிங்கை கைது செய்தது. அதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ராஜ்விந்தர் சிங் நாடு கடத்தப்பட்டார்.
இந்த வழக்கு கெய்ர்ன்ஸ் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று மறு விசாரணையின் முடிவில், 8.12.2025 அன்று ராஜ்விந்தர் சிங் குற்றவாளி என நடுவர் குழுவால் ஒருமனதாக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (டிசம்பர் 9) அவர் பிணையில் வெளிவர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார், அதாவது குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, ‘நரகத்தில் அழுகுவாய்’ என்று சத்தமாகக் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் ராஜ்விந்தர் சிங், தனது செயல்களுக்கு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.
