பட்டுக்கோட்டை, டிச. 11- அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிட்ட, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் கைப்பேசி அடங்கிய ஒரு கைப்பையை, அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் சற்றும் தாமதிக்காமல் உரியவர்களிடம் ஒப்படைத்து தங்களது நேர்மையை நிரூபித்துள்ளனர்.
சென்னையிலிருந்து பட்டுக் கோட்டைக்கு வந்த அரசு விரைவுப் பேருந்தில் ஆனந்தி என்பவர் பயணம் செய்தார். பட்டுக்கோட்டையில் அவர் இறங்கியபோது, தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுச் சென்றுவிட்டார்.அந்தப் பையில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் ஒரு கைப்பேசி இருந்தன. பேருந்துப் பணியாளர்கள், பேருந்தினைச் சோதனை செய்தபோது, இந்தக் கைப்பையைப் பார்த்தனர்.அரசு விரைவுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும், கைப்பையில் இருந்த ஆவணங்கள் மூலம் உரியவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர்.
விரைவில், ஆனந்தி குறித்த விவரங்களை அறிந்து அவரைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில், அந்தப் பேருந்து ஊழியர்கள் கைப்பையை ஆனந்தியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
தவறவிட்ட உடைமைகளைத் திரும்ப ஒப்படைத்த அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் நேர்மையைப் பாராட்டி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் இந்த நேர்மையான செயல் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
