பெங்களுரு, டிச. 11- பல நூறு ஆண்டுகளாகத் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சோமேஸ்வர் கோயிலின் அதிரடி முடிவின் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் வளாகத்தில் இனி திருமண விழாக்கள் எதுவும் நடத்தப்படாது என்று கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விவாகரத்து சான்றிதழ்
கேட்ட இணையர்
இந்த திடீர் முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக திருமண நிகழ்விற்கு பெயர் பெற்ற சோமேஸ்வர் கோயில்.
ஆனால், அண்மைக் காலமாக இந்தக் கோயிலில் திருமணம் செய்தவர்கள் தொடர்ந்து திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடித்துக் கொண்டு வருகின்ற்னார்
விவாகரத்து நடைமுறைகளுக்காகத் திருமணத்திற்கான ஆவணங்களை, ‘விவாகரத்துச் சான்றிதழ்’ என்ற பெயரில் கேட்டு கோயில் நிர்வாகத்தை அணுகுவது அதிகரித்துள்ளது.
ராசியில்லாத கோயில்
விவாகரத்து செய்யும் இணையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இந்தக் கோயிலுக்கு ‘ராசியில்லாத கோயில்’ என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இதனால், கோயிலின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் ஏற்படுவதாக நிர்வாகம் கருதியது.
“விவாகரத்துச் சான்றிதழ் கேட்டு
வர வேண்டாம்”
கோயில் நிர்வாகத்தின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “அண்மைக் காலமாக திருமணம் செய்த பலர், விவாகரத்து செய்ய முடிவெடுத்து திருமணத்திற்கான ஆவணங்கள் கேட்டு கோயிலுக்கு வருவதால், இனி கோயிலில் திருமணம் நடத்துவது ரத்து செய்யப்படுகிறது. விவாகரத்துக்காகத் திருமண ஆவணங்களைக் கேட்டு யாரும் இங்கு வர வேண்டாம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
“இந்தக் கோயிலில் திருமணம் செய்தால் விவாகரத்து நிச்சயம் நடக்கிறது” என்ற பொதுமக்களின் பேச்சைக் கட்டுப்படுத்தும் விதமாக, நிர்வாகம் இத்தகைய ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளதாம்!
