ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சியில் ஜனநாயகம் கடைசி கட்டத்துக்கு வந்திருக்கிறது!
பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது!
தமிழ்நாடு அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும்!!
சீர்காழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை!
சீர்காழி, டிச.10 மயிலாடுதுறை மாவட்டம் சார்பில், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 8.12.2025 அன்று மாலை 6 மணியளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி மற்றும் பெரியார் உலகம் நிதியளிப்பு விழா” என்று இரு தலைப்புகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கு. இளமாறன் அனைவரையும் வரவேற்று அமர்ந்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மேடை நிகழ்வை நிர்வாகம் செய்தார். மற்றொரு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை தனித்தனியாக எடுத்துக் காட்டி அதன் தலைப்புகளையும், அதன் சிறப்புகளையும் சுருக்கமாகச் சொல்லி, வாங்கிப் பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
தொடர்ந்து தி.மு.க. பொறுப்பாளர்களான மாவட்டச் செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், உயர்நிலை செயற்குழு உறுப்பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், தலைமைச் செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம், தி.மு.க.சீர்காழி நகரச் செயலாளர் தம்பி ம.சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றியச் செயலாளர் எ.ஜி.ஜே.பிரபாகரன், சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பஞ்சு.குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜ்குமார், மு.பன்னீர்செல்வம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணா, த.பெ.தி.க.மண்டலச் செயலாளர் பெரியார் செல்வன், விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். திராவிடர் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக.பொன்முடி முன்னிலை வகிக்க, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் இளமாறன் தொடக்க உரையாற்றினார்.
கழகத் தலைவர் 9 மணிக்கு மேல் நிகழ்விடத்திற்கு தனது கருஞ்சட்டை பிரச்சாரப் பயணப் படையுடன் வருகை தந்தார். உற்சாகமடைந்த கழகத் தோழர்கள் எழுச்சிகரமான கொள்கை முழக்கங்களுடன் தலை வருக்கு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ‘‘பெரியார் உலக”த்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை தோழர் கி.தளபதிராஜ் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெயர்களை வாசிக்க வாசிக்க உரியவர்கள் காசோலைகளுடன் வந்து கழகத் தலைவரிடம் கொடுத்து மகிழ்ந்தனர். நிறைவாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சார்பில் கழகத் தலைவர் மற்றும் முன்னிலை ஏற்ற அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் ஆடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் உரை
நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையின் தொடக்கத்தில் ‘பெரியார் உலகம்’ அமைய வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல், சமூகம், பொருளியல் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த வரலாறு பெரியார் உலகத்தில் இடம் பெறும் என்று விவரித்தார். அதற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சித் தோழர்களுக்கும், நிதியைத் திரட்டிய திராவிடர் கழகத் தோழர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு, “காலத்தின் தேவைக்கேற்ப பொழியும் மழை யைப் போன்றதுதான் பெரியாரின் தொண்டு” என்று சிந்தனையைத் தூண்டும் உவமையுடன், பெரியாரின் தொண்டு பற்றி குறிப்பிட்டார். மேலும் அவர், “அத னால்தான் தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியை என்ன செய்தாலும் அசைக்க முடியவில்லையே என்று சிலர் எரிச்சல் அடைகிறார்கள் என்று கொள்கை எதிரிகளை அடையாளம் காட்டினார். அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வி அடைவதை சுட்டிக்காட்ட, ‘‘போன தேர்தலுக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பிரச்சாரம் செய்ய ஓ…டி வந்தார்; நா…டி வந்தார்; தே…டி வந்தார்; ‘ரோட் ஷோ’ போனார்; ‘காட் ஷோ’ காட்டினார்; ராமேஸ்வரத்தில் தவம் இருந்தார். இவ்வளவு செய்தும், அந்தத் தேர்தலில் தான் தி.மு.க.கூட்டணிக் கட்சிகள் 40–க்கு 40 வெற்றி பெற்றார்கள்” என்று எடுத்துக்காட்டு கொடுத்துவிட்டு, “இதுதான் திராவிடம் – ‘திராவிட மாடல்’ அரசு” என்றார் பலத்த கைதட்டலுக்கிடையே அழுத்தந்திருத்தமாக.
தொடர்ந்து, நேரடியாக நிதி நெருக்கடி, ஆளுநர் மூலம் நிர்வாக நெருக்கடி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருவதைக் குறிப்பிட்டு, ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி” என்று சொல்லி மனதில் பதிய வைத்தார். மேலும் அவர், தமிழ்நாடு பணியாதது மட்டுமல்ல முதுகெலும்புடன் ஆட்சி நடத்தி வருவதுடன், ‘உங்களையும் தலை குனிய விடமாட்டேன். தமிழ்நாட்டையும் தலை குனிய விடமாட்டேன்’ என்று முதலமைச்சர் துணிச்சலுடன் சொல்லி வருவதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். திருப்பரங்குன்றம் பற்றியும் கோடிட்டுக் காட்டினார்.
தமிழ்நாடு எச்சரிக்கையாக இருந்து சூழ்ச்சிகளையெல்லாம் முறியடிக்கும்!
தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் போது, “உங்கள் வாக்குரிமையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், எதிர்காலத்தில் உங்கள் குடியுரிமையே பறிபோகும் ஆபத்து இருக்கிறது” என்று எச்சரித்தார். இந்தக் காரணங்களால் ஜனநாயகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட, “இந்தியாவில் ஜனநாயகம் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது; ஒன்றிய அரசில் பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது” என்று கூறிவிட்டு மக்கள் மனங்களைப் படித்தவர் போல், ”கவலைப்படாதீர்கள் தமிழ்நாடு எச்சரிக்கையாக இருந்து இந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்கும்” என்றார். ஜனநாயகம் பற்றி சொன்ன செய்தி இன்னமும் எளிமையாகவும், ஆழமாகவும் மக்களுக்கு புரிய வேண்டும்; எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற அக்கரையில், “இறந்து போன பிணத்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்து விடுங்கள். மூடப்போகிறேன் என்று சுடுகாட்டில் சொல்வது போல் இருக்கிறது, இன்றைய ஜனநாயகத்தின் நிலை” என்று உவமை சொல்லி பளிச்சென்று விளங்கச் செய்தார்.
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு
நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!
காந்தியார் படுகொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போது இந்தியாவின் நிலையையும், தமிழ்நாட்டின் நிலையையும் எடுத்துக் காட்டி, அந்தப் பிரச்சினைகளை பெரியார் எப்படிக் கையாண்டார் என்பதை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரை, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் முதலமைச்சர் ஓமந்தூரார் போன்றவர்களின் நிலைப்பாடு ஆகியவற்றை தரவுகளுடன் மக்களுக்கு மாலை நேரக் கல்லூரியில் அரசியல் மற்றும் சமூகப் பாடம் நடத்துவது போல் கற்றுக்கொடுத்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போது, இப்போது, “இதுதன் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டி வருவது போல், அன்றைக்கும், “மதவெறியை மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!” என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மதச்சார்பின்மையை தொடரச் செய்ததை நினைவுபடுத்தி, ”திராவிடர் கழகத்தின் உணர்வு என்றைக்கும் மாறாது” என்று மக்களுக்கு வாக்குறுதி தந்தார். இறுதியாக, “இது வெறும் தேர்தல் தானே என்று கருதாதீர்கள். அந்தக் கட்சியா? இந்தக் கட்சியா? என்பது பிரச்சினை அல்ல. இது நமது மானத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறுகின்ற தேர்தல்! அறிவை வளர்த்துக் கொள்வதற்காக நடைபெறுகின்ற தேர்தல்! ஆகவே, மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
தி.மு.க. நகரச் செயலாளர் தம்பி ம.சுப்பராயன், தி.மு.க. சீர்காழி ஒன்றியச் செயலாளர்கள் பிரபாகரன், பிஞ்சு குமார், மாவட்ட துணைத் தலைவர் ஞான. வள்ளுவன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள், ஏராளமான பொதுமக்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள் பொறுப்பாளர் என ஏராளமானோர் நிகழ்ச்சி முடியும் இருந்து கருத்துகளை கேட்டு தெளிவு பெற்றுச் சென்றனர்.
