மன்னார்குடி,மே4 – திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த காடுவாக்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் ஹரிஷ் (வயது17). விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோட்டூர் அடுத்த புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கோயிலின் பின்புறம் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஹரிஷ் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீரில் நின்றபடி வேலை பார்த்து கொண் டிருந்த ஹரிஷ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட ஹரிஷ் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இது குறித்து விக்கிரபாண்டியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.