புதுடில்லி, மே 4- ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார். ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் சட்டவிரோதம் என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் செய்தி வெளியிட்டாளர்கள், ஓ.டி.டி. நிறுவனங்களும் விளம்பரம் வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இணையதளங்கள் மற்றுமின்றி காட்சி, அச்சு ஊடகங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதால் ஒன்றிய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் சமூக, நிதி பிரச்சினைகளையும் ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிப்புற விளம்பரங்களான சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பர தட்டிகள் மூலம் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.