(10.12.2025 நாளிட்ட ‘துக்ளக்’கின்
பதிலுக்குப் பதிலடிகள்)
கேள்வி 1: ‘கர்ம விதி’ என்றால் என்ன?
பதில்: தமிழகம் – தி.மு.க. ஆட்சியில் சிக்கியிருப்பது.
நமது பதிலடி: சிறீரங்கம் கோயில் பற்றி எரிந்ததும் (1959 மூலவர் உட்பட) தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கின் போது பந்தல் தீப் பற்றி 48 பேர் பரிதாபமாக மரணம் அடைந்ததும் 86 பேர் தீக்காயங்கள் அடைந்ததும் (7.6.2025) சிறீரங்கம் கோயில் திருமண மண்டபத்தில் (23.1.1997) ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் குருநாஜன் உள்பட 64 பேர் கருகி செத்ததும் கர்ம விதிதானா?
– – – – –
கேள்வி 2: அந்தணர்களுக்குரிய அனுஷ்டானங்கள் அனைத்தையும் கடைப்பிடிக்கிறீர்களா?
பதில்: அனுசரிக்க முடிந்ததை ஆழ்ந்து அனுசரிக்கிறேன். முடியாததை, முடியவில்லையே என்று வருந்துகிறேன்.
நமது பதிலடி: அது என்ன அந்தணர்கள்? பார்ப்பனர்கள் அந்தணர்களா? அந்தணர் என்போர் அறவோர் ஆயிற்றே! பிறப்பிலேயே பேதம் பேசும் பார்ப்பனர்கள் எப்படி அந்தணர்கள் ஆவார்கள்? அனுசரிக்க முடிந்ததை ஆழ்ந்து ஆழ்நது அனுசரிக்கிறாராம் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்! அனுசரிக்க முடியாததற்கு வருந்துகிறாராம்! அடேயப்பா எத்தனை எஸ்கேப்? பலித்தவரை பார்ப்பனீயம் என்பது இதுதானோ!
– – – – –
கேள்வி 3: யோகி ஆதித்யநாத் போன்ற முதல்வர் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் பெற்றால்?
பதில்: அதற்கு தமிழகம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!
நமது பதிலடி: தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்கு உ.பி.முதல் அமைச்சர் செல்லுவதாக இருந்தால் முதல் நாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோப்பு, வாசனைப் பவுடர் அளிக்கும் ஓர் அரசு கொடுத்து வைத்த அரசா?- – – – –
கேள்வி 4: மனச்சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: துக்ளக்கைப் படிக்க வேண்டும். பழைய துக்ளக் இதழ்களையும் திரும்பப் படிக்க வேண்டும்.
நமது பதிலடி: துக்ளக் 26.10.2016 பக்கம் 23, துக்ளக் 1.6.1981 பக்கம் 32 இரண்டையும் படித்தோம்.
– – – – –
கேள்வி 5: காலம் போகிற போக்கைப் பார்த்தால் வரவர வயதுக்கோ, நல்ல பண்புக்கோ மரியாதை இருக்காது போல் தெரிகிறதே?
பதில்: கலியுகத்தில் நற்பிறப்புக்கும், நற்குணத் துக்கும், நல்லவர்களுக்கும் மரியாதை குறையும். அந்தஸ்து, அதிகாரம் உள்ளவர்களுக்குத்தான் மவுசு இருக்கும் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளது ஸ்ரீமத் பாகவதம்.
நமது பதிலடி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மடத்துக்கு வந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ற பெண்மணியைக் கையைப் பிடித்து இழுத்ததும், குருமூர்த்தி அய்யர்வாள் ஜெயேந்திரருக்கு வக்காலத்துப் போட்டு எழுதியதும் இதற்குள் அடக்கமா?
– – – – –
கேள்வி 6: ‘வன்முறை இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாதா?’ என திருமாவளவன் ஆதங்கப்பட்டுள்ளாரே?
பதில்: எங்களைப் போல் வன்முறையைப் பேச்சுடன் நிறுத்துக் கொள்ளுங்கள், படம் பிடித்துக் காட்டாதீர்கள் என்கிறார் திருமாவளவன்.
நமது பதிலடி: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி (தாம்பிராஸ்) (24, 25.12.2005) அரிவாளைத் தூக்கிக் காட்டி வன்முறை வெறியாட்டம் போட்டதெல்லாம் மறந்து போச்சா?
2.6.1953 நாளிட்ட ‘கல்கி’ தலையங்கம் பற்றி குருமூர்த்தி அய்யர்வாள் அறிவாரா?
“முக்கியமாக இளைஞர் ஒவ்வொருவரும் “வஸ்தாத்” ஆகப் பயில வேண்டும்.”
“மூளையை வறட்டிக் கொண்டு படித்துப் பரீட்சையில் முதன்மையாகத் தேறுவதினால் மட்டும்என்ன பயன்? பெண்டாட்டி பிள்ளைகளைக் கயவரிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள், எத்தனைப் படித்து, எத்தனை கெட்டிக்காரர்களாக இருந்துதான் என்ன பிரயோஜனம்?”
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு” “வீரன் ஒருமுறை சாவான், கோழை பலமுறை சாவான்” என்று படித்ததெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இருந்தால் இனி வாழ்க்கை நடத்த முடியாது”. (‘கல்கி’, தலையங்கம், 2.6.1953)
மக்கள் போற்றும் காந்தியைக் கொன்ற கூட்டம் வன்முறையைப் பற்றிப் பேசலாமா?
– – – – –
கேள்வி 7: Gen Z தலைமுறையினர் செய்ய வேண்டியது எது? இளைஞர்கள் செய்ய வேண்டியது எது?
பதில்: படிப்பு தவிர, விவேகானந்தர், பாரதியார் போன்றவர்களின் படைப்புகளைப் படிக்க வேண்டும். அறிவு, உடல், மனத்திற்கு நற்பயிற்சி தரவேண்டும். சினிமா பார்க்கலாம், ஆனால் நடிகர்களுக்கு ரசிகர்கள் ஆகக் கூடாது. ஆசிரியர், பெற்றோர், பெரியோரை மதிக்க வேண்டும். ஏதாவது பரோபகாரம் செய்ய வேண்டும். விளையாட வேண்டும். ஆனால் வாழ்க்கையை விளையாட்டாக ஆக்கக்கூடாது.
நமது பதிலடி: சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி யென்று சாஸ்திரம் சொல்லிடுமாயின் சாத்திரமன்று சதி எனக் கண்டோம் என்ற பாரதியின் படைப்பைப் படிக்கலாமா?
“வங்காளத்தில் ஒரு பழைய கூற்று உண்டு. நல்ல பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால், பின்னர் அந்தப் பாம்பே தனது விஷத்தை கடிப்பட்டவர்களிடமிருந்து திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன் பிழைத்துக் கொள்வான் என்பதே அந்த நம்பிக்கை. அதேபோன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள் தான் செலுத்திய விஷத்தைத் திரும்ப எடுக்க வேண்டும்.”
(திருச்சி சிறீ ராமகிருஷ்ண தபோவனம் 1953இல் வெளியிட்டுள்ள The Man making message of Vivekananda for the use of College என்ற விவேகானந்தரின் கூற்றைப் படிக்கலாமா?
‘துக்ளக்’ குருமூர்த்தி அடிக்கும் பந்து திருப்பி வந்து தன்னையே பதம் பார்க்கும் என்பதை அறியட்டும்!
