மதுரை முதலீட்டார்கள் மாநாடு ரூ. 36,660 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச. 9– மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் கூட்டரங்கில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர் மாநாடு நேற்று முன்தினம் (7.12.2025) காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை வகித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அய்க்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்துள்ளோம். ‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி – மாவட்டம்தோறும் பரவலான வளர்ச்சி’ என்ற அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.11.83 லட்சம்கோடி முதலீடுகள் மூலம் 34 லட்சம்பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்ட திட்டங்களில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 80 சதவீதத்துக்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் கொள்கைகள், மனிதவளத் திறன், உள்கட்டமைப்புகள், சட்டம் – ஒழுங்கு, நிர்வாகத் திறன், நீண்டகால நிலைத்தன்மை போன்றவை நன்றாக இருப்பதால், முதலீட்டாளர்களின் மனதில் தமிழ்நாடு நிறைந்துள்ளது. மதுரைக்கு ‘தூங்கா நகரம்’ என்ற பெயர் உண்டு. அதை அப்படி சொல்வதைவிட எப்போதும் விழிப்புடன் இருக்கும் நகரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் வளர்த்த நகரம்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், கோயில் நகரம் என்ற பெயருடன் தொழில்நகரமாகவும் மதுரை புகழ்பெற வேண்டும். டிவிஎஸ் சிறீசக்ரா, தியாகராஜர் மில்ஸ், மதுரா கோட்ஸ், ஹெச்சிஎல் என பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில் திட்டங்களை இங்கு நிறுவி உள்ளன. மருத்துவத் துறையில் வேலம்மாள், மீனாட்சி மிஷன், அப்போலோ போன்ற நிறுவனங்கள் சாதனை புரிவதுடன் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

தொழிற்பூங்கா

தற்போது மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ குழுமம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதன்மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, அதிக பெண்கள் இதில் பயன்பெறுவார்கள்.

‘தமிழ்நாடு வளர்கிறது’

‘தமிழ்நாடு வளர்கிறது’ மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகள் பெற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹுண்டாய் நிறுவனம் கப்பல்கட்டுமானத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

கப்பல் கட்டுமானத் துறையில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தும் இந்த முதலீடு, மற்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.பொறியியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எஸ்எஃப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான விரிவாக்கத் திட்டத்தை தேனியில் மேற்கொள்ள உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில்…

தென் மாவட்டங்களில் ‘பயோ எனர்ஜி’ துறையில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.36,660 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார். மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், டிஆர்பி.ராஜா, சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1.78 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *