சென்னை, டிச.9– பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக அரசு கடன்களை வழங்கி வருகிறது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள அணுகுவதற்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் அளவில் உதவியாக இருந்து வருகிறது.
பெண்களுக்கு
மகிழ்ச்சியான அறிவிப்பு
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவிகள் வழங்குவதன் மூலம், பெண்கள் தொழில் தொடங்க வாய்ப்பு உருவாக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாக கடன் பெற முடியும். அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகள் தடுப்பு சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டம் நேற்று முன்தினம் (7.12.2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் சட்டப் பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதில் உள்ள விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையை செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
இந்தப் பதிவுகள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் கடன் நடவடிக்கைகளை சிறப்பாகக் கண்காணிப்பதை உறுதிசெய்யவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ரூ.4 லட்சம் வரை கடன்களுக்கு பொதுமக்களிடம் பிணையம் எதுவும் பெறக் கூடாது. அதோடு, ரூ.10 லட்சம் வரை 10 லட்சம் வரை கடன்களுக்கு மகளிர் சுய குழுக்களிடம் இருந்து பிணையம் எதுவும் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் பெறுவது மிகவும் எளிதாகி மாறிவிட்டது.
மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெறுவது எப்படி?
மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற, அந்த குழு 6 மாதங்கள செயல்பாட்டில் இருக்க வேண்டும். 18 முதல் 70 வயதுடைய பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்களில் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இது குழுவின் செயல்பாட்டின் அடிப் படையில் வங்கிக்கு கடன் தகுதியை உறுதி செய்கிறது.
மேலும், வியாபாரம், பிற தொழில் தொடங்குவதற்கு பெண்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாகக் கடன் பெற முடியும். சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்த பின்னர், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமித்து, அதற்கான வட்டியை பெற்றுக் கொள்ளலாம். அவசர காலத்தில் பணம் தேவைப்பட்டால், சேமித்த பணத்தில் இருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம். இதில் வட்டியும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
