சென்னை, டிச,9– வாகனங் களுக்கான எப்.சி. கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாட்டில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித் திருந்தனர்.
இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள், சமையல் எரிவாயு (கியாஸ்) உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட் களின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அளித்த உறுதியைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளனர்.
ஒன்றிய, மாநில அரசுகள் லாரிகளுக்கான எப்.சி. கட்டணத்தை சமீபத்தில் அதிரடியாக உயர்த்தின. முன்னதாக ரூ.850 ஆக இருந்த இந்தக் கட்டணம் தற்போது ரூ.33,040 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமை யாளர்களுக்கு, இந்த எப்.சி. கட்டண உயர்வு மேலும் சுமையாக அமைந்தது.
இந்தக் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் டிசம்பர் 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, எப்.சி. கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர் உறுதியளித்தார்.
அமைச்சரின் இந்த உறுதி யளிப்பைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் லாரி உரிமையாளர்கள் தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழ் நாட்டில் லாரிகள் வழக்கம் போல் இயக்கப்படும்; அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு அபாயம் தற்போது நீங்கியுள்ளது.
