சென்னை, டிச.9– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த மய்யங்கள், கிராமப்புற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியறிவு பெறவும், அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்கவும், கல்வி மற்றும் இதர பயனுள்ள தகவல்களை வழங்கவும் ஒரு முக்கிய களமாகச் செயல்படும். மேலும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த மய்யங்களின் அடிப்படை நோக்கம் ஆகும்.
இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 126 கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட 126 கிராமங்களில் அமைக்கப்படவுள்ள இந்த அறிவுசார் மய்யங்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருக்கும்.
இவற்றில் சில முக்கியமான வசதிகள்: விவசாயிகள், சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி மய்யம், கணினி அறை, நூலக அறை, நிர்வாக அலுவலகம், ஆலோசனை வழங்கும் அறை, கழிப்பறைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த அறிவுசார் மய்யங்கள் மூலம், கிராமப்புற மக்கள் தேவையான தகவல்களைப் பெற்று, அரசு நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
