இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக திராவிட மாடல் ஆட்சி குறுக்கு வழியில் வரவில்லை. நேர்மையாக தேர்தலை சந்தித்து மக்கள் வழங்கிய அதிகாரத்தில் திராவிடம் மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அசாம், மகாராட்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் ஒன்றிய பிஜேபி அரசு நேர்மையாக தேர்தலை சந்திக்காது குறுக்கு வழியில் இரவோடு இரவாக ஆட்களை தூக்கி ஆட்சி அமைத்து வருகிறது.
அதற்கான வேலையை அவர்கள் நியமித்த ஆளுநர்கள் அவர்களின் முகவர்கள் போல செயல்படுகிறார்கள். ஆளுநர்கள் ஸநாதனம் பேசுகிறார்கள். பிஜேபி அல்லாத கட்சிகளின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்துகளை பேசுகிறார்கள். அவர்கள் பேசலாம். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருந்து கொண்டு சத்சங்கம் அமைத்து மதரீதிய ஸநாதன பெருமைகளை தாராளமாக பேசிக்கொள்ளட்டும்.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு சகல வசதிகளையும் அனுபவித்து கொண்டு ஆளுநர்கள் நடப்பது அரசியல் சட்ட பிரிவு 159 க்கு முற்றிலும் எதிரானது. மக்கள் அதிகாரத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனுக்காக இயற்றி அனுப்புகின்ற மசோதாக்களையும் தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான் ஆளுநரின் வேலை.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு கொடுங்கள் என்று தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் கருதி மக்களின் பிரச்சினைகளை மனதில் கொண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அதை அனுப்ப ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை பிரித்து படித்துப் பார்த்து கருத்து சொல்வது ஆளுநரின் வேலை அல்ல.
அவரின் வேலை ஒரு தபால்காரரின் வேலை போன்றது தான். அரசியல் சட்டப்பிரிவு 159 இன் படி அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று பிரமாணம் எடுத்துக்கொண்டு மனதில் தோன்றியதையும் ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா, முக்திஆத்மா தனக்கு சொல்லியது என்று கூறி செயல்படுவது ஆளுநரின் வேலை அல்ல.
அறிவு சொல்லுகின்ற படி ஆட்சி நடத்தும் திமுக திராவிட இயக்கம் அடித்தட்டு அமைத்து வகுத்ததில் அமைந்தது. டில்லி சர்க்கார் முகவர் போல செயல்படுவது ஆளுநரின் வேலை அல்ல. இந்திய இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகிய அய்ந்து அம்சங்களை காப்பேன் என்று தலைமை நீதிபதி முன்பு பிரமாணம் எடுத்துக்கொண்டு நேர்மையாக செயல்படுவது மட்டுமே ஆளுநரின் வேலை. மக்கள் வரிப்பணத்தில் திட்டம் போட்டு சேத்ராடனம் ஆலய வழிபாடுகள் செல்வது ஆளுநரின் வேலை அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க வேண்டும் என்று தானாகவோ திட்டமிட்டோ, பிறர் தூண்டுதல் சொல்லியோ குறுக்கு வழியில் செயல்படுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது; இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது. அது ஆளுநரின் வேலை அல்ல. இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மதுரையில் பேசியதை ஆள் தூக்கிக்கு மறுபெயர் ஆளுநர்கள் என்ற தலைப்பில் முழுமையாக Periyar Vision OTT-இல் காணலாம்..
– எம்..செல்வசேகரன், ராஜபாளையம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
