சென்னை, டிச. 9– தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் 6 மாதங்களில் நிரப்ப வேண்டுமென ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் வழக்குரைஞர் கே.பாலு கடந்த 2022இல் தாக்கல் செய்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டுபிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்ட பின்னரும் அந்த பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
இது அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுக்கு எதிரானது. எனவே ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்ப ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கிளைகளை மாநில அளவில் அல்லது மண்டல அளவில் புதிதாக அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி
எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் வாதிடும்போது, “தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்டனர். துணைத் தலைவர் உள்ளிட்ட இதர இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என்றார்.
அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிரப்பப்படாமல் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் 6 மாத காலத்துக்குள் நிரப்பவேண்டும். ஒருவேளை அதற்குள் நிரப்பாவிட்டால் இந்தவழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு
7.35 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்
கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, டிச. 9– காவிரியில் தமிழ்நாட்டுக்கு டிசம்பரில் வழங்க வேண்டிய 7.35 டிஎம்சி நீரை திறக்க கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று (8.12.2025) டில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி நீர் தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும் அதில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் பேசுகையில், ‘‘தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4282 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 2986 கன அடி நீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.
காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி டிசம்பரில் கருநாடகா தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும். அந்த நீரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் கருநாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும்”என வலியுறுத்தினார்.
7.35 டிஎம்சி நீர்
இதற்கு கருநாடக நீர்வளத்துறை அதிகாரிகள், “தற்போது காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே நிகழாண்டில் உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டிலும் கூடுதலாகவே தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் இறுதி வரை 158 டிஎம்சி நீர் திறந்து விட்டிருக்க வேண்டிய நிலையில், கருநாடக அரசு தமிழ்நாட்டுக்கு 315.76 டிஎம்சி நீரை திறந்துவிட்டுள்ளது” என்றனர்.
இதனை ஏற்ற ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், “டிசம்பரில் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 7.35 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது
காவலரின் கையைக் கடித்த
த.வெ.க. தொண்டர்!
தருமபுரி, டிச.9– தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, த.வெ.க. தொண்டர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை காவலரின் கையைக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய ‘மனமகிழ் மன்றம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் 7.12.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான காட்சிப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல அரசியல் கட்சி தலைவர்களும் கூறிவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
