தமிழ்நாடு அயோத்தி ஆக வேண்டுமா?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அம்பேத்கரின் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, பாபர் மசூதியை இடித்த சங்பரிவார், பிஜேபி கும்பல், வெட்கம் கெட்ட முறையில் அவரது நினைவு நாளில், நாடகம் ஆடுகிறது.

‘‘அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நமக்குப் பாடம்’’ – என்று பிரதமர் மோடி செய்தி வெளியிடுகிறார்.

தமிழ்நாடு பிஜேபி தலைவர ்நயினார் நாகேந்திரன் என்ன சொல்லுகிறார்?

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்  செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:-

‘‘தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது, தமிழ்நாட்டில் மதவாத அரசியல் எடுபடாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். நான் கேட்கிறேன், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்து, அய்ரோப்பாவில் இல்லையே. அயோத்தி போல தமிழ்நாடு மாறுவதில் எந்தத் தவறும் இல்லை.

நம் அனைவருக்கும் ராமரின் ஆட்சியை பற்றி தெரியும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி, ராமரின் ஆட்சியை தரும்’’ என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இதன் பொருள் என்ன? 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை அயோத்தியில் சங்பரிவார்க் கும்பல் இடித்து நொறுக்கியதுபோல, தமிழ்நாட்டிலும் அந்த வேலையைச் செய்யப் போகிறார்களா?

‘ராமன் கோயிலை இடித்துதான் பாபர் மசூதியைக் கட்டினார்’ என்று கதை அளந்தது இந்தக் கூட்டம்! ்அதற்கான ஆதாரத்தைத் தர முடிந்ததா? அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுவதில் கோயபல்சை விஞ்சிய கூட்டம்தானே இந்த சங்பரிவார்க் கும்பல் கூட்டம்.

பாபரைப் பற்றி அவதூறு கிளப்பும் இந்தக் கூட்டம், பாபரின் உண்மையான வரலாற்றை அறிவார்களா?

பாபர் எழுதிய உயிலைப் படித்தவர்கள் ‘ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதியைக் கட்டினார்’ என்ற அபாண்டப் பழியைச் சுமத்தும் அளவுக்குக் கல் நெஞ்சக்காரர்களாக இருக்க மாட்டார்கள்.

பாபர் தனது உயிலில் மகன் ஹுமாயூனுக்குக் கூறுகிறார்:

(1) உன்னைப் போன்றோரை மதத் துவேஷம் பாதித்து விடக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுப்பது அவசியம்.

(2) எந்த மதவழிபாட்டுத்தலங்களையும் அழிக்காதே!

(3) வன்முறை வாளால் அல்லாமல் – அன்பென்னும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமைப் பரவச் செய்ய முடியும்.

இப்படி உயில் எழுதி வைத்த பண்பாளர் பாபர் தான் ‘ராமன் கோயிலை இடித்து மசூதியைக் கட்டினார்’ என்று அபாண்டமாகப் பழிதூற்றி, ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான சங்பரிவார்கள் கூடி இடித்து முடித்தனர் பாபர் மசூதியை!

எல்.கே. அத்வானி போன்றவர்கள் தலைமை தாங்கி அந்தக் கேவலமான காரியத்தைச் செய்தார்கள்.  அத்வானியின் பாதுகாவலராக இருந்த அஞ்சுகுப்தா அய்.பி.எஸ். லிபரான் ஆணையத்தின்முன் ‘‘அத்வானி முன்னின்று தான் கரசேவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பின்போது வழி காட்டினார்!’’ என்று கூறினார்.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால்,இந்த மாபெரும் வன்முறையை நிகழ்த்தியவர்களுள் ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை.

இந்தியாவின் நீதி முறை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?

இன்னும் ‘கடைந்தெடுத்த வெட்கக் கேட்டுக்குப் பிறந்த வெட்கக் கேடு’ என்னவென்றால், பாபர் மசூதி இடிப்பை முன்னின்று நடத்திய பிஜேபியின் பெரிய பெரிய தலைவர்கள் ஒன்றிய அமைச்சரவையில் பெரிய பெரிய பொறுப்புகளில் அமர்ந்தனர்.

1949ஆம் ஆண்டு பாபர் மசூதியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஒரு ராமன் சிலையை உள்ளே வைத்தனர்.

எத்தகைய திருட்டுத்தனம் –போக்கிரித்தனம் – வன்முறைக் குணம் இது!

இந்த அயோத்தி முறை தமிழ்நாட்டில் வந்தால் என்ன தவறு என்று,கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவதை என்னவென்று சொல்லுவது!

இவ்வளவுக்கும் அண்ணாவின் பெயரைத் தாங்கிய அ.தி.மு.க.வில் இருந்தவர் இவர். இராமாயணத்தைப் பற்றியும், ராமனைப் பற்றியும் அண்ணா எழுதாததா – பேசாததா? அவற்றில் ஒரு குன்றின் மணி அளவு அறிவு நாணயத்தோடு தெரிந்திருந்தால், இப்படியெல்லாம் சொல்ல மனம் வருமா?

அப்படியென்றால் அப்பொழுது ஏமாற்றியவர்கள் – இப்பொழுது இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல வேடம் போடுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராமன் ஆட்சியைக் கொண்டு வருவார்களாம்! ராமன் ஆட்சி என்பது வருணா சிரமத்தைக் காக்கும் ஆட்சிதானே!

சூத்திரன் தவம் செய்யக் கூடாது என்று கூறி, தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றவன் தானே ராமன்.

கர்ப்பவாதியான தன் மனைவியை கொடும் மிருங்கள்வாழும் காட்டில் கொண்டு போய் விட்டு வந்த இரக்கமற்ற பேர்வழி தானே ராமன்.

‘மதவாத அரசியல் இங்கு எடுபடாது’ என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கனிமொழி எம்.பி.யும் கூறியதில் என்ன குற்றம்?

1971ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டு ஊர்வலத்தில் ராமனை அவமானப்படுத்தி  விட்டனர் என்று தி.மு.க.வுக்கு எதிராக தமிழ்நாட்டின் சந்து பொந்தெல்லாம் கோயில் கதவு அளவுக்குச் சுவரொட்டி ஒட்டியும், பிரச்சார ஊது குழல்களை முழக்கியும் அடேயப்பா… எவ்வளவு அவதூறு பிரச்சார அடை மழையை ‘சோ!’ என்று கொட்டினர்.

தேர்தல் முடிவு என்னாயிற்று?

இதுவரை தி.மு.க. மட்டுமல்ல; எந்தக் கட்சியும், எந்தத் தேர்தலிலும் பெற்றிராத அளவுக்கு 184 இடத்தில் தி.மு.க. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதே!

இதுதான் தமிழ்நாடு! ‘மதவாதம் இங்கு எடுபடாது’ என்பதற்கு எடுத்துக்காட்டு! விபீஷணர்கள் இராமாயண காலத்திலும் இருந்தனர் – இப்பொழுதும் இருக்கின்றனர்.

எனக்குள்ள குறையெல்லாம்  தமிழர் சமுதாயத்தில்விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதே!’’ (‘விடுதலை’ 17.9.1969 மலர்) என்று தந்தை பெரியார் கூறியதுதான் நிைனவிற்கு வருகிறது!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *