‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின்’ இரண்டாம் நாளான 09.12.1973-ஆம் தேதி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் :
நமது ஆட்சி கடவுள், மத நடவடிக்கைகள் சம்பந்த மற்ற மதச்சார்பற்ற (Secular State) ஆட்சி என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும், மக்கள் எல்லோரும் மதப்படியும் ஜாதிப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் தவிர்த்த மற்றவர்கள் யாவரும் பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாஸ்திகர்கள் உள்பட ஹிந்துமதஸ்தர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹிந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும், அவைகளில் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்); மற்றொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றும், ‘சூத்திரன்’ என்றால் நாலாவது ஜாதி ஆவான் என்பதோடு, அவன் பார்ப்பானுடைய (“பிராமண” னுடைய) தாசி மகனாவான் என்று ‘இந்து லா’ என்னும் சட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ‘ஹிந்து லா’வை அங்கீகரிப்பதோடு, மதச் சுதந்திர உரிமை என்னும் பேரால், அரசியல் சட்டத்தில் உள்ள 25, 26ஆவது சரத்துகளைக் காட்டி உச்சநீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும் மத விசயங்களில் அரசு தலையிட்டு ஜாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களை செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது, பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ மக்களாகிய நம் மக்களின் இழிவினை என்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால், அதனை மாற்றி நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களின்றி, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழர் சமுதாயத்தின் சார்பாக ஒன்றிய அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
‘‘மதச்சுதந்திர உரிமைப் பிரிவுகள் என்றுள்ள 25, 26ஆவது அரசியல் சட்ட ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும்; ஜாதி ஒழிப்புக்கு வழிவகை செய்யவும், மதச்சார்பின்மையை உண்மையாக்கும் வகையிலும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
சோசலிசத்தைக் கொள்கையாகக் கொண்ட ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான ஆட்சியான படியால், மதச் சுதந்திரம் என்ற பெயரால் மனித சமத் துவம், சுதந்திரம் பறிபோகக் கூடாது என்று இம்மாநாடு உறுதியான கருத்துக் கொண்டு இருக்கிறது’’ என்று ஒரு தீர்மானமும்,
‘‘ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்படவேண்டும். நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்யமுடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள “தீண்டாமை” (“Untouchability”) என்பதற்குப் பதிலாக “ஜாதி” (“Caste”) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப் படுத்துவதாக அமைய வேண்டும்’’ என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘‘தமிழர்களை நாலாம் ஜாதியாக்குகிற கடவுள் களையும் அதனை உறுதிப்படுத்தும் மதத்தினையும், பிரச்சாரம் செய்கின்ற பத்திரிகைகளையும் தமிழ்ப் பெருமக்கள் பகிஷ்கரிக்க வேண்டும்’’ என்று மற்றுமொரு தீர்மானமும் கோரியது.
52 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் நடத்திய இந்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது.
