கோவை, டிச. 8– பல்வேறு வகையான வாகனங்கள், இயந்திரங்களுக்கு அடிப்படை அதன் உதிரிப் பாகங்கள். இந்த உதிரிப் பாகங்கள் வார்ப்பட முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தித் தொழில் துறையும் வார்ப்பட உற்பத்தி நிறுவனங்களை நம்பியே உள்ளன.
உலோகத்தை உருக்கி, உதிரிப் பாகங்களுக்குத் தேவையான (சிக்லான) வடிவம் கொண்ட ஒரு குறிப்பிட்ட அச்சில் (Mould) ஊற்றி, குளிர வைத்து திண்ம வடிவப் பொருளை உருவாக்கும் முறை வார்ப்படம் (Casting) ஆகும். இதை ‘வார்ப்பு’ என்றும் சொல்லலாம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வார்ப்படத் தொழிலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5,000க்கும் அதிகமான வார்ப்பட நிறுவனங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 750 வார்ப்பட நிறுவனங்கள் உள்ள நிலையில், தொழில் நகரான கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 600 வார்ப்பட நிறுவனங்கள் செயல்படுகின்றன.
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இவற்றில் 450 நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) பிரிவைச் சேர்ந்தவை. தமிழ்நாட்டில் இத்துறையில் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றினாலும், 80 சதவீதத்திற்குமேல் வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டுதான் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.
நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வார்ப்படத் தொழில் நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொழில் அமைப்புகள் சார்பில் கோவையில் அரசூர் பகுதியில் வார்ப்படத் தொழில் துறையினர் இணைந்து தொழிற்பேட்டை அமைத்து அங்கு வார்ப்பட உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.
வார்ப்பட தொழில் மேம்பாடு…
இதுகுறித்து வார்ப்படத் தொழில் மேம்பாட்டு நிறுவனம், உயர் திறன் மய்யத்தின் தலைவர் கணேஷ் குமார், வார்ப்படத் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:
உலகளாவிய உற்பத்தித் துறையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கச் சலுகைகளே முக்கிய காரணம். உற்பத்தித் துறைச் சங்கிலித் தொடரில் ‘மெட்டல் மற்றும் காஸ்டிங்’ முதுகெலும்பாக கருதப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வார்ப்பட நிறுவனங்களில் 90 சதவீதம் ‘எம்.எஸ்.எம்.இ.’ பிரிவைச் சேர்ந்தவை.
வார்ப்படத் தொழிலில் முதல் இடத்தில் உள்ள சீனா ஆண்டுக்கு 4.5 கோடி டன் வார்ப்படம் உற்பத்தி செய்யும் நிலையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 1.4 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இரு நாட்டின் உற்பத்திக்கு இடையிலான இடைவெளி மிக அதிகமாக உள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை இத்துறை எதிர்கொள்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் மறுசுழற்சி முறை பயன்பாடு அதிகரித்தல் போன்றவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.
பல தொழில் துறையினர் இத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஜவுளித் துறை இயந்திரங்கள், பம்ப் மற்றும் மோட்டார், உணவு மற்றும் வேளாண் துறை உபகரணங்கள், சுரங்கம், கட்டுமான உபகரணங்கள் உற்பத்தி, ஆற்றல் துறை, எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ராணுவ தளவாடம் மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றுக்கான வார்ப்படங்களைத் தமிழ்நாடு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.
அதிநவீனத் தொழில்நுட்பம்
இந்திய வார்ப்படத் தொழில் நிறுவனங்கள் தற்போது உள்ளதை விட 2.5 மடங்கு வளர்ச்சியை அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். இத்தகைய வளர்ச்சி அதிநவீனத் தொழில்நுட்பம், மிகத் திறமையான தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வார்ப்படத் தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய சூழலில் வார்ப்பட நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ரூ.26.5 கோடியில் தொழிலாளர் திறன், வார்ப்படம் மேம்பாட்டு மய்யம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
ரூ.8.1 கோடி நிதி வழங்கல்
கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்வில், இதற்கான முதல் தவணையாக ரூ.8.1 கோடி நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் புதிதாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், வரும் காலங்களில் தொழிலாளர்களின் திறன் மற்றும் வார்ப்படத் தயாரிப்பு மேம்படும். மேலும், இத்தொழிலில் கோவை மாவட்டம் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்யும்.
