திருவனந்தபுரம், டிச.8 கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க கவசங்கள் மாயமான விவகாரத்தில், பன்னாட்டு தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்.அய்.டி.) அவர் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
தங்கம் காணாமல் போனது
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவி லின் கருவறை வாசலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், 2019ஆம் ஆண்டு செப்பனிடும் பணிக்காக கழற்றி அனுப்பப்பட்டன. பெங்க ளூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ் ணன் போத்தி இதற்கான செலவை ஏற்றார். பணிகள் முடிந்து கவசங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது, அதில் 4 கிலோ தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் மேனாள் தலைவர் பத்மகுமார், நகைக் கடைக்காரர் கோவர்த்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலுக்கு தொடர்பு
இந்த விசாரணையில் புதிய திருப்பமாக, ரமேஷ் சென்னிதலா சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சபரிமலை தங்கம் மாயமானது வெறும் திருட்டு சம்பவம் அல்ல. முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டம் இதில் அடங்கியுள்ளது. திரைக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது. இதில் பன்னாட்டு கடத்தல் கும்பலுக்கு தொடர்புள்ளது. இந்த நடமாட்டம் அறிந்த ஒரு நபர் அளித்த உறுதிசெய்யப்பட்ட, நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன.
ரூ.500 கோடி கைமாறியது: இந்த விவகாரத்தில் 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இதில் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. தேவசம் போர்டு தொடர்பு: கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பன்னாட்டு கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விவரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளிக்க தான் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருப்பதாகவும் சென்னிதலா தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள பன்னாட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
