திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதி ரூபாய் 11,27,500/- வழங்கப்பட்டது!
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக் காடாக்கும் முயற்சி நடக்கிறது!
எல்லா உத்திகளும் தோற்ற பிறகுதான் மதக்கலவரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்!!
நன்னிலம், டிச.8 ‘‘திராவிட இனம் எப்படி அடிமைப்பட்டுக் கிடந்தது? அதிலிருந்து எப்படி மீட்கப்பட்டது? இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆண்டுகால வரலாறு. அந்த அடிமைத்தனத்திற்கு காரணமான ஜாதியை ஒழிக்கப் பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம்; திராவிடர் இயக்கம் என்றும், மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு அமைய ஒத்துழையுங்கள்’’ என்று தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” மற்றும் ‘‘பெரியார் உலகம் நிதியளிப்பு விழா” ஆகிய இரு தலைப்புகளில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரைக் கூட்டம் நேற்று (7.12.2025) மாலை நன்னிலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது, நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜா ராணி திருமண மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மண்டபம் வண்ண விளக்குத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கழகக் கொடிகளே மண்டபத்துக்கு வழி காட்டிக் கொண்டிருந்தன. பதாகை களும் மக்களை நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தன. அதை மெய்ப்பிப்பது போல, பொதுமக்கள் அதிகமாக சாரை சாரையாக மண்டபத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர். மேடை சுயமரியாதைச் சுடரொளி களான ஆசிரியர் வை.மாறன், முடிகொண்டான் ஜெக நாதன் ஆகியோர் பெயரைத் தாங்கி நின்றது.
கொள்கைப் பாடல்களுக்குப்
பின்னணி இசையுடன் நடனம்!
தொடக்கத்தில் ‘நல்லாசிரியர்’ விருது பெற்ற கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் ஒருங்கிணைப்பில், இருபால் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கொள்கைக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் “பெரியாரை நம்படா நம்பு”, ‘‘நாங்க அறிவுள்ள பெண்பிள்ளைகள்” உள்ளிட்ட கொள்கைப் பாடல்களுக்குப் பள்ளி மாணவர்கள் பின்னணி இசையுடன் நடனம் ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். அதே சமயத்தில் கழகத் தலைவர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் உற்சாகமும், எழுச்சியும் கலந்த வரவேற்பு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறார்களைப் பாராட்டி அவர்களுக்கு கழகத் தலைவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ் முறைப்படி அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவ.நர்மதா, நன்னிலம் வடக்கு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஜோதிராமன், வி.சி.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழோவியா ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரை ஆற்றினார். கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முறையே மேடையை நிர்வகித்து உரையாற்றியும், கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்து மக்கள் புத்தகங்களை வாங்கிப் பயன் பெறும் படியும் செய்தனர்.
பங்கேற்றோர்
நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்டக் காப்பாளர்
வீர.கோவிந்தராசு, மாவட்டத் துணைத் தலைவர் ஓவியர் தி.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் ம.மனோஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், மகேசுவரி, நன்னிலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கரிகாலன், மாவட்ட விவசாய தொழிலாளரணிச் செய லாளர் க.வீரையன், நன்னிலம் ஒன்றியத் தலைவர் இரா.தன்ராஜ், , நன்னிலம் ஒன்றியச் செயலாளர் சு.ஆறுமுகம் தி.மு.க. நன்னிலம் பேரூர் கழகச் செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலையில், கழகத் தோழர்களான கரிகாலன் – ராதா இணையர்களின் வெள்ளி விழா மண நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவர்களைப் பாராட்டி மரியாதை செய்தார். இளையோர் கழகப் புத்தகங்களை வாங்கி, அதில் ஆசிரியரிடம் ஒப்பம் பெற்று மகிழ்ந்தனர்.
செவிலியர் கல்வி முடித்திருக்கும் வினோதினி என்பவர் தனது தந்தை வெங்கடேசனுடன் மேடையேறி கழகத் தலைவரிடம் ஒரு எழுதுகோலைக் அன்பளிப்பாகக் கொடுத்தார். திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பாக கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையில் எழுச்சிகரமான கொள்கை முழக்கங்களோடு கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பெரியார் உலகம் நிதி அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் நிதி அளித்தோர் பட்டியலை வாசித்தார். உரியவர்கள் மேடையேறி கழகத் தலைவரிடம் வழங்கினார். ஏற்கெனவே திருவாரூர் மாவட்டம் சார்பாக கொடுத்துள்ள ரூபாய் 1,42,000/- த்துடன் சேர்த்து, திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மொத்தம் ரூபாய் 10,90,000/- கொடுத்துள்ளதாக அறிவித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையை, ”திராவிட இனம் எப்படி அடிமைப்பட்டுக் கிடந்தது? அதிலிருந்து மீண்டு எப்படி எழுச்சி பெற்றது? என்கிற வரலாற்றைத் தாங்கி நிற்கப் போகிறது பெரியார் உலகம். அப்படி அமைக்கப்படும் போது, திருச்சி சிறுகனூர் – பெருகனூர் ஆகிவிடும். அதற்காக இயக்கத் தோழர்கள் மற்றும் இயக்கம் சாராத தோழர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நிதி அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்களது தலை தாழ்ந்த நன்றி” என்று தொடங்கினார்.
குருதி உறவுகளை விட
கொள்கை உறவு தான் முக்கியம்!
அதைத் தொடர்ந்து ஏற்கெனவே மேடையில் நடந்த இரண்டு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசினார். ஒன்று, தன்னால் பாராட்டப்பட்ட வெள்ளி விழா மண நாளைக் கொண்டாடிய இயக்க இணையர்களைப் பற்றி நினைவூட்டி, “25 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் திருமணம் என்னால் நடத்தி வைக்கப்பட்டது” என்று முடிக்கும் முன்பே கைதட்டல் பெருகியது. தொடர்ந்தார். “சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்பதற்கு இதுவொரு சான்று. இணையர்களுடன் அவர்களின் மகன் வீரமணியும் வந்திருந்தார். இங்கே ஒரு வீரமணி! அங்கே ஒரு வீரமணி!” முடிப்பதற்குள் அதற்கும் பலமான கைதட்டல். தொடர்ந்தார். “எங்களைப் பொறுத்தவரை குருதி உறவுகளை விட கொள்கை உறவு தான் முக்கியம். அதனால்தான் இயக்கத்தில் அய்யா; தந்தை; அண்ணா; தம்பி என்று சொல்கிறோம்” என்று குறிப்பிட்டுவிட்டு, 67 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தனது திருமணம் பற்றிக் குறிப்பிட்டார். அது ஞாயிற்றுக்கிழமையில் கொழுத்த ராகுகாலமான மாலை 5 மணிக்கு தாலி கட்டாமல் நடைபெற்றது என்றும், ‘‘நாங்கள் சிறப்பாக இருக்கிறோம். ஆகவே, தாலி கட்டவில்லை, சப்தபதி வைக்கவில்லை என்றால், அப்படி ஆகிவிடுமோ? இப்படி ஆகிவிடுமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை’’ என்று அறிவுறுத்தினார்.
கலைஞர், அண்ணாவை மகிழ்வித்ததைப் போல…
இரண்டாவது, பெரியார் உலகம் நிதியளிப்பு. அதாவது, ‘‘கொடுக்கப்பட்ட நிதி மொத்தம் ரூபாய் 10,90,000/- வந்தது என்று சொன்னார்கள். நான் ‘‘இன்னுமொரு 10,000/- ரூபாய் சேர்த்து, 11 லட்சமாகக் கொடுங்கள்” என்று கேட்டேன். மறுக்காமல் உடனே சரி என்று சொன்னார்கள். கூடுதலாகக் கேட்பதற்காகக் கேட்கவில்லை. திருவாரூரில் பிறந்த கலைஞர், அண்ணா அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ரூ.11 லட்சம் தேர்தல் நிதி திரட்டித் தந்ததையும், சைதாப்பேட்டையில் வேட்பாளர், ‘மிஸ்டர் 11 லட்சம்’ என்று அண்ணா சொன்ன அரிய வரலாற்றையும் நினைவூட்டத்தான்” என்று கூறி கூடுதல் 10,000/- ரூபாய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளித்து, திருவாரூர் மக்கள் மனங்களில் முத்தமிழறிஞர் கலைஞரை இன்னுமொரு முறை விதைத்தார். மக்கள் உள்ளம் கிளர்ந்து கையொலி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் நிறைவு பெற்ற போது அந்த 11 லட்சம், ரூ.11,27,500/- என்று கழகத் தலைவர் கேட்ட தொகைக்கும் மேலாக அளித்து கலைஞர், அண்ணாவை மகிழ்வித்ததைப் போல, கழகத் தலைவரையும் மகிழ்வித்து மாவட்டத் தோழர்களும் மகிழ்ந்தனர்.
ஜாதியை ஒழிக்கப் பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம்!
தொடர்ந்து ஆசிரியர், 100 ஆண்டுகளுக்கு முன்னால் நமது சமூகம் எப்படி இருந்தது என்பதை, சென்னை ஒற்றை வாடையில் நடந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு பஞ்சமர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கொடுமையைச் சுட்டிக் காட்டி, ”அந்த ஜாதியை ஒழிக்கப் பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம்” என்றார். அதைத் தொடர்ந்து, பெண்ணுரிமைக் களத்தில் சுயமரியாதை இயக்க சாதனைகள்பற்றி 1929 செங்கல்பட்டு மாநாட்டில் தொடங்கி இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி செல்லும் மகளிருக்கு மாதாமாதம் உதவித்தொகை என்பது வரை பட்டியலிட்டார்.
மகளிர் உரிமையை மறுக்க; தடுக்க காஞ்சி சங்கராச்சாரியார் – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாருடன் நடத்திய உரையாடல்; அன்றைக்குப் புரட்சியாளர் அம்பேத்கர் கொண்டு வந்த ஹிண்டு கோட் பில்; பண்டித நேருவின் நிலை போன்றவற்றை எல்லாம் எடுத்துரைத்து, 1989 இல் கலைஞர் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்தது வரை விவரித்துவிட்டு, ‘‘இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அடுத்து, இதற்கு எதிராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். பற்றி விவரித்தார். அதில் காந்தியார் கொலை முதல் பாபர் மசூதி இடிப்பு, திருப்பரங்குன்றம் கலவரம் வரை விவரித்து, ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி” என்றும் நிறுவினார்.
‘திராவிட மாடல்’ அரசு
மீண்டும் அமைய ஒத்துழையுங்கள்!
மேலும் அவர், “தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காலூன்றுவதற்கு எல்லா உத்திகளையும் பயன்படுத்திப் பார்த்து தோற்றுப் போன பின்புதான், திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்” என்று சங்பரிவார் கும்பலை அம்பலப்படுத்தியும் பேசினார். தொடர்ந்து, “ஆகவே, புதிதாக யாருக்காவது வாக்களிக்கலாம் என்று நினைத்தால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்தது போல் ஆகிவிடும். எச்சரிக்கையாக இருங்கள். முதலில் உங்கள் வாக்குகளை சரி பாருங்கள். நீங்களும், உங்கள் சந்ததிகளும் சுயமரியாதையுடன் வாழ ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைய ஒத்துழையுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்தார்.
நிறைவாக நன்னிலம் நகரத் தலைவர் சஞ்சீவி நன்றியுரை கூறிட, முறைப்படி நிகழ்ச்சி முடிவுற்றது. கழகத் தலைவர் மிகுந்த உற்சாகத்துடன் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அடுத்தப் பிரச்சாரக் களமான நாகப்பட்டினம் நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
திருவாரூர் ஒன்றியத் தலைவர் கா.கவுதமன், குடவாசல் ஒன்றியத் தலைவர் ந.ஜெயராமன், கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் சி.ஏகாம்பரம், திருவாரூர் ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், குடவாசல் ஒன்றிய செயலாளர் க.அசோக்ராஜ், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் மு.சரவணன் உள்ளிட்ட தோழர்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள் என்று திருமண மண்டபம் நிறையும் அளவிற்கு கலந்துகொண்டு நிகழ்வில் பேசப்பட்ட கருத்துகளை செவி மடுத்து பயன் பெற்றனர்.
