சென்னை, டிச.7– நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவை ஈடுசெய்யும் வகையில், 76 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழை மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாடு அரசு அல்லது ஒன்றிய அரசின் பங்களிப்பு, 90 சதவீதமாக இருக்கும். வீட்டின் மதிப்பில், 10 சதவீத தொகையை, பயனாளிகள் செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, வீடு ஒதுக்கீடு பெறுவோர், 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. பெரும்பாலான பயனாளிகளால், இத்தொகையை ஒரே தவணையில் செலுத்த முடிவதில்லை. இதனால், பயனாளிகள் தங்கள் பங்கு தொகையை செலுத்த வங்கிக்கடன் வசதிக்கு, நகர்ப்புற வாழ்விட வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்ட பயனாளிகளின் பங்கு தொகையை, அரசே ஏற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
இது குறித்து, வாரிய அதிகாரி கூறியதாவது:
வாரிய திட்டப் பகுதிகளில் வீடு பெறுவோரில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், அரசுக்கு ஆண்டுக்கு, 680 கோடி ரூபாய் வரை வசூலாகிறது. இந்த நிதியில் இருந்து, 76.66 கோடி ரூபாயை, நகர்ப்புற வாழ்விட திட்ட பயனாளிகள் பங்கு தொகை செலவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார். சென்னையில் 7; திருநெல்வேலி, கரூர், மதுரை ஆகிய நகரங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 குடியிருப்பு திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடாக, இந்த நிதி வழங்கப்படுகிறது.
இதனால், பயனாளிகளின் பங்களிப்பு தொகையில், 70 முதல் 90 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை, திருநெல்வேலி, கரூர், மதுரை நகரங்களில், 3,908 ஒதுக்கீட்டாளர்கள் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற 23ஆம் தேதிக்குப் பிறகு
வங்கக் கடலில் மீண்டும்
ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
சென்னை, டிச.7 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், நேற்றும் (6.12.2025), இன்றும் (7.12.2025) கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால், டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இம்மாதத்தில் பருவமழை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான மழை நிகழ்வுகள் உருவாகும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வருகிற 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், வருகிற 15-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் உருவாகி பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் அதிகம் இருக்கிறது.
அதன்படி, 15-ஆம் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-
ஆம் தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும். இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-ஆவது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ஆம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
