ராமநாதபுரம், டிச.7 சபரிமலைக்குச் சென்றுவிட்டு ராமேசுவரம் நோக்கிப் பயணித்த ஆந்திர மாநில அய்யப்ப பக்தர்கள் சென்ற கார், கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) விபத்துக்குள்ளானதில், ஆந்திர பக்தர்கள் 4 பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் உள்பட மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலை பயணத்தை முடித்துக்கொண்டு, ராமேசுவரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். நேற்று (6.12.2025) அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புறநகர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்), ஒரு உணவகத்தின் அருகில் தங்கள் காரை நிறுத்திவிட்டு, உள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கீழக்கரையைச் சேர்ந்த முஷ்டாக் அகமது (34) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக, நின்று கொண்டிருந்த அய்யப்ப பக்தர்களின் காரின் பின்புறம் அதிவேகமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் அய்யப்ப பக்தர்களில் விசாகபட்டினம் ராமச்சந்திர ராவ் (40), விஜயநகரம் மாவட்டம், கொரப்பா கொத்தவலசா மர்பினா அப்பாராவ் நாயுடு (33), வங்காரா ராமகிருஷ்ணா (49) மராடா ராமு (49) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கீழக்கரையைச் சேர்ந்த முஷ்டாக் அகமது (34) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த ஹர்ஷத், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கீழக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூரப் பயணத்தில் களைப்பினால் ஏற்பட்ட ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது அதிவேகப் பயணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
