சென்னை, டிச.7 அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என அம்பேத்கர் நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்: புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!
எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!
அயோத்தியில் பாபர் மசூதி
கட்டுமானப் பணி
ஏப்ரலில் தொடங்குகிறது
பைசாபாத், டிச.7 அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பின்படி ராமர் கோயில் கட்டப்பட்டது. அத்துடன் மசூதி கட்டுவதற்கும் அயோத்தியிலேயே இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பின்னர், 2020ஆம் ஆண்டில் அயோத்தியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. சன்னி மத்திய வக்பு வாரியம், ‘இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை’ (அய்அய்சிஎஃப்) என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி மசூதி கட்டும் திட்டத்தைத் தயாரித்தது. இந்நிலையில் அயோத்தியில் மசூதி கட்டும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தலைவர் ஜுபார் பரூக்கி நேற்று (6.12.2205) தெரிவித்தார்.
மணலி கடப்பாக்கம் ஏரி
இயற்கை சூழலில் சுற்றுலா தலமாக மாற்றம்
சென்னை, டிச.7– மணலி கடப்பாக்கம் ஏரியை இயற்கை சூழலில் சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. ரூ.46 கோடி செலவில் 135 ஏக்கரில் கடப்பாக்கம் ஏரி சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, சுமார் 4 முதல் 8 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு உள்ளது.
