பெரியார் புரா மற்றும் உன்னத் பாரத் அபியான் கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் – 2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

Contents

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் 10.11.2025 முதல் 14.11.2025 வரை உன்னத் பாரத் அபியான் மற்றும் பெரியார் புரா கிராமங்களான புதுக்குடி, பாளையப்பட்டி தெற்கு, இராயமுண்டான்பட்டி, செங்கிப்பட்டி, அய்யாசாமிப்பட்டி, சென்னம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை சார்பாக உள்ளூர் அளவிலான நிலைத்த  வளர்ச்சிக்கான இலக்குகளை ஒன்பது கருப்பொருள்கள் நிர்ணயித்து கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற முற்பட்டு வருகின்றது. இதை அடிப்படையாக கொண்டு இந்த அய்ந்து நாள் கிராமிய முகாமும் அய்ந்து கருப்பொருள்களை மய்யமாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

முதல் நாள் நிகழ்வு – ‘உழவே உனது உணவு’

உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு-1: வறுமை இல்லாத மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் கொண்ட கிராம ஊராட்சி

துவக்க நாள் நிகழ்வாக செங்கிப்பட்டியில்  உள்ள டான் போஸ்கோ மாதிரி பண்ணையில் “உழவனின் வாழ்வும் தொழில்நுட்ப வளர்ச்சியும்” என்ற தலைப்பில் கருத்துப் பட்டறை விவசாயிகளுக்கு 10.11.2025  அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. சமூகப்பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவி பி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.

இம்முகாமில் சமூகப்பணித்துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அறிமுகவுரை வழங்கினார். அவர் தம் உரையில் சமூகப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், பெரியார் புரா கிராமங்களில் சமூகப்பணித்துறை செய்து வரும் நற்பணிகளை பற்றி விளக்கினார். இம்முகாமிற்கு பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர்தம் உரையில்  மாணவர்களுக்கு பாடம் நடத்துவதோடு கிராமங்களுக்கு சென்று சமூக அக்கறையோடு கள நிலை அறிந்து அதற்கான தீர்வுகளை பேராசிரியர்களும், மாணவர்களும் செயல்படுத்த ஊக்குவிக்கப்படுவதாக கூறினார். வளம் குன்றாத பண்ணைவயல், தொழில்நுட்ப நிர்வாகத்தில் உள்ளாட்சியின் பங்கு மற்றும் புதுமையான முறையில் விவசாயங்களை மேற்கொள்வது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர், முனைவர் கு.இரா.ஜெகன் மோகன் சிறப்புரை வழங்கினார்.

இயற்கை உரங்கள்

அவரது உரையில் தரத்தோடு இணைந்த உற்பத்தி, நுகர்வோரிடம் வளந்து வரும் எண்ணம் மற்றும் விற்பனை வியாபாரம் குழுவாக இணைந்து செய்யும் விவசாயம் பற்றி எளிமையாக எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து டான்போஸ்கோ மாதிரிப் பண்ணையின் இயக்குநர் அருட்தந்தை அமலதாஸ் வாழ்த்துரை வழங்கினார். அவர் மாதிரி பண்ணையின் செயல்பாடுகள், இயற்கை உரங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு, நவீனமுறை விவசாய தேவைகள், மரம் வளர்ப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அடுத்ததாக உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதித் துறை, தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவுத்திறன் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் க.புவனா அறுவடைக்கு முன், அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளை மதிப்புகூட்டுவது பற்றியும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் விரிவாக விளக்கினார்.

கறவைமாடு வளர்ப்பு – தீவன மேலாண்மை

இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மய்ய தலைவர் முனைவர் கொ.ப.சரவணன் கறவைமாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை விவசாயிகளிடம் விரிவாக விளக்கினார். அடுத்ததாக டான்போஸ்கோ தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வ.ஸ்டீபன் மாதிரி பண்ணையில் தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாண்டு இயற்கை விவசாயம் மற்றும் மரங்கள் வளர்த்தல் பயிற்சிகள் நடைபெறுகின்றது என கூறினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி பசுமை எட்வின் மற்றும் இயற்கை விவசாயி பசுபதியின் குழு விவாதம் நிகழ்த்தினர். அதில் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றியும், இயற்கை விவசாயத்தின் உள்ளாட்சி அமைப்பின் பங்கை பற்றி எடுத்துரைத்தார். இந்த கருத்துப் பட்டறையில் பெரியார் புரா கிராமங்களிலிருந்து விவசாயிகள் சமூகப்பணி மாணவர்கள் என 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர் ஜெர்ஸ்லின் கிராமங்களின் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறைகளையும் ஒவ்வொரு வீடு தேடி வந்து சேரும் சேவைகளை பற்றியும் விளக்கி கூறினார்.

முதல் நாள் மாலை நிகழ்வு

“இயற்கை விவசாயமும் இடுபொருள் விற்பனையும்” என்ற தலைப்பில் மாலை நிகழ்வு அய்யாசாமிபட்டியில் நடைபெற்றது. சமூகப்பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவி சு.அகல்யா வரவேற்புரை வழங்கினார். சமூகப்பணித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அறிமுகவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இரா.பிரதீப், வேளாண் அலுவலர் இயற்கை உரம், இயற்கை விவசாயம் பற்றியும், மூலிகை மருத்துவம் பற்றியும், மருத்துவ குணமிக்க தாவரங்கள் பற்றியும் சிறப்புரை வழங்கினார்.

இயற்கை உணவை…

இதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மொழியியல் துறை, உதவிபேராசிரியர் முனைவர் ந.லெனின் விவசாயம் பற்றியும், குழந்தைகளின் நற்பண்புகள், சத்துமிக்க உணவு வகைகள் தாவரங்கள், காய்கறிகள், மரங்கள் பற்றியும் நம் முன்னோர்கள் இயற்கை உணவை பயன்படுத்தியது போல நாமும் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ராதாகிருஷ்ணன் அய்யசாமிப்பட்டி கிராம மக்களின் சார்பாக வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதி நிகழ்வாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி தே.எப்சிபா நன்றியுரை வழங்கினார்.

இரண்டாம் நாள் காலை நிகழ்வு

“நலம் காப்போம் – பெண்மையை போற்றுவோம்”

உள்ளுர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 9 : மகளிர் நேய கிராம ஊராட்சி

மீனாட்சி மருத்துவமனையோடு இணைந்து சென்னம் பட்டியில் 11.11.2025 காலை பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

சமூகப்பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவர் கோ.முத்துப்பாண்டி வரவேற்புரை வழங்கினார். இம்முகாமில் சமூகப்பணித்துறை  உதவி பேராசிரியர் த.அலமேலு அறிமுகவுரை வழங்கினார். அவர் தம் உரையில் பெரியார் புரா கிராமங்களின் சமூகப் பணித்துறை செய்து வரும் நலம் காக்கும் நற்பணிகளை பற்றி விளக்கினார்.

அதனை தொடர்ந்து சென்னம்பட்டி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரஜினிகாந்த் தலைமையுரை வழங்கினார். அவர்தம் உரையில் சத்தான உணவின் அவசியம், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சமூகபணி மாணவர்களின் கிராமிய மேம்பாட்டிற்கான இவ்வகையான மருத்துவ முகாமின்  முயற்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

வீடு தேடி மருத்துவம்

இதனை தொடர்ந்து சென்னம்பட்டி பஞ்சாயத்து அலுவலர் ரவிச்சந்திரன் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்ததோடு, நம் கிராம மக்களுக்காக நம் வீடு தேடி மருத்துவம் வந்தடைய வழிவகுத்த சமூகப்பணித்துறை மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் மருத்துவர் பி.குருநாதன் மற்றும் மருத்துவக் குழுவினர் சிறப்புரையாற்றி மருத்துவ முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இ.சி.ஜி. அளவிடும் சோதனையும், இரத்த சர்க்கரை அளவு சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினார். இம் முகாமிற்கான மருந்துகளை மேடோபாஃம் நிறுவனம் வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள், குழந்தைகள் உட்பட சுமார் 110 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்.

இரண்டாம் நாள்  – மாலை நிகழ்வு 1

“பெண்ணின் மனநலமே வாழ்வின் ஒளிமயமே” என்ற தலைப்பினை மய்யமாகக் கொண்டு மாலை 3.00 மணியளவில் சென்னம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகப்பணித்துறை மாணவர் பெ.அரிஹரன் வரவேற்புரை வழங்கினார். சமூகப்பணிதுறை உதவிப் பேராசிரியர் த.அலமேலு அறிமுக உரையில் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும் சிந்திக்கும் சவால்களும் அதனால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகளையும், அதற்கான கையாளும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக நிலா மருத்துவமனை மனநல நிபுணர் சு.கலைவாணி பெண்களின் வளர்ச்சியே குடும்பத்தின் வளர்ச்சி என்பதனை வலியுறுத்திப் பேசினார்.  மேலும் அமைதி, சிரிப்பு, அழுகை, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இவைகளை கட்டுப்படுத்தும் யுக்திகளை பற்றி எடுத்துரைத்தார். பங்கு பெற்ற பெண்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுக் தெளிவு பெற்றனர். மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தேவைப்படும் சிகிச்சை முறைகளை பற்றி மிகவும் எளிதாக எடுத்துரைத்தார்.  இறுதியாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி க.வைஷாலி பாரதி நன்றியுரையாற்றினார்.

இரண்டாம் நாள் (மாலை நிகழ்வு) -2

“போதை ஒழிப்போம் – மன நலம் காப்போம்”

“போதை ஒழிப்போம் – மன நலம் காப்போம்” என்ற கருத்தை மய்யமாகக்கொண்டு மாலை 6.45 மணியளவில் சென்னம்பட்டி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமூகப்பணித்துறை மாணவர் ரா.விஸ்வநாதன் வரவேற்புரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சமூகப் பணித்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அறிமுகவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து, காஜாமலை மகளிர் மன்றம் கலைக்குழுவினர்கள், கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகளுக்கும், கிராம பொதுமக்களுக்கும் கிராமிய இசையோடு நாட்டுபுற பாடல்கள் வாயிலாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் குடிபோதையால் இளைஞர்களிடம் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளையும் போதை இல்லா சமூதாயத்தை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை பறை இசையோடு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் மனநல ஆலோசகர் முனைவர்.க.சிவக்குமார் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் குடிபோதையினால் ஏற்படும் மன நோய்கள் பற்றியும் அதை தவிர்க்க கையாளும் யுக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து பாரதிமோகன் திட்ட இயக்குநர், காஜாமாலை  மகளிர் மன்றம் கருத்துரை வழங்கினார். அவர் தம் உரையில், மது போதையினால் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளையும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான மனப்பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்பதனை பற்றியும் அதற்கான இலவச சிகிச்சை முறை பற்றியும் தெளிவாக மக்களிடம் எடுத்துரைத்தார். இறுதியாக சமூகப்பணித்துறை மாணவி பா.அய்ஸ்வர்யா நன்றியுரை வழங்கினார்.

மூன்றாம் நாள் காலை நிகழ்வு

நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம்

உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 4: நீரில் தன்னிறைவு அடைந்த கிராம ஊராட்சி

மூன்றாம் நாள் நிகழ்வான நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பின் கீழ் கையெழுத்துப் பிரச்சாரம்  செங்கிப்பட்டி பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணி அளவில் செங்கிப்பட்டி காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகோபாலன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக பணித்துறை மாணவர்கள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கையெழுத்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர். இக்கையெழுத்து பிரச்சாரத்தில் ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறுப்பட்ட மக்கள் கலந்துகொண்டு “ஒவ்வொரு துளியும் உயிர் துளியே! தண்ணீரை சேமிப்போம், எதிர்காலத்தை காப்போம்” என உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். செங்கிப்பட்டி மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திஸ்வரனும், வேளாண் அதிகாரி பிரதீப்பும், அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களும் இந்த கையெழுத்து பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

மாலை நிகழ்வு  – 1 – மாணவர்களுக்குப் பயிற்சி

மூன்றாம் நாள் மதிய நிகழ்வு 2.30 மணியளவில் செங்கிப்பட்டியில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு பற்றி சமூக பணித்துறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில்  இரா.பிரதீப் வேளாண்மை அலுவலர்  கிராமப்புற பகுதிகளில் திட்டமிடல், ஊழியர் திட்ட செயல்பாடு மற்றும் சமூக செயற்பாடுகள் பற்றி எவ்வாறு தகவல்களை  பெறுவது என எடுத்துரைத்தார். இதில் கிராம மக்கள், விவசாயிகள், தங்களது பிரச்சினைகளையும் நேரடியாக பகிர்ந்து மதிப்பீடு செய்வது, மேலும் கணக்கெடுப்பு, ஆதரவு சேகரிப்பு பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து சமூகப்பணித்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் கருத்துரை வழங்கினார். அதில் கிராம மக்கள் எவ்வாறு தாமே திட்டமிட்டு பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வுகளை காண இந்த ஊரக பங்கேற்பு மதிப்பீடு உதவும் என்றார். சமூக வரைப்படம், வள வரைப்படம் நிலைப்பகுதி நடைபயணம், பருவ அட்டவணை வரைதல் போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின் மூலம் கிராம மக்கள் தங்கள் பிரச்சினைகளை தாமாக வெளிப்படுத்துவது வளங்களை மதிப்பிடுவது, மற்றும் சமூக பங்கேற்பை அதிகரிப்பது குறித்து விரிவாக சமூகப்பணித்துறை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மூன்றாம் நாள் நிகழ்வு – மாலை நிகழ்வு – 2

“நீர் இல்லையேல் – உலகு இல்லை”

“நீர் இல்லையேல் – உலகு இல்லை”  என்ற தலைப்பில் மாலை நிகழ்வு புதுக்குடி கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு  உரிமைகள் திட்டம், திறன் மேம்பாடு  நிபுணர் முனைவர்.சூ.ஞானராஜ் தண்ணீரின் அத்தியாவசியம் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை எந்தெந்த வழிகளில் தண்ணீரை வீணாக்குகிறார்கள் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியதுவத்தை பற்றி மக்களிடையே உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து டான்போஸ்கோ மாதிரிப் பண்ணை திட்ட ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் கருத்துரை வழங்கினார். அவர் தம் உரையில் விஞ்ஞான வளர்ச்சியால் பூமியிலுள்ள தண்ணீர் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்றும் குறிப்பாக ஆழ்த்துளைக் கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து எடுத்தரைத்தார். நீரில் தன்னிறைவு அடைய ஒவ்வொரு கிராம மக்களும் நீரை வீணாக்காமல் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.

நான்காம் நாள் நிகழ்வு

“தேசத்தின் செழிப்பு – சுற்றுப்புற சுத்தம்”

உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 5:  தூய்மையான மற்றும் பசுமையான கிராம ஊராட்சி.

காலை நிகழ்வாக “பனையை நடுவோம், பசுமையைக் காப்போம்” என்ற மய்யக்கருத்தைக் கொண்டு காலை 10.00 மணி முதல் இராயமுண்டான்பட்டியிலிருந்து நவலூர் வரை உள்ள சாலைகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்  துரை.சந்திரசேகரன் பனை விதைகளை மாணவர்களோடு இணைந்து விதைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிறீவித்யா, மேஜர் மினி கட்டளை அதிகாரி (4. தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் என்.சி.சி, திருச்சிராப்பள்ளி)  கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டி.ராதிகா மைகேல், மேஜர் முனைவர் பெ.விஜயலெட்சுமி  இணை என்.சி.சி. அதிகாரி (4, தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் என்.சி.சி,) கேப்டன் உ.சரவணகுமார் இணை என்.சி.சி அதிகாரி (34 தமிழ்நாடு இன்டெப் காய் என்.சி.சி.தஞ்சாவூர்) ஆகியோர் முன்னிலையில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக என்.சி.சி. மாணவர்கள் 75 பேர் இணைந்து பனை விதைகளை விதைத்தனர். இந்நிகழ்வு முழுவதும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப துறையின் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாறன் முன்னின்று ஒருங்கிணைத்தார்.

மாலை நிகழ்வு – 1

“விளையாட்டின் எழுச்சி வெற்றியின் சாட்சி”

பிற்பகல் 2.00 மணி முதல் “விளையாட்டின் எழுச்சி வெற்றியின் சாட்சி” என்ற தலைப்பை மய்யப்படுத்தி இராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கிராம விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் தே.சாந்தி தலைமை வகித்தார்.

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குநர் முனைவர் து.ரமேஷ் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார். சாக்கு ஓட்டம், தொடர் ஓட்டம், கபடி, தண்ணீர் நிரப்புதல் குண்டு எறிதல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கிராமிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தஞ்சாவூர் மெஜஸ்டிக்  மஹாராஜா நிறுவனம் வழங்கியது.

மாலை நிகழ்வு – 2 –
“ஒன்றுபடுவோம் காடு வளர்ப்போம்”

இதனை தொடர்ந்து “ஒன்றுபடுவோம் காடு வளர்ப்போம்” என்ற  தலைப்பை மய்யப்படுத்தி மாலை 6.00 மணி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட வனச்சரகர் ந.பொன்னுசாமி சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் தாவரங்கள் பற்றியும், குறுங்காடு வளர்ப்பின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்களான “ குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பற்றி விளக்கினார். பின்னர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மய்ய இயக்குநர் முனைவர் கா.செல்வகுமார் கருத்துரை வழங்கினார். அவர்தமது உரையில் கல்வியின் அவசியம் பற்றியும் எவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு  படிக்க வேண்டும் எனவும் கல்வி மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு எப்படி இட்டுச்செல்கிறது என்பதை எடுத்துரைத்தார். இறுதியாக சமூகப்பணித்துறை மாணவி சு.அகல்யா நன்றியுரை வழங்கினார்.

அய்ந்தாம் நாள் காலை நிகழ்வு

“நாளைய உலகம் இன்றைய கல்வி ”

உள்ளூர் அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்கு – 3 : குழந்தைகள் நேய கிராம ஊராட்சி

“தற்காப்பே என்றும் உயிரின் கவசம்” என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு விழிப்புணர்வு பயிற்சி பாளையப்பட்டி தெற்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில நடைபெற்றது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்தியாயினி, தலைமை வகித்து தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் எப்போதும் பங்கு பெறும் சமூகப் பணித்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினர்.  சிறப்பு விருந்தினர் து.துரைமாணிக்கம், மாநில முதல் உதவி பயிற்சியாளர் மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கத்தோடு எளிய முறையில் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மாலை நிகழ்வு -1 – “கல்வி பேசும் உலகம் கேட்கும்”

இரண்டாம் நிகழ்வான “கல்வி பேசும் உலகம் கேட்கும்” என்ற தலைப்பில் பாளையப்பட்டி தெற்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எளிய ஆங்கில வழி தகவல் தொடர்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி ஆ.எப்சிபா வரவேற்புரை வழங்கினார். நிகழ்வுக்கு பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறை இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு  மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் பயிற்றுவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்  இறுதியாக சமூகப்பணித்துறை மாணவர் ரா.விஸ்வநாதன் நன்றியுரை வழங்கினார்.

மாலை நிகழ்வு -2 – நிறைவு விழா

கிராமிய முகாமின் நிறைவு விழா பாளையப்பட்டி தெற்கு தேவாலயத் தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சமூகப்பணித்துறை மாணவி பா.அய்ஸ்வர்யா வரவேற்புரை வழங்கினார். இதை தொடர்ந்து சமூக பணித்துறையின் தலைவர் முனைவர் சு.பரமேஸ்வரன் அறிமுகவுரை வழங்கினார். அவர் தம் உரையில் கிராமிய முகாமின் சமூகப்பணித்துறை மாணவர்களின் பங்கு  குறித்து விளக்கினார். அதனைதொடர்ந்து மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை இணைப் பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இன்றைய குழந்தைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சாதக பாதகங்களை பல்வேறு கருத்துகள் அடங்கிய நாட்டுப்புற பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த கிராமிய முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பாளையப்பட்டி தெற்கு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலதாசன் முன்னிலை வகித்து பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சமூக பணிதுறை தங்கள் கிராம வளர்ச்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக பாராட்டி வாழ்த்தினார்.

கிராமிய முகாமின் அறிக்கை

பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் முனைவர்.வெ.சுகுமாறன் அய்ந்து நாட்களில் சமூகப்பணி துறை மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சினை மக்கள் பங்கேற்போடு மிகுந்த அர்ப்பணிப்போடு செய்ததாக கூறி வாழ்த்துரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக அய்ந்து நாள் கிராமிய முகாமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராமிய குழந்தைகள் மற்றும் சமூகப்பணி துறை மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் சமூப்பணிதுறை மாணவர்  அரிஹரன் நன்றியுரை வழங்கினர்.

நிறைவு விழவில் 300 க்கும் மேற்பட்ட கிராம  பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த அய்ந்து நாள் சமூகப்பணி துறை மாணவர்களின் கிராமிய முகாமில் பள்ளி மாணவர்கள் பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 3000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *