இம்மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது,
மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்!
மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
சென்னை, டிச.7 தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண்; இங்கேதான் பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகள் செயலாக்கப்படுகின்றன. இம்மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது, மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- இம்மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது, மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்!
- சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
- எங்களுக்கு உடன்பாடு கிடையாது!
- கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இல்லை!
- கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்!
- “மேலே போங்கள்; கொளுத்துங்கள்” என்று சொல்கிறார் ஒரு நீதிபதி!
- திண்டுக்கல்லிலும் இதே நிலை!
- நீதிமன்றத்தின் கடமை என்ன?
- “நமக்கு என்ன… யாருக்கோ வந்த விருந்து!” என்று காவல்துறை நினைத்தால் என்னாவது?
- மத உரிமை எப்படிப்பட்டது?
- கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதே!
- ‘பூச்சாண்டி’ வேண்டாம்; துணிந்திருக்கிறோம்!
- ஆளுநர் மக்கள் ஊழியர்தான்!
- மதக்கலவரம் என்னும் குறுக்கு வழி!
- ஏற்ற உறுதிமொழிப்படி நடந்துகொள்ளுங்கள்!
4.12.2025 அன்று மாலை சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
அவரது கண்டன உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எங்களுக்கு உடன்பாடு கிடையாது!
திடீர் என்று பார்த்தால், “ஒன்றிய அரசினுடைய பாதுகாப்போடு போய் அங்கே தீபம் கொளுத்த வேண்டும்” என்று சொல்லுகிறார். இதற்கு முன்னாலே கேட்டாரே பாலகிருஷ்ணன் அவர்கள், ரொம்ப சரியாகக் கேட்டார். அதனால் நான் மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமாகக் கொளுத்துகிற இடத்தில் திருவண்ணாமலையில் தீபம் கொளுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதில் கூட எங்களுக்கு உடன்பாடு கிடையாது. எனவே, அந்தப் பிரச்சாரத்தை செய்கிறோம். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அன்றைக்கே கலைஞர் அவர்கள் என்ன எழுதினார்கள் – அதை எடுத்துப் போடுகிறோம்.
ஆனால், அதை நிறுத்தி விட்டார்களா திமுக ஆட்சியில்?
அது நியாயமா, தவறா, தேவையா, இல்லையா என்பது வேறு. ஆனால், நடத்துகிறார்களா இல்லையா? எங்களுக்கெல்லாம் உடன்பாடு இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. அதற்கு என்ன நடத்த வேண்டுமோ அதை நடத்துகிறார்கள்.
கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இல்லை!
திடீரென்று திருப்பரங்குன்றத்திலே மட்டும் என்ன அவசரம்? உடனே அதற்கு என்ன பண்றாங்க? நீதிபதி சரிப்படுத்தி, நீதித்துறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். பெரியார் மீது ஒருமுறை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. அப்போது தந்தை பெரியார் சொன்னார், தலைமை நீதிபதி ராஜமன்னார் அய்.சி.எஸ்., ஏ.எஸ்.பி. அய்யர் அய்சிஎஸ் ஆகிய நீதிபதிகள் முன்னால் அவர் சொன்னார், “ஆமா நான் எனக்கு பட்டதைக் கண்டித்தேன். ஏன் கண்டித்தேன்னு சொன்னா, இது நிர்வாகத்துறை என்று சொல்லும்போது, இந்த கோர்ட்டுக்கு என்ன பேரு? கோர்ட் ஆஃப் லா (Court of Law) சட்டக் கோர்ட் என்றுதான் வைத்திருக்கிறார். கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இல்லை” என்று வெளிப்படையாகச் சொன்னார்.
கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்!
அது மாதிரி மக்களுக்கு நம்பிக்கை – ஜனநாயகத்திலே, அரசியலமைப்புச் சட்டத்திலே! கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான். அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளலாமா? எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு நீதிபதி ஆவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஆயிரம் கருத்து இருக்கலாம், எல்லாருக்கும் கொள்கை இருக்கலாம். ஆனால், நீதிபதியான பிற்பாடு அந்த இடத்திலே ‘‘ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்பட’’ வேண்டிய கடமை நீதிபதிகளுக்கு உண்டு. ஆனால், அந்த நீதிபதிகள் இன்றைக்கு எப்படி நடந்து கொள்கிறார்கள்? வேதனையாக இருக்கிறது, கண்டனத்துக்குரியதாக இருக்கிறது.
“மேலே போங்கள்; கொளுத்துங்கள்” என்று சொல்கிறார் ஒரு நீதிபதி!
ஒரு சின்ன உதாரணத்தின் மூலமாகச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். எண்ணிப்பாருங்கள்! மிக ஆபத்தான ஒரு சூழ்நிலை. ஏற்கெனவே மதக் கலவரம் ஏற்படும் என்று தடுக்கப்பட்டு, பழைய பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைவராக இருந்தபோதே அங்கே பல மாதங்களுக்கு முன்னாலே இந்த வேலையைத் தொடங்கினார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதைச் செய்வார்கள். அப்போ தெல்லாம் தடுக்கப்பட்டிருக்கும்; அத்துடன் முடித்து விடுவார்கள். ஆனால், இப்போது மீண்டும் நீதிமன்றத்துக்கு வரச் சொல்லி சம்பந்தமில்லாத உடனடியாக உத்தரவு போட்டு, “மேலே போங்கள்; கொளுத்துங்கள்” என்று நீதிமன்றத்திலே இருக்கக்கூடிய ஒருவர், தன்னைப் பகிரங்கமாக ஆர்எஸ்எஸ்காரன்; நானே அதை எடுத்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார் ஒரு நீதிபதி.
திண்டுக்கல்லிலும் இதே நிலை!
அதேபோல திண்டுக்கல்லிலே… இன்னொரு கோயில். அந்தக் கோயிலில் விழா நடக்கிறது என்று சொன்னால் அங்கே கலவரம் வருகிறது. அந்தக் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்றால், அந்த விழாவை நிறுத்த வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்லுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் தடை உத்தரவு போடுகிறார். உடனே அந்த மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு போடப்படுகிறது. உடனே அந்த மாவட்ட ஆட்சியரை மீண்டும் அதை செய்ய வேண்டும், நடத்தவேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.
தயவு செய்து நடுநிலையாளர்கள். செய்தியாளர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஓர் இடத்திலே அமைதி இருக்குமா? அமளி நடக்குமா என்று பார்க்க வேண்டியதும் கண்காணிக்க வேண்டியதும் யாருடைய பொறுப்பு? காவல்துறையினுடைய பொறுப்பு.
நீதிமன்றத்தின் கடமை என்ன?
எனவே ஆட்சியருடைய ரிப்போர்ட் போகிறது. இங்கே மிகப்பெரிய அளவு உயிர் கொலை கள் நடக்கக்கூடாது, இரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காக அறிக்கை வாங்கி வைத்துக்கொண்டு, இதைத் தடுக்க 144 தடையுத்தரவு போடுகிறார். கள நிலவரத்தை அளந்து பார்ப்பது ஆட்சித் தலைவருடைய வேலை. அதனை அவர் செய்கிறார். அதைச் செய்தால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகள், அது நீதிமன்றமாக இருந்தாலும், நிர்வாகத் துறையாக இருந்தாலும் அதனுடைய கடமை என்ன? அந்த அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டுமா, இல்லையா? அந்த அதிகாரிகள் பாதுகாக்கவில்லை என்றால் என்ன ஆகும்? கொலை நடந்த பிற்பாடு ஏன் நீங்க முன்னாலேயே தடுக்கக் கூடாது என்று இதே நீதிபதிகள் கேட்கிறார்களா இல்லையா?
“நமக்கு என்ன… யாருக்கோ
வந்த விருந்து!” என்று
காவல்துறை நினைத்தால் என்னாவது?
வந்த விருந்து!” என்று
காவல்துறை நினைத்தால் என்னாவது?
தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருமுன்னர் தானே காக்க வேண்டும். வருமுன்னாலே காப்பதற்குத் தடை உத்தரவு தானே சரியான நிர்வாக சட்டப்பூர்வமான முறையாக இருக்க முடியும். அவர் 144 தடை உத்தரவு போட்ட உடனே, “இல்ல.. அவரை நேரடியா கூப்பிடுவேன்’’ என்றால், அந்த நீதிபதியால், மாவட்ட ஆட்சியர் கூண்டிலே ஏற்றப்பட்டிருக்கிறார். இன்றைய காலை பத்திரிகையில் வந்திருக்கிறது! உடனே அவர் குறுக்கு விசாரணை செய்கிறார். கலெக்டர் சொல்லுகிறார், ‘‘கலவரச் சூழ்நிலை இருந்தது, ஆகவே 144 போடுகிறோம்’’ என்று. ‘‘இல்லை, இல்லை நீங்கள் இவரோடு போய் தீபம் ஏற்றுங்கள்” என்று அவரைக் கூப்பிட்டு மிரட்டுவதா? அப்புறம் நம்முடைய நாட்டிலே யாருக்குப் பாதுகாப்பு இருக்கும்? “நமக்கு என்ன… யாருக்கோ வந்த விருந்து!” என்று காவல்துறை அதிகாரிகள் போய்விட்டால் என்ன ஆவது?
இங்கே ஒருத்தர் கலவரம் பண்ணனும்னு வந்தாருன்னா காவல்துறை எதுக்கு இங்க பாதுகாப்புக்கு இருக்காங்க? நாம அனுமதி வாங்கி நடத்துறோம், சட்டப்படி நடத்து றோம். அனுமதி வாங்கி நடத்தும்போது இன்னொருத்தர் “சரிங்க அவரை நீங்க ஒன்னும் கண்டுக்காதீங்கன்னு” நீதிபதியே சொல்ற மாதிரி சொல்லுவதா? அல்லது “நீங்கள் விட்டு விடுங்கள்” என்று சொல்வது மாதிரி சொல்லுவதா?
கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறோம், அந்த அதிகாரிகளும் சரி, 144 என்று தடை உத்தரவை போட்ட வர்களுக்கும் இன்றைக்கு நீங்கள் அதை மீறி அவர்கள் மீது அவதூறு என்று சொன்னால், நாளைக்கு எந்த அதிகாரியும் ‘‘எங்களுக்கு என்ன என்று அலட்சியமாகப் போய்விடுவோம்” என்று காவல்துறையோ, நிர்வாகத் துறையோ சொன்னால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு? தயவு செய்து சிந்திக்க வேண்டாமா? இது என்ன வெறும் அரசியல் பிரச்சினையா அல்லது மக்கள் பாதுகாப்பு பிரச்சினையா? அதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத உரிமை எப்படிப்பட்டது?
நிறைவாகச் சொல்லுகிறேன் இந்த நீதிபதிகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து மத உரிமை என்று இருக்கிற அந்த மத சுதந்திரம் (Freedom of Religion) என்று சொல்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலே இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இரண்டு பிரிவுகள் 25, 26. அதிலே இன்றைக்கு கூட விடுதலையிலே அதை சுட்டிக்காட்டி எழுதும்போது, ‘அந்த அரசியலமைப்புச் சட்டத்திலே மத உரிமை இருக்கு அவங்க நடத்துவாங்க, இவங்களுக்கு உரிமை இருக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு’ என்று பொத்தாம் பொதுவிலே சொல்லுகின்ற தங்களுக்கு சாதகமான அந்த உணர்வை வைத்துக்கொண்டு எழுதுகிற நீதிபதிகளே, எந்த அரசியல் சட்டத்தின் மீது நீங்கள் பிரமாணம் எடுத்துக் கொண்டீர்களோ அந்த அரசியல் சட்டத்தின் விதிகளைக் காப்பாற்ற வேண்டாமா? அந்த அரசியல் சட்டத்தின் மீது தானே பிரமாணம் எடுத்துக் கொண்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதே!
அந்த அரசியலமைப்புச் சட்டத்திலே மத சுதந்திரம், அடிப்படை உரிமை (Fundamental Rights) என்று சொல்லக்கூடிய இடத்திலே, எல்லோருக்கும் அந்த மதச் சுதந்திரம் என்று சொன்னால் யாரும் அதில் தலையிட முடியாது – யாராக இருந்தாலும் என்று அதில் போட்டு இருக்கிறதா? இல்லையே! ‘‘சப்ஜெக்ட் டு’’ (Subject to)…. தயவு செய்து படித்தவர்கள் இருப்பார்கள், வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆர்டிகிள் 25, 26 எப்படி ஆரம்பிக்கிறது? Subject to Public Order. பொது அமைதி. அதற்கு அடுத்தபடியாக இருக்கக்கூடியது Morality, Health and other provisions of this Article of the Constitution.
எனவே ஒரு நிலைமையைப் பற்றி ஆராய வேண்டும் என்றால், மதச் சுதந்திரம் என்று எல்லோரும் விட முடியாது. மதத்துக்காகக் கலவரம் வரும் என்றால், தடுப்பதற்கு முழு உரிமை சட்டத்திலே உண்டு. தடுத்து ஆக வேண்டும். Subject to Public Order, Morality, Health and other provisions of this Article of the Constitution. மற்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டது. எனவே ஆங்கிலத்திலே சொல்லுவார்கள் “அப்சல்யூட் ரைட்” (Absolute Right) என்று… முழு அதிகாரம். அதாவது லகான் இல்லாத குதிரை மாதிரி அதுக்கு அதிகாரம் கிடையாது மதத்துக்கு! அதுதானே சரியான நிலை, அதை ஏன் நீதிபதிகள் மறந்தார்கள்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?
‘பூச்சாண்டி’ வேண்டாம்; துணிந்திருக்கிறோம்!
ஆகவேதான், “இது மதச் சுதந்திரம் அவர் போகட்டும்”னு சொல்கிறார். அது மட்டுமல்ல அவசர வழக்கு என்று மேலே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது இது அவசரத்துக்குரியது இல்லை என்கிறார்கள் இரண்டு நீதிபதிகள். உடனே இன்னொரு நீதிபதி என்ன செய்கிறார்? ஆர்எஸ்எஸ் நீதிபதி, அவர் தீர்ப்பு கொடுத்து அவர் தனி ரூட்ல போறாரு. இது முதல் தடவை அல்ல.
தமிழ்நாடு அரசு எப்போதெல்லாம் மிக முக்கியமான தீர்மானங்களை, சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறதோ அங்கெல்லாம் கடைசி நாள் கூட வந்து, அவர் அந்த வழக்கை எப்படியோ தன்னுடைய விசாரணைக்குக் கொண்டு வந்து நடத்துவார்; எல்லாம் செய்வார். ஆகவே இதையெல்லாம் பேசினால் உடனே எங்களைக் கண்ட உடனே அவதூறு என்று இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட முடியாது. நாங்க துணிந்து இருக்கிறோம். சொன்னாரே 93 வயது என்றாரே! 93 வயதில் வெளியே இருக்கிறதை விட உள்ள போனால் ஓய்வாக இருக்கும், அவ்வளவுதான்.
அது மட்டுமல்ல, நான் தனியாகத்தான் தான் போவேன் என்று நினைத்தேன். ஆனால் பரவாயில்லை, பாலகிருஷ்ணன் பேசியதையும் சேர்த்து எடுத்துக் கொள்வார்கள். இன்னும் நமக்குத் தோழர்கள் யாரும் வந்தால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நீதி என்பது வளைக்கப்படுவதா? நீதிதேவன்கள் மயக்கம் அடைவதா? தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக நாங்கள் சொல்லுவதெல்லாம், அரசியல் சட்டம் முக்கியம். நீங்கள் செய்வதெல்லாம் அரசியல் சட்டத்துக்கு மாறான செய்திகள்; தவறான தீர்ப்புகள். ஆகவேதான்… இதைத் திருத்தி ஆக வேண்டும்.
ஆளுநர் மக்கள் ஊழியர்தான்!
மிக முக்கியமாக நீங்கள் ஆயிரம் கருத்து உள்ள வர்கள். ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். மேல காதல் அதிகமாய் இருக்கலாம். என் கருத்தைப் பேச உரிமை இல்லையா என்று கேட்கலாம். உரிமை உண்டு உங்களுக்கு! எப்போது? எங்கள் சம்பளத்தை வாங்காமல், மக்கள் சம்பளத்தை வாங்காமல், அரசிடம் சம்பளம் வாங்காமல் நீங்கள் அதை ராஜி னாமா செய்துவிட்டுக் கமலாலயத்தில் போய் வேலை செய்யுங்கள். அங்கே கருத்து சொல்லுங்கள்! முடிந்தால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தொகுதியில் நின்று பாருங்கள்! வெற்றி பெற முடியுமா? என்று பாருங்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, அரசாங்க ஊழியராக இருந்து கொண்டு (Public Servant) என்று அரசு, பணம் கொடுக்கும்போது அரசியல் சட்டப்படி நீங்கள் எடுத்த பிரமாண உறுதிமொழிப்படி அது ஆளுநராக இருந்தாலும், நீதிபதிகளாக இருந்தாலும் நடந்து கொள்ள வேண்டாமா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
மதக்கலவரம் என்னும் குறுக்கு வழி!
இன்னொன்று இந்த தமிழ்நாட்டில் தான் அதிகமான பெண் நீதிபதிகள் என்று சொன்னார், வந்திருந்து விடைபெற்ற ஒருவர். எப்படி முடிந்தது? இது பெரியார் மண், சமூக நீதி மண். இங்கேதான் பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகள் செய லாக்கப்படுகின்றன. இங்கேதான் திராவிட இயக்கம் என்பது 110 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது – நீதிக் கட்சியிலே இருந்து! அப்படிப்பட்ட இந்த மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது. மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். காவல்துறையோ அல்லது அதிகாரிகளோ கடமையாற்றும் போது, நீங்கள் குறுக்கிட்டு, அவர்களை அச்சுறுத்தக் கூடாது. அதிகாரிகளை அச்சுறுத்துவதைப் போல, “உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று நீங்கள் சொன்னால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தயவு செய்து இந்தச் செய்திகளை மக்களிடம் சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நீங்கள் மதக்கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் நீங்கள் நேரடியாகப் பெற முடியாத ஆட்சியைக் குறுக்கு வழியிலே வீழ்த்தலாம் என்பதற்கு அதை ஒரு கருவியாக, ஒரு முறையாகக் கருதினால் அதைவிட மாட்டோம்.
ஆகவே நண்பர்களே, இவர்களை எல்லாம், கருவி களாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் இந்த நிகழ்வுகளுக்காக அல்ல. அல்டிமேட் (Ultimate) அவர்களுடைய ஒரே நோக்கம் எப்படியாவது ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதற்கு நிதி நெருக்கடியைக் கொடுத்தாலும் தடுக்க முடியவில்லை, மற்ற வகைகளிலும் தடுக்க முடியவில்லை, கடைசியாக மதக்கலவரத்தை உருவாக்கி, அது மட்டுமல்ல… இந்த ஆளுநர் ஒரு வார்த்தை சொல்கிறார்… பயங்கரவாதம் தமிழ்நாட்டிலே தலைதூக்கி ஆடுகிறது என்று! உண்மையா? பயங்கரவாதம் எங்கே தலைதூக்கி ஆடுகிறது? செங்கோட்டைக்கு முன்னால் எத்தனை குண்டு வெடித்து எத்தனை பேர் செத்தார்கள்? யாருடைய நிர்வாகத்தில் இருக்கிறது உள்துறையின் நிர்வாகம்! அமித்ஷாவினுடைய நிர்வாகம்! டில்லி ஆட்சியிலே இருக்கிற நிர்வாகம் தான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அங்கே நடந்தது இங்கே எப்போது நடந்தது?
ஏற்ற உறுதிமொழிப்படி நடந்துகொள்ளுங்கள்!
இந்த ஆட்சியை நீங்கள் அசைத்து விடலாம் நினைத்தார்கள். அசைத்தால் அதைவிட பலம் வருமே தவிர வேறொன்றும் கிடையாது. ஒருமுறை நீதிக் கட்சிக்கு நாங்கள் குழி தோண்டுகிறோம் என்று சொன்னவர்களை எல்லாம் கூட ‘‘நீங்கள் குழி தோண்டத் தோண்ட அந்த மண்ணே உங்களை மூடிவிடும்’’ என்று அண்ணா அவர்களும் அந்த இயக்கத் தலைவர்களும் சொன்னார்கள். அதை நினைவூட்டுகிறோம்.
எனவேதான், நீதித்துறையாக இருந்தாலும் நிர்வாகத் துறையானாலும் அவர்களுடைய சுதந்திரங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்ல உரிமை உள்ளவர்கள் நாங்கள். அவர்களை நாம் தவறாகப் பேசக்கூடாது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி தங்களுக்கு என்ன உரிமைகளோ தங்களுக்கு என்ன எல்லைகளோ அந்த எல்லைகளுக்குள் அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் நன்றாகப் படித்து எடுத்த உறுதிமொழிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லு கிறோம். இல்லையென்றால், தமிழ்நாட்டிலே இருந்து வெளியேறு! வெளியேறு! வெளியேற்றுவோம்! என்று சொல்லக்கூடிய உணர்வோடு இருக்கிறோம்.
நன்றி வணக்கம்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.


