தெற்கு நத்தத்தில் அய்ம்பெரும் விழாக்கள்!

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா! * சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் திறப்பு விழா! * தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா! * பெரியார் தனிப் பயிற்சி மய்யம் திறப்பு விழா!
* கழகத் தலைவர் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

எழுச்சியுடன் நடைபெற்ற அய்ம்பெரும் விழாக்களில் பங்கேற்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

தஞ்சை, டிச.7  ‘‘காவல்துறை, ராணுவம், நீதித்துறை ஆகியவற்றின் மரியாதை குறையக்கூடாது; குறைக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் நாங்கள்” என்றும், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் மத சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது கிடையாது. பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவைகளுக்கு கட்டுப்பட்ட, லகான் உள்ள குதிரைதான்” என்றும் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தெற்கு நத்தம் அய்ம்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தந்தை பெரியார் சிலை திறப்பு, ஆசிரியர் அ.சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் திறப்பு, தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் திறப்பு, பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்பு, கழகத் தலைவரின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா என அய்ம்பெரும் விழாக்கள், தஞ்சை மாவட்டம் தெற்கு நத்தம் திராவிடர் கழகம் சார்பில், 6.12.2025 அன்று மாலை 6 மணியளவில் வல்லம் சாலை ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தமிழர் தலைவருக்குச்
சிறப்பான வரவேற்பு!

இதற்காக தஞ்சை ஒரத்தநாடு சாலையில் ஈஞ்சங்கோட்டை பகுதியிலிருந்து பதாகைகளும் கழகக் கொடிகள் சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்டு எழிலுற பறந்துகொண்டிருந்தன. மேடையருகே மின்விளக்கு தோரணங்கள் கட்டப்பட்டு நிகழ்ச்சிக்கு எழில் சேர்த்தன. ஒரு வாகனத்தில் தந்தை பெரியாரின் முகம் மட்டும் பெரிய பதாகையில் பின்னே வர, கழகத் தோழர் ஒருவர் திராவிடர் கழகக் கொடி ஏந்தியபடி முன்னே வர, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த, ‘‘கலைவாணர் கிராமிய தப்பாட்டக் கலைக்குழு” வினரின் தப்பாட்டமும், அதற்கேற்ப மூன்று சக்கரத்தில் இழுத்து வரப்பட்ட மூன்று பெருமுரசுகள் தரை அதிரும்படியாக முழங்கியதும் அந்த இடத்தையே அதிரச் செய்தன. ஆடாத கால்களும் தாளத்துடன் ஆடிய காட்சிகள், கொள்கைத் திருவிழாவாக கழகத் தலைவரின் 93 ஆம் பிறந்தநாளை தெற்கு நத்தம் தோழர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கலைக்குழுவினர் தங்களின் அதிரடி இசையால் கழகத் தலைவரின் வருகைக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் மக்களிடையே ஊட்டிவிட்டனர். முன்னதாக கருங்குயில் கணேசன் – பொன்னரசு குழுவினரின் கொள்கைப் பாடல் இன்னிசைக் கச்சேரி மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் வருகை தந்தார். அவருக்கு பெரு முரசுகளும், தப்பாட்டக் கருவிகளும் முழங்க, உணர்வை பீறிட்டு எழச் செய்யும் கொள்கை முழக்கங்கள் முழங்க, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் புடைசூழ உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர், பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முதல் தளத்தில் உள்ள பெரியார் தனிப்பயிற்சி மய்யத்தைக்  கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, தந்தை பெரியார் படத்தை தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அறிஞர் அண்ணா படத்தை தி.மு.க. தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர்

துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., திராவிடர் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், தி.மு.க. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தி.மு.க. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.(எ) ராமச்சந்திரன் மேனாள் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டக் காப்பாளர் அய்யனார், மாவட்டச் செயலாளர் அருணகிரி, வீதி நாடகக் கலைக்குழு மாநில அமைப்பாளர் பெரியார் நேசன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். முன்னிலை ஏற்று மேடை ஒருங்கிணைப்பை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார். முன்னிலை ஏற்று திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்வித்து உரையாற்றினார்.

93 வயது காணும் ஆசிரியருக்கு
ரூ.93,000 பழனி மாணிக்கம் அறிவிப்பு!

இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார். அதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கும் மற்றவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. தோழர்கள் விடுதலை, பெரியார் பிஞ்சு சந்தாக்களையும், பெரியார் உலகம் நன்கொடையும் வழங்கினர். தி.மு.க.மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் கழகத் தலைவரின் 93 வயதை சிறப்பிக்கும் வகையில் ரூபாய் 93,000/- வழங்குவதாக பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

தமிழர் தலைவர் கருத்துரை!

தொடர்ந்து ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் திறந்து வைக்கப்பட்ட படிப்பகம், நூலகம் ஆகியவற்றின் சிறப்புகளை சொல்லி, அதற்குக் காரணமாக இருக்கும் ஆசிரியர் சண்முகம் – சரோஜா ஆகியோரை நினைவு கூர்ந்து, “ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர்களின் தனிமனித சாதனைகள் என்பது இயக்கத்தின் பேரேடு” என்று குறிப்பிட்டார். பிறகு இந்த இடத்திற்கான பல்வேறு சட்டப்படியான அனுமதிகளை பெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அடுத்து காவல்துறை; ராணுவம்; நீதித்துறை ஆகியவற்றின் மீதான மரியாதை குறையக்கூடாது; குறைக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் நாங்கள்” என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற டிசம்பர் 6 ஆம் நாளை நினைவூட்டி, “புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை தேர்ந்தெடுத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாபர் மசூதியை இடித்து இந்தியா முழுவதும் மதக்கலவரத்தை உருவாக்கினார்கள். அதில் ஒரே ஒரு மாநிலமான தமிழ்நாடு மட்டும் அமைதிப் பூங்காவாக இருந்தது. கலவரங்களை அடக்க நமது காவல் துறையினரை மற்ற மாநிலங்களுக்கு கேட்டு அனுப்பிய வரலாறு நமக்குண்டு” என்று கூறிவிட்டு, ”அதே போன்றதொரு கலவரத்தை தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டுமென்றுதான் திட்டமிட்டு கலவரத்தை திருப்பரங்குன்றத்தில் நடத்திவருகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர், “கல்விநிதியை மறுத்தார்கள்; ஜி.எஸ்.டி.யை வசூலித்துவிட்டு, நம்மை கையேந்த வைக்கிறார்கள்; தேசியப் பேரிடர் நிதியை தர மறுக்கிறார்கள்” என்று ஒரு பட்டியலைச் சொல்லிவிட்டு, ”வடமாநிலங்களில் பேரிடர் நடந்தால் தேசியப் பேரிடர் நிதியைத் தருகிறீர்கள். தமிழ்நாட்டுக்கு ஏன் தருவதில்லை. ஏன்? தேசியம் என்பதில் தமிழ்நாடு இல்லையா?” என்றொரு ஆழமான கேள்வியைக் கேட்டார்.

தொடர்ந்து, “இவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் கல்வியில் காமராஜர் செய்த புரட்சியைவிட பலமடங்கு அதிகமான புரட்சியை செய்து வருகிறார் நம்முடைய முதுகெலும்புள்ள திராவிட மாடல் முதலமைச்சர்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறிவிட்டு, “ஏதேதோ செய்து பார்த்து பலனளிக்காமல் வேறு வழியின்றி இப்போது மதக்கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தமிழ்நாட்டில் நிலவும் கீழிறக்கமான நிலைமையை அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக சட்ட ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டப்படி சரியாதுதான் என்று சட்ட விளக்கங்களுடன் விவரித்தார். மேலும் அவர், அவதூறு செய்துவரும் ஆளுநரையும் ஒரு பிடிபிடித்தார். அடுத்து அரசியல் சட்டப்படி மதச் சுதந்திரம் என்பதற்கு கட்டுப்பாடுகள் உண்டு என்று சொல்லி, சட்ட உறுப்புகள் 24, 25 ஆகிய இரண்டையும் படித்துக்காட்டினார். அதில் Subject to Public order, Morality, Health என்று இடம் பெற்றுள்ளதில் மூன்றையும் தனித்தனியாக விளக்கி, நீதிபதிகள் சட்டத்தை சரியாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, “இப்படி சட்டப்படியாக மக்கள் நல அரசாக நடந்துகொண்டிருக்கின்ற திராவிட மாடல் அரசு ஆட்சியை இழந்தால் என்னாகும்?” என்றொரு கேள்வியைக் கேட்டு, “2026 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல, நமது மான வாழ்வு தொடர வேண்டுமா? இல்லையா? என்பதற்கான தேர்தல்; பெற்ற நமது உரிமைகள் பறிபோக வேண்டுமா? கூடாதா என்பதற்கான தேர்தல்; தமிழர்களின் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டுமா? கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல்” என்று உணர்வு பீறிட்டு எழும் வகையில் கேள்விகள் கேட்டு, “மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அரசியல் சட்டத்திற்கும் மனுதர்மத்திற்கும் நடைபெறும் இந்தத் தேர்தலில் அரசியல் சட்டம் வெல்ல வேண்டும். அதற்கு முதலில் அனைவரும் அவரவரின் வாக்குகள் பத்திரமாக இருக்கிறதா? என்று சரிபாருங்கள். ஓட்டுத் திருட்டு மூலம் நாட்டையே திருட நினைக்கிறார்கள். எச்சரிக்கை” என்று சொல்லி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் குமரவேல் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

ஒரத்தநாடு நகர கழக.செயலாளர் செந்தில்குமார், தி.மு.க. ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் கு.செல்வராசு, தி.மு.க.மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், தி.மு.க. கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.கார்த்திகேயன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், தி.மு.க. ஒரத்தநாடு மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்ல. இரமேஷ், மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மத்திய மாவட்ட செயலாளர் வி.சி.க. கோ ஜெயசங்கர், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் தி.மு.க. ஜெ.கார்த்திகேயன், பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர் பெ.வீரையன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் ரெ. சுப்பிரமணியன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா வீரக்குமார் தி.க., திருவோணம் ஒன்றியத் தலைவர் சாமி.அரசிளங்கோ தி.க., வீரசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாதுரை, பொதுக்குழு உறுப்பினர் தீ.வ.ஞானசிகாமணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில துணைச் செயலாளர் முனைவர் ந.எழிலரசன், பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே. பொய்யாமொழி மற்றும் தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தெற்கு நத்தம் கிராமம் பொது மக்கள், வி.சி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *