திருவாங்கூர் சமஸ்தானம் (12) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஞாயிறு மலர்

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கொடுமை அனைத்து கீழ் ஜாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களையும், மிருகங்களையும் விடக் கேவலமாக நடத்திய வரலாறைக் கொண்ட திருவாங்கூர் நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் எங்குமே கேட்டறியாததாகும். பெண்கள் அடிமைகளாக, பாலியல் வகையில் துன்பப்பட்ட பல கதைகளையும், வரலாறுகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு நாடு, மற்றொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது, முதல் செயல் தோல்வியடைந்த நாட்டின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பதுதான். எதிரி நாட்டு படைவீரர்களைக் கொன்று குவிப்பது வெல்லும் நாட்டின் அடுத்த செயல். மூன்றாவதாக அவர்களின் செயல், அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதுதான்.

உலகில் உள்ள பல நாடுகளிடையே நடந்த அனைத்துப் போர்களிலும், வரலாறு தெரிந்த காலம் முதல் இன்றைக்கு நடக்கும் ரஷ்ய, உக்ரைன் போர் வரை இதுதான் நடைமுறை. ஆனால், எந்தவொரு போரும், ஏன் ஒரு சிறு உரசலும்கூட இல்லாமல் நாட்டின் அனைத்து மக்களையும் ஒரு சிறு கூட்டம், 3 சதம் கூட இல்லாத கூட்டம் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், ஸநாதனம் என்றும், புராணங்கள் என்றும், கீதை என்றும் (‘பெண்களும், சூத்திரர்களும் பாப யோனியில் பிறந்தவர்கள்’ – Born out of the womb of sin – “மாம் ஹி பார்த்த வயபாச்ரிதய யேபிஸ்யூ:  பாப யோனய ஸ்திரியோ, வைஸ்யாஸ் ததா சூத்ராஸ் தேஷ் பி யாந்தி பராங்கதிம்” -அத்தியாயம் 9, சுலோகம் 32 என்று பகவத் கீதை கூறுகிறது), மனுதர்மம் என்றும் ஏமாற்றி அவர்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் (அவர்ணஸ்தர்கள் – வர்ணத்தில் சேராதவர்கள்) என்றும், அவர்களுக்கும் கீழாக பெண்களை வைத்துக் கேவலப்படுத்தியும், அவமானப்படுத்தியும், மேலாண்மை செய்த வரலாறு உலகில் எந்தப் பகுதியிலும் நிகழாத ஒரு அக்கிரமம். “கடவுளின் தேசம்” என்ற பெயரில், மன்னர்களை விட, அதிக அதிகாரம் கொண்டவர்களாகத் தங்களைத் தாங்களே ஜாதிய அடிப்படையில் உயர்த்திக் கொண்டனர் நம்பூதிரிப் பார்ப்பனர்கள்!

“நமக்கு விதித்தது இதுதான்” என்று பெரும்பான்மை மக்களை மூளைச் சலவை செய்தும், இந்த அடக்கு முறைகளையும், இழிவுகளையும், “எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டு அமைதி காத்தால், அந்த மனிதன் அடுத்தப் பிறவியில் உயர்ஜாதியில் பிறந்து, அனைத்து சொர்க்க சுகங்களையும் அனுபவிப்பான்” என்று ஆசை காட்டப்பட்டு, அனைத்து மக்களையும் “சூத்திரர்களாக” (சூத்திரன் என்பவன் 7 வகைப்படுவான்: 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடியவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்கிறவன், 4. பார்ப்பானின் வைப்பாட்டி (விபச்சாரி) மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன் (அடிமை),
7. தலைமுறை, தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் – அசல் மனுதர்ம சாஸ்திரம்” – அத்தியாயனம் 8, சுலோகம் 415).

“தஸ்யூக்களாக,”, ‘ராட்சஸர்களாக”, பார்ப்பனர்கள் ஆக்கினர். “கடவுள்” என்றால் மனிதன் பயப்படுவான் என்ற ஒற்றைச் சொல்லைக் காட்டியும், தாங்களே “பூதேவர்கள்” என்றும் இந்தப் பார்ப்பனர்கள் தங்களைக் கடவுளின் முகவர்களாக சமூகத்தில் நிலைநாட்டிக் கொண்டனர். உழைக்காமல், உட்கார்ந்து உண்ணும் கூட்டமான அவர்கள், அனைத்து மக்களையும அடிமைகளாககி, அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் வல்லாண்மையாளர்களாக மாறிப் போனார்கள். உழைப்பைத் தவிர ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் இந்த பொய், புரட்டுகளை நம்பி நாளடைவில் ஆமைகளாய், ஊமைகளாய், அடிமைகளாய் மாறிப் போயினர். திருவாங்கூர் நாட்டில், நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஜாதிச் சட்டங்களின் விளைவுகள்தான் அந்த நாட்டின் அத்தனைக் கொடுமைகளுக்கும் காரணம். உழைக்கும் மக்களை “வர்ணம்” என்றும், “ஜாதி” என்றும் பிரித்து வைத்து, பார்ப்பனர்களை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டனர். உழைக்கும் கூட்டத்திலிருந்தே “சத்திரியர்” என்ற பிரிவை உண்டாக்கி அவர்களை “அரசர்கள்” என்றும், நாட்டை ஆள்பவர்கள் என்றும் கூறினர். அதிகார போதைக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கூட்டமும், பார்ப்பனர்கள் கூறியபடியெல்லாம் ஆடினர். பார்ப்பனர்கள் அவர்களை “சத்திரியர்கள்” என்று கூறி ஏமாற்றினாலும், அவர்களையும் “சூத்திரர்கள்” என்ற நிலையிலேயே வைத்திருந்தனர்.

திருவாங்கூர் நாட்டில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்குக் கடும் தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் கொலைக் குற்றம் செய்தாலும், அவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. தலையை மொட்டை அடிப்பதே அவர்களுக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனை. (பிராமணனுக்கு “முண்டிதமே” (மொட்டை அடிப்பது) கொலை தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு மரண தண்டனை உண்டு. “அசல் மனுதர்ம சாஸ்திரம், அத்தியாகம் 8, சுலோகம் 379). கடவுள்களைவிட மேலானவர்களாக இவர்கள் மதிக்கப்பட்டார்கள். இவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே அரசர்கள் தங்கள் கடமையென்றும், புனித செயல் என்றும் நினைத்தனர். அவர்களுக்கு உணவு வழங்க (பிராண போஜனம்) “ஊட்டுப் புரைகள்” என்று கோவில்களில் அமைக்கப்பட்டிருந்தன. அரசு விழாக்களில் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.  கோவில்களில் பூஜை செய்வது, குடமுழுக்கு செய்வது, அரசர்களின் பட்டமேற்பு விழாவினை நடத்துவது, விழாக் காலங்களில் வேள்விகள், யாகங்கள் நடத்துவது, மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை, உழைப்பில்லாத வேலைகளையே இவர்கள் செய்து வந்தனர். கோயில்களின் பெரும் சொத்துகள் இவர்கள் வசம் இருந்ததால், அவற்றைக் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்களாக நம்பூதிரிப் பார்ப்பனர்கள் இருந்தனர். கல்வியை ஏகபோக உரிமையாக வைத்திருந்தார்கள். மற்ற சமூகத்தினர் கல்வி கற்பதைத் தடுக்க சமூக ரீதியாக அனைத்துத் தடைகளையும் ஏற்படுத்தி இருந்தனர். (Ref: “தோள் சீலைப் போராட்டம் – by கொல்லால் எஸ்.ஜோஸ்”). கீழ்ஜாதிப் பெண்கள் மீது பாலியல் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு எப்போதும் இருந்தது. நம்பூதிரிப் பார்ப்பனர்களோடு உடலுறவு கொள்வது “புனிதமானது” என்று அந்தப் பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். நம்பூதிரிகளின் விருப்பத்திற்கு இணங்காத பெண்கள் “வழிகெட்டவர்கள்” (நடத்தைக் கெட்டவர்கள்) என்று தண்டிக்கப்பட்டு சமூகக் கேவலத்திற்கு ஆளாக்கப்பட்டனர். நம்பூதிரிகளின் ஆசைக்கு இணங்காதவர்களை கொலைகூட செய்யும் உரிமை பார்ப்பனர்கள் பெற்றிருந்தனர். (Ref: “கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள்” – by  இளம் குளம் குஞ்சன் பிள்ளை, page 147). வாழ்க்கையின் அனைத்து இன்பங்களுக்கும் ஏக போக உரிமையாளர்களாக நம்பூதிரிகள் இருந்தார்கள். (உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது; தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்; மந்திரங்கள் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவை. அதனால் பார்ப்பனர்களே நமது கடவுள்கள்” – “தேவாதீனம் ஜகத்சர்வம்; மந்திராதீனம் ததேவதா; தன் மந்திரம் பிரம்மாதீனம்; பிராமண மம தேவதா” – ரிக்வேதம், 62ஆவது பிரிவு, 10ஆம் சுலோகம்). ஆக, உலகின் கடவுள்களாக, பூதேவர்களாக மாறிப்போன இவர்களை யாருமே, அரசன் உள்பட எதிர்க்க முடியாத சமூக அந்தஸ்த்தைப் பெற்றவர்களாக இவர்கள் இருந்தனர். இவர்கள் உண்டாக்கிய “ஜாதிச் சட்டங்களை” அனைத்து மக்களும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டே நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர்களாக ஆகிவிட்டனர்.

அதன் விளைவுகளே திருவாங்கூர் மக்கள் மீது விதிக்கப்பட்ட வரிக் கொடுமைகள், தீண்டாமை, காணாமை, கல்லாமை, அடிமைகள் போன்ற ஜாதியக் கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறை. அந்த வரிக் கொடுமைகளில் மிகவும் கேவலமானதும், இழிவானதும், பெண்களை அவமானப்படுத்தியதுமான வரிக் கொடுமைதான் ‘முலை வரி’ என்று மார்பகங்களுக்கு விதிக்கப்பட்ட வரி! அடிமைத்தனத்தில் ஊறிக் கிடந்த கீழ்ஜாதிப் பெண்கள் மனதிற்குள் வருந்தியவாறு, வேறு வழியின்றி இந்த வரியைக் கட்டிக் கொண்டிருந்த வேளையில் ஒரு புரட்சிப் பெண்ணாகப் பிறந்தவர்தான் சேர்தலாவின் நாங்கேலி. தனி ஒரு பெண் போராளியான அவர் செய்த புரட்சியின் விளைவாக, தன் உயிரையே கொடுத்து திருவாங்கூர் நாட்டின் பெண்களின் மானத்தைக் காத்த வீராங்கனையாக உயர்ந்து நிற்கிறார் அவர். 100 ஆண்டுகளுக்கு முன் அவர் செய்த உயிர்த் தியாகம்,பெரும் தீயாக மாறிப் பல பத்தாண்டுகள் தாண்டி மார்பு வரிக் கொடுமையை நீக்கியது மட்டுமன்றி மார்புகளை மறைக்க மேலாடையைஅணியும் உரிமையையும் அந்த நாட்டுப் பெண்களுக்குப் பெற்றுத் தந்தது.

ஞாயிறு மலர்

பெண்கள் இன்று மானத்தோடு, கவுரவமாக வாழ வழி வகுத்தவர் நாங்கேலி என்ற அந்த ஏழைப் பெண். “சதி” என்ற கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்றி மனைவிகளைக் கொன்று குவித்தக் கொடுமைகளைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்த நாங்கேலியின் கணவன் சிறுகந்தன் மனைவியை விழுங்கிய நெருப்பிலேயே குதித்து தன் உயிரையும் போக்கிக் கொண்டது எங்குமே நிகழாதது.

100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோக நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய கேரளாவின் புகழ்பெற்ற கலைஞர் டி.முரளி என்பவர் சேர்தலா கிராமத்திற்குச் சென்றுள்ளார். பிபிசி செய்தியாளரும், உடன் சென்றுள்ளார். முரளி, பிபிசி செய்தியாளரிடம், “ இந்த ஊர் “முலைச்சிபுரம்”. அதாவது மார்பகங்கள் உள்ள பெண் ஊர் என்றழைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். நாங்கேலி பற்றி கேரள அரசு ஆவணங்களில் பெரிய அளவில் குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால், அந்த ஊர் மக்கள், ஊருக்கு வந்த செய்தியாளர்களிடம் நாங்கேலி பற்றி பெருமை பொங்கப் பேசியிருக்கின்றனர். ‘சங்கராச்சாரியார் சமஸ்கிருத விஸ்வ வித்யாலயாவைச் சேர்ந்த கே.எம்.ஷீபா என்கின்ற பேராசிரியை பாலியல் சமத்துவமும், தாழ்த்தப்பட்டோர் வாழ்வியல் துறையின் ஆய்வாளர். அவர் “முலைவரி” விதிப்பு என்பதே கீழ்ஜாதியினரை அடையாளம் காண்பதும், அவர்கள் ஜாதியத்தை நிலைபெறச் செய்யவும் செய்யப்பட்ட ஏற்பாடு” என்று கூறுகிறார்.

“அவர்களுக்கு பின்னாட்களில் விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடுகள், அவர்களை கேட்காமலேயே அவர்கள் ஜாதியை அடையாளப்படுத்திக் காட்ட செய்யப்பட்ட ஏற்பாடு” என்றும்  அந்தப் பேராசிரியை கூறியுள்ளார். ஓர் ஆட்டோ ஓட்டுநர் நாங்கேலி பற்றிச் சொல்லும்பொழுது, “முலைகர்ணம் நாங்கேலியிடம் முலைவரி கேட்டு தொல்லை கொடுத்தபோது, வீட்டுக்கு வந்து, வரியைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி, அங்கு வந்தவரிடம் தன் மார்புகளை அறுத்து, இதுதான் வரி” என்று கொடுத்ததாகவும், அதனால் அந்த வரி விதிப்பே ஒழிந்தது என்று பெருமை பொங்கக் கூறினார். அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் நாங்கேலி தம்பதிகளின் தியாகங்களைப் பெருமை பொங்க பிபிசி செய்தியாளர்களிடம் கூறினர். நாங்கேலியின் உறவினர்கள் முலைச்சிபரம்பைவிட்டு அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று விட்டார்கள் என்றும், அந்த மக்கள் கூறினர். பிபிசி செய்தியாளர் அவர்களையும் சந்தித்தார். மணியன் வேலு என்ற நாங்கேலியின் பெயரன் முறைக்காரர் தன் பாட்டியின் தியாகம் சரியான மரியாதை பெறவில்லை என்று வருந்தினார். “என் பாட்டியின் தியாகம் திருவாங்கூர் நாட்டின் அனைத்துப் பெண்களின் மானத்தையும் காத்தது. அவர் செய்த உயிர் தியாகம் அரசரை மார்புகள் மேல் விதிக்கப்பட்ட வரியை நீக்கி உத்தரவிட வைத்தது” என்று அவர் கூறினார். வயதான அவர் அரசிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அரசிடம் நாங்கேலி பாட்டியின் தியாகத்திற்கு உரிய மரியாதை கொடுத்தால் போதும் என்றும் கூறினார். இதே போன்ற கருத்தை மேலும் ஒரு சிலர் முரளி அவர்களிடமும், பிபிசி செய்தியாளரிடமும் கூறினர்.

நாங்கேலியின் கதையைக் கேட்டு ஓவியன் டி.முரளி, அரசு ஆவணங்களில் அவர் வரலாற்றைத் தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. முடிவில் கற்பனையாக அவரே சில ஓவியங்களை வரைந்து, கேரளா முழுவதும் கண்காட்சியாக வைத்தார். இன்றைய தலைமுறை அதற்குப் பிறகே நாங்கேலி வரலாற்றை அறிந்தது. இன்றைய இளைஞர்களுக்கு நாங்கேலி வரலாறு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் என்று ஓவியர் முரளி முடிக்கிறார்.

(Ref:  The Woman who cut off her brests to protest  a tax” – From BBC NEWS).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *