
வடிவேலு ‘தவசி’ படக் காமெடி காட்சியிலே குறளி வித்தைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, கையை ஆட்டி ஆட்டி கடைசியா கத்துவாரு.
“நாங்க ஏண்டா ராத்திரி 12 மணிக்கு சுடுகாடு போகணும்?”
மொத்த “அபத்தத்தையும்” ஒரே வரியிலே சுட்டிக்காட்டிடுது.
இப்போ இதே டயலாக் தான் மனசுல ஓடுது, ஒரு பிரபல நடிகை ஈஷா யோகா மய்யத்துல “பூதசுத்தி திருமணம்” செய்தாராம். அது என்ன பூத சுத்தி திருமணம்?
சக்கி வாசுதேவன் கயிறு திரிச்சு விட்ட விளக்கம்: “பூத சுத்தி திருமணம் என்பது அய்ம்பெரும் பூதங்களை அடக்கி, சாந்தப்படுத்தி, சிந்தனை – உணர்வு – உடல் – பொருளியல் உலகத்தைக் கடந்து ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குற முறை”னு. அதாவது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் – இந்த அய்ந்து பூதங்களும் நம்ம தம்பதியரோட கல்யாணத்துக்கு முன்னாடி கோவிச்சுக்கிட்டு இருந்ததால, அவங்களைச் சமாதானப்படுத்தி விட்டுத்தான் மாலை மாற்றணுமாம்!
திருமணம்னு ஒண்ணு உலகத்துல எங்கேயும் இருக்கு!
இரண்டு பேர் ஒத்துப் போயி, ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம்னு முடிவு பண்ற ஒரு இணைப்பு விழா. அதுக்கு மதம், மரபு, சட்டம்னு பல வடிவங்கள் இருக்கு. இப்போ நவீன உலகத்துல ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல ஒரே கையெழுத்து, கடற்கரைல பார்ட்டி, லிவ்-இன்-னு எத்தனை விதமா நடக்குது!
ஆனா நம்ம ஊர்ல மட்டும் இன்னும் சில சாமியார் பிரா(ண்)டுகள், பழைய பஞ்சாங்கத்தைத் தூசி தட்டி, புதுப் புது பெயர்களைக் கட்டி, “இதுதான் உண்மையான ஆன்மிகத் திருமணம்” என்கிறார்கள்.
சாமியார்களிடம் சென்று தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வித்தைகளில் ஒன்றுதான் என்பது சாமியாருக்கும், திருமணம் செய்யும் பெரும் புள்ளிகளுக்குமிடையே உள்ள ரகசியம். ஆனால் வெளியே பூத சுத்தித் திருமணமாம்.
‘பூத சுத்தி’னு ஒண்ணு இருந்தா, அதை எங்க இருந்து இவங்க மட்டும் கண்டுபிடிச்சாங்க?
இத்தனை ஆண்டுகளாக கல்யாணம் பண்ணின சாதாரண மக்கள் எல்லாம் பூதங்களை சுத்தி பண்ணாமலேயே சந்தோசமா வாழ்ந்துட்டுப் போயிட்டாங்களே? அவங்க எல்லாம் “பூத அசுத்தியோட” திருமணம் பண்ணிட்டு சந்ததியை வளர்த்துட்டாங்களா?
இதே ஈஷா மய்யத்துல ஒரு காலத்துல “லிங்க பைரவி”னு ஒரு டீலக்ஸ் தெய்வத்தை வச்சு, லட்சக்கணக்கில் டொனேசன் வாங்கினாங்க. இப்போ பூதசுத்தி திருமணம். நாளைக்கு “பிரேதசுத்தி டிவோர்ஸ்”னு ஒண்ணு கொண்டாடலாம்… ஏன்னா டிரெண்ட் மாறிட்டே இருக்கணுமே!
வடிவேலு கேட்ட மாதிரி நாமளும் கேட்கலாம்:
“நாங்க ஏண்டா இந்த அய்ம்பெரும் பூதங்களை ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு இழுத்துட்டு வந்து சாந்தப்படுத்தணும்?”
கல்யாணத்துக்கு முன்னாடி பூதங்களை அடக்குறது அவசியம்னா, கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பூதங்கள் எல்லாம் திரும்ப எழுந்துடாதா? அப்போ ஒவ்வொரு “ஆண்டும் பூதசுத்தி ரினியூவல்” பேக்கேஜா? இ.எம்.அய். வசதியுடனா?
சிரிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும், உண்மை என்னன்னா திருமணம்னு ஒண்ணு மனசு, புரிதல், பொறுப்பு, அன்புங்கிற உணர்வுகளால மட்டுமே நிலைச்சு நிக்கும். அதுக்கு பூதம், பேய் ஒண்ணும் தேவையில்லே.
ஆனா இந்த மாதிரி புதுப்புது பெயர்கள்ல ஆன்மிக வியாபாரம் பார்க்கிறவர்களைப் பார்க்கும்போது, வடிவேலுவோட குரல் தான்டா மனசுல ஒலிக்குது!
பூதசுத்தி இல்லே, புத்திசுத்திதான் வேணும்!
புதூரான்
