லெபனானில் நடந்த கொடூரமான தாக்குதல் முதல், இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட உள்ள ‘சஞ்சார் சாத்தி’ (தொடர்பு நண்பன்) செயலி பற்றிய சர்ச்சைகள் வரை, அரசு கண்காணிப்பு மற்றும் தனிநபர் தனியுரிமை பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
பேஜர் தாக்குதல்: புதிய ஆயுதமும் துல்லியமான இலக்கும்
லெபனான், நாள் 17.11.2024 நேரம் சரியாக பிற்பகல் 02.17
தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த பேஜர் தாக்குதல், ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் தாக்குதல் முறையாகும். பேஜர் (Pager) கருவிகளில் செய்தி வந்தவுடன், அவற்றைத் திறக்க அழுத்தியபோது வெடித்துச் சிதறின.
8 பேர் உயிரிழந்தனர், 2400 பேர் காயமடைந்தனர், 320 பேருக்குப் பார்வை பறிபோனது. இந்தத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அனைவரும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
உலகின் பல பகுதிகளில் பேஜர் கருவியைப் பயன்படுத்துவோரில், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் பேஜர்கள் மட்டும் இவ்வளவு துல்லியமாகக் குறிவைக்கப்பட்டது எப்படி?
இது தகவல் தொழில்நுட்பம் மூலம் தனிநபர்களின் தகவல் தொடர்பு சாதனங்களை வேவு பார்த்ததற்கும், தாக்குதலுக்குப் பயன்படுத்தியதற்குமான ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்தியாவின் ‘சஞ்சார் சாத்தி’
செயலி பற்றிய சர்ச்சை
செயலி பற்றிய சர்ச்சை
நாள் 02.11.2025: அன்று வெளியான தலைப்புச் செய்தியில், அடுத்த ஆண்டு மார்ச் 2026 முதல் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற செய்தி வெளியானது.
அரசின் உத்தரவு மற்றும் நோக்கம்
மொபைல் மோசடிகளைத் தடுக்கவும், திருடப்பட்ட செல்பேசிகளைக் கண்டறியவும் இந்தச் செயலி கட்டாயமாக்கப்படுவதாக அரசு கூறுகிறது.
இது செல்பேசியின் அய்.எம்.இ.அய் எண்ணைச் சரிபார்த்து, செல்பேசியின் இருப்பிடத்தை அறியவும், தொடர்ந்து கண்காணிக்கவும் பயன்படுகிறது.
மார்ச் 2026க்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து புதிய மொபைல்களிலும் இந்தச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள செல்பேசிகளிலும் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
நீக்க முடியாது: இந்தச் செயலியைப் பயனர்கள் நீக்கவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ முடியாது என்று உத்தரவில் எழுதப்பட்டிருந்தது.
உலகளவில் எந்த இடத்திலும் இத்தகைய விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று கூறி, அரசின் உத்தரவைச் செயல்படுத்தப் போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தங்கள் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.
ஒன்றிய அமைச்சரின் முரண்பாடு
சர்ச்சை எழுந்தவுடன், ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘சஞ்சார் சாத்தி’ ஒரு விருப்பத் தேர்வுள்ள செயலி (Optional App) என்றும், தேவையில்லையெனில் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ ஆணையில் அது கட்டாயம் என்றும், நீக்க முடியாது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது அரசின் நோக்கங்கள் குறித்து ஆழமான அய்யங்களை எழுப்புகிறது.
எதற்காக நிரந்தரச் செயலி?
திருடப்பட்ட செல்பேசிகளைக் கண்டுபிடிக்கவும், அய்.எம்.இ.அய் எண்ணைச் சரிபார்க்கவும், அரசுக்கு ஏற்கெனவே ‘சஞ்சார் சாத்தி’ இணையதளம் உள்ள நிலையில், மொபைல் போனில் நிரந்தரமான மற்றும் நீக்க முடியாத ஒரு செயலி எதற்கு என்ற கேள்விக்கு அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியான பதிலை அளிக்கவில்லை.
உலக நாடுகளில் கண்காணிப்பு
வட கொரியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் குடிமக்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் கடுமையான கண்காணிப்பு முறைகளுடன், இந்தியாவின் ‘சஞ்சார் சாத்தி’ செயலி ஒப்பிடப்படுகிறது.
வட கொரியா: அங்குள்ள அலைபேசிகள் பயனரின் அனுமதியின்றி, ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் திரையின் புகைப்படத்தை எடுக்கின்றன. திரையில் எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும், பார்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் பதிவு செய்யப்பட்டு, அரசு திணித்துள்ள ஒரு கோப்புறைக்குள் சேமிக்கப்படுகின்றன. அந்தக் கோப்புறையை அரசாங்கத்தால் மட்டுமே சோதிக்க முடியும்.
ரஷ்யா: செப்டம்பர் 2025இல், அனைத்து செல்பேசிகள் மற்றும் டேப்லெட்டுகளிலும் ‘மேக்ஸ் மெசஞ்சர்’ என்ற செயலியை முன்கூட்டியே கட்டாயமாக நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
இது வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாகக் கூறப்பட்டாலும், இது அரசாங்கக் கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த உதாரணங்கள், ஒருமுறை அரசாங்கக் கண்காணிப்புக்கான சங்கிலி துவங்கினால், அது எங்குச் சென்று நிற்கும் என்பதற்கான அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாம் வட கொரியா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளின் நிலையை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது.
தனியுரிமை இழப்பும் விளைவுகளும்
அரசின் இந்த நடவடிக்கை தனிநபர் தனியுரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
டிஜிட்டல் கைது
உங்கள் செல்பேசி உங்களை எப்போதும் ‘டிஜிட்டல் கைது’ நிலையில் வைத்திருக்கும். உங்கள் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு உரையாடலும் பதிவு செய்யப்படலாம்.
வீடுகளுக்குள் கூட அரசாங்கத்தைப் பற்றி கேள்வி கேட்பதை நிறுத்திவிடும் அளவிற்குப் பயம் அதிகரிக்கும். சாதாரண வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் கூடப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, தேவையற்ற காரணங்களுக்காகச் சிறையில் அடைக்கப் படலாம் என்ற அச்சம் நிலவும்.
செயலியின் வரம்புகள், அது எதைக் கண்காணிக்கும் (அதாவது, சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய செயல்பாடுகள் எவை) போன்ற முக்கியமான விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இது ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் எவரையும் எந்நேரத்திலும் குறிவைக்க வழிவகுக்கும்.
உளவியல் அச்சம்
ஆதார் முதல் பான் இணைப்பு வரை, ஒவ்வொரு குடிமகனையும் எப்போதும் ஆவணங்களைச் சரிபார்க்கும் நிர்பந்தத்திற்குள் ஆழ்த்தும் ஓர் உளவியல் இங்கே செயல்படுகிறது.
ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு கணமும் தங்கள் குடியுரிமையை மெய்ப்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
விமான நிலையத்திலோ அல்லது வேறு இடத்திலோ ஆதார் அட்டையைக் காட்டுவதன் மூலம் மக்கள் ஒரு தற்காலிக ‘நிம்மதியை’ உணர்கிறார்கள்.
முதலில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை (இஸ்லாமியர்களை) ‘ஊடுருவியவர்கள்’ என்று அழைக்கும்போது சிலர் கைதட்டினார்கள். ஆனால், இன்று, குடியுரிமையை மெய்ப்பிக்க வேண்டிய வரிசையில் ஒவ்வொரு குடிமகனும் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக் கேள்வி:
வெளியில் ‘ஊடுருவியவர்களை’ப் பற்றிப் பேசும் அரசாங்கம், இப்போது ஏன் உங்கள் செல்பேசிக்குள் ஒரு ஊடுருவியவர் போல வந்து உட்கார விரும்புகிறது?
தனிநபரின் தனியுரிமைக்கும், அரசாங்கத்தின் பாதுகாப்புக் கண்காணிப்புக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டைப் பற்றி ஒவ்வொரு குடிமகனும் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இது.



