சிறீபெரும்புதூர், டிச.6– சிறீபெரும்புதூர் அருகே 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
ரூ.1000 கோடியில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.12.2025) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் நிறுவனம், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு களை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ் நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்றதில் இருந்து, அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர் நேஷனல் நிறுவனம் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைப் பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட “கார்னிங் கொரில்லா” கிளாஸ் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைப்பேசி உபபொருட்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
840 பேருக்கு வேலை
பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி (Front – cover glass) உற்பத்தி ஆலை அமைத்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு, அதே ஆண்டு ஜுன் மாதம், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டிவைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை நேற்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பாக உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும். இந்நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர், இந்நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு.அலர்மேல்மங்கை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரு பெக், இயக்குநர் ரவிக்குமார் கட்டாரே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
