‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க
உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!
உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!
திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக, திருச்சி பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடார் நேற்று (5.12.2025) வழங்கிய உத்தரவில், ஒன்றிய அரசின் தொழில் தீர்ப்பாயத்தின் 01.12.2022 தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
- ‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!
- 40 ஆண்டு காலப் போராட்டம்
- திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சி
- நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்?
- போலியான மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அமைப்பு
- வாதாடிய வழக்குரைஞர்களுக்கும்– ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கும் நன்றி!
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக ‘பெல்’ வளாக ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் இந்த வழக்கை 2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது. தொழிலாளர்களே இயக்கும் கூட்டுறவு அமைப்பாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அது உண்மையில் ‘பெல்’ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் போலியான அமைப்பு (Sham, Bogus & Camouflage arrangement) என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
40 ஆண்டு காலப் போராட்டம்
திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (‘பெல்’) தொழிற்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியோரை நிரந்தரமாக்க வேண்டும்; நிரந்தரத் தொழி லாளர்களுக்குரிய பயன்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணை யாக அனைத்துப் பணிகளையும் செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தைத் தான் ‘பெல்’ நிர்வாகம் வழங்கி வந்ததே தவிர, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தையோ, பிற பலன்களையோ வழங்கவில்லை.
திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சி
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்த ரமாக்கக் கோரி, திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இப் பிரச்சினை குறித்துப் பலமுறை அறிக்கைகள் விடுத்ததுடன், ‘பெல்’ நிர்வாகத்தைக் கண்டித்துப் பல கூட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குகொண்டு உரையாற்றி உள்ளார்கள். தமிழர் தலைவர் கி.வீரமணி, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்தியுள்ளது.
திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பல்வேறு தொடர் போராட்டங்களின் வாயி லாக, கேண்டின் உணவு அருந்துவதற்கான சலுகை, தேநீர், பாலிஸ்டர் சீருடை, தேசிய விடுமுறைகள், அவை தவிர 18 நாட்கள் தற்செயல் விடுப்பு, புத்தாண்டுப் பரிசுகள், சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட்டன. ‘பெல்’ நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரக் காரணமான பெருந்தலைவர் காமராசர் படத்தை, அந் நிறுவனத்திற்குள்ளேயே வைக்க மறுத்த நிர்வாகத்தைக் கண்டித்து, தி.தொ.க. நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான் இன்று காமராசர் படம் இந் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தா லும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தர மாக்குவதற்கு, ‘பெல்’ நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திராவிடர் தொழிலாளர் கழகத்துடன் இணைக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.சேகர், 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்?
தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு ‘பெல்’ நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், அப்போதும் ‘பெல்’ நிர்வாகம் அது குறித்துப் பரிசீலிக்கவில்லை.
அதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக உதவி தொழிலாளர் ஆணையரிடம் முறையிடக் கூறியதால், அங்கு சென்று சங்கம் முறையிட்டது. அங்கு ‘பெல்’ நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆணையிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், இவ்வழக்கை இந்தியத் தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைத்தார். அங்கிருந்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் நீதிபதி பிரசன்ன குமாரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கினார். அதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தடையாணை பெற்றது ‘பெல்’ நிர்வாகம். மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என பல மேல்முறையீடுகள், வழக்குகளுக்குப் பிறகு, 2022 டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம்.
அந்த வழக்கில் தான் நேற்று (5.12.2025) இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போலியான மற்றும் மறைமுக
வேலைவாய்ப்பு அமைப்பு
வேலைவாய்ப்பு அமைப்பு
அந்தக் கூட்டுறவு அமைப்பு உண்மையான ஒப்பந்த நிறுவனமல்ல; நிரந்தரப் பணியாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட ‘‘நிழல்’’ அமைப்பு (Sham, & Bogus) என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம், பணிநேரம், கூடுதல் பணிநேரம், விடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ‘பெல்’ நிறுவனமே நிர்வகித்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. ‘பெல்’ வழங்கிய அடையாள அட்டைகள், பணி நேர அட்டவணைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றுகள் அதனை உறுதியானதாக நிரூபித்துள்ளன. ‘பெல்’ நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், நிரந்தர பணித் தன்மையுள்ள வேலைகளான ஓட்டுநர், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற நிரந்தரப் பணிகளில் இத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குச் சம்பளம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
ஹுசைன் பாய் எதிர் அலாத் தொழிற்சாலை (1978) மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா (2001) போன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, “பணியைக் கட்டுப்படுத்துபவரே உண்மையான முதலாளி” என்ற கொள்கையை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மறைமுகமாகவும், போலியாகவும் இப் பணிகளை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டு, அந்தப் பணியாளர்களுக்கான பயன்களை வழங்கா மல், நிரந்தரப் பணியாளர்களாகவும் அங்கீ கரிக்காமல் இருந்த ‘பெல்’ நிர்வாகத்தின் செயல் தவறானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கில் இருந்த இரண்டாவது பிரதிவாதியான கூட்டுறவு அமைப்பு முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.
இத் தீர்ப்பின் படி, தகராறு எழுந்த தேதியன்று பணியில் இருந்த தொழிலாளர்கள் அைனவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் அவர்களின் பணிக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தகராறு தொடங்கிய தேதிமுதல் சம்பள வேறுபாடு (arrears) வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை ‘பெல்’ நிறுவனம் 4 மாதங்களுக்குள் அமலாக்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பொதுத்துறை நிறுவ னங்களில் நிரந்தர ஆட்சேர்ப்பை தவிர்த்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை நீண்டகாலம் பயன்படுத்தும் முறைகளுக்கு வலுவான சட்டப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற நிழல் ஒப்பந்தங்கள் போடும் நடைமுறைகளுக்கு எதிரான பிற வழக்குகளுக்கும் இது முன்னுதாரணமாக அமையும் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வாதாடிய வழக்குரைஞர்களுக்கும்– ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கும் நன்றி!
இவ்வழக்கில் பல்வேறு நிலைகளிலும் ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் இரா.விடுதலை, ஏ.தியாகராஜன், வழக்கு ரைஞர்கள் த.வீரசேகரன், கே.வீரமணி, கே.பாலசுப்பிரமணியன், ஆர்.அண்ணாமலை, எஸ்.நாகநாதன், ஜெ.துரைசாமி, வி.பிரபாகரன், டி.பிரதீப்ராஜா, எம்.நடராசன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் மிகச் சிறப்பாக வாதாடினர். தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப் போராட்டத்திற்குப் பல்வேறு நிலைகளிலும் ஆதரவாக இருந்துள்ளனர்.
வழக்கின் வெற்றியைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் திருச்சியில் இன்று (6.12.2025) தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொருளாளரும், காட்டூர் பகுதி திராவிடர் கழகத் தலைவருமான காமராஜ் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திராவிடர் தொழிலாளர் கழகம் தொடுத்த சட்டப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திருவெறும்பூரில் இந்தத் தீர்ப்பை விளக்கி விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும் என்று திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தெரிவித்துள்ளார்.
