காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்!
பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகி விட்டார்கள்! காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கருநாடக மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒருவாரத்திற்குள் (மே 10 ஆம் தேதி) நடைபெற விருக்கின்றது.
கருநாடகத்தில் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களித்து, அந்தப் பெரும்பான்மை காரணமாக – தமிழ்நாட்டிலும், இதர தென்மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்றவற்றிலும் அமைந்துள்ள ஆட்சிகளைப் போன்று பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வரவில்லை!
அரசியல் ‘சித்து’ விளையாட்டுகள்மூலம்…
ஏற்கெனவே வெற்றி பெற்ற பலரை ‘‘வாங்கி” – ஆட் சியைக் கவிழ்த்து, அரசியல் ‘சித்து’ விளையாட்டுகள்மூலம் ஆட்சிக்கு வந்தவர்களே பா.ஜ.க.வினர்.
ஏகப்பட்ட ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுகள் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ ஆட்சித் தலைமையை (எடியூரப்பாவை) மாற்றிவிட்டு, பொம்மை பசவராஜை – மற்றொரு முதலமைச்சரை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் மாற்றினர்.
அவர் முழுக்க முழுக்க ஹிந்துத்துவாவையே முன்னிறுத்தி ஆட்சி, அதிகாரம், சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்து, பெரும்பான்மை – சிறுபான்மை என்ற ஒருமுனைப்படுத்தல் (Polarisation) மூலம் ஆட்சியைப் பிடிக்கப் புதுவியூகம் வகுத்துள்ளார்கள்.
வெறுப்பு அரசியல்போல் பிரச்சார மழை!
அதனால்தான் சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாகவே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பகிரங்க ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் காட்சியாகவே ஆட்சியை நடத்தி, தேர்தலை – வெறுப்பு அரசியல் போல் பிரச்சார மழை பெய்ய விட்டு நடத்திவருகின்றனர்!
ஆட்சிப் பொறுப்பில் இருக்கையில் லஞ்ச லாவண் யம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல; மற்ற கட்சிகளைப் பார்த்து, ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சிக்கும் தார்மீக உரிமையையும் இழந்தவர் களாகவுமே இருக்கிறார்கள்!
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவி விலகியவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஓரணியாகவே பலரும் தேர்தலில் வாக்கு வேட்டை யாடுவது ஓர் அரசியல் விசித்திரம்!
‘40 பர்செண்ட் கமிஷன் ஆட்சி!’
‘40 பர்செண்ட் கமிஷன் ஆட்சி’ என்று மேடை, வீதிதோறும் பல கட்சியினராலும், மக்களாலும் பகிரங்க மாகவே பேசப்படுவது தெருமுனைப் பேச்சாகிவிட்ட நிலையில், மீண்டும் அவர்கள் பதவி சிம்மாசனத்தை எப்படியாவது அடைந்துவிட துடியாய்த் துடிக்கிறார்கள்!
கருநாடக மாநிலத்தைப் பொறுத்தவரை அரசியலில் ஜாதி ஆழமாக வேரூன்றி இருக்கின்ற மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று.
கருநாடக மாநிலத்தை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. பழைய மைசூர்: மாண்டியா, ஹாசன், மைசூர் சாம்ராஜ் நகர், ராம்நகர், தும்கூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.
ஒக்கலிக கவுடர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி இது. இங்கு பெரிய அளவில் பா.ஜ.க. இல்லை. மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற (தேவகவுடா கட்சி), காங்கிரஸ் நேரடி போட்டி நிலவும் பகுதி இது!
2. கடலோரப் பகுதி: மங்களூர், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதக் கலவர சோதனைக் கூடம் என்று சொல்லப்படும் பகுதி.
ஹிந்து, முஸ்லீம் வேறுபாடுகளை ஏற்படுத்தி, கருநாடக மாநிலத்தில் இந்தப் பகுதிமூலம்தான் பா.ஜ.க. கால் ஊன்றியது. பள்ளிகளில் ‘ஹிஜாப்’ அணிவது குறித்த சமீபத்திய சர்ச்சைகூட இங்குதான் வெடித்தது.
3. கித்தார் கருநாடகா பகுதி: மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்னர் பம்பாய் மாகாணத்தில் இருந்ததால், இது பம்பாய் என்று அறியப்படுகிறது.
4. கல்யாண கருநாடகா: மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்னர் இப்பகுதிகள் அய்தராபாத் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்ததால், இது அய்தரா பாத் கருநாடகா என்றும் அழைக்கப்படுகிறது.
5. மத்திய கருநாடகப் பகுதி: தாவணகெரே, பெல்லாரி, விஜயநகர மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி.
6. பெங்களூரு பகுதி: தலைநகர் பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் உள்ள 28 தொகுதி களைக் கொண்டுள்ளது. இதில் சித்தூர், கருநாடகா, மத்திய கருநாடகா, கல்யாண் கருநாடகா பகுதிகளில் தேர்தல் வெற்றி – தோல்விகளை நிர்ணயிப்பது லிங்காயத் சமூக வாக்குகள்தான்!
இப்படி சமூக – ஜாதி ரீதியாக கருநாடகா வாக்கு வங்கி பிரிந்து காணப்படுகிறது!
ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை மட்டுமல்ல….
இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை (Anti incumbency)) மட்டுமல்ல, அவப்பெய ரும், ஆட்சியாளர்களின் அதீதமான நடவடிக்கைகளும் ‘சிலிகான்வேலி’ என்ற பெயர் பெற்ற தொழில் வளர்ச்சிப் பகுதிகளைக் கேள்விக்குறியாக்கி வருகிறது!
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. அதை பிரதமர் மோடியின் அதிவேக சாலைக்காட்சிகள், பேரணி, பிரச்சார பெருமழை கொண்டும், இலவசமே கூடாது என்று முழங்கிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் – பிரதமர் உள்பட அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இலவச பால், சமையல் எரிவாயு உருளை போன்ற பல வாக்குறுதிகளை – வாரி விட்டும் வெற்றி பெறத் துடிக்கின்றனர்!
மதக் கண்ணோட்டமின்றி செயல்படும் ஓர் ஆட்சி கருநாடகத்தில் ஏற்படுதல் காலத்தின் கட்டாயம்!
காங்கிரசும் பல தேர்தல் வாக்குறுதிகளை அவர்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், ஜனநாயகம் காப்பாற்றப்பட, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி காப்பாற்றப்பட கருநாடகம்தான் பா.ஜ.க.வின் தென் மாநில நுழைவு வாயிலாக இருப்பதை அடைத்து, மக்களாட்சியின் மாண்புகளையும், மதச்சார்பின்மை, சமதர்மம், சமூகநீதி, அனைத்து மக்களின் நலம் என்பனவற்றை காப்பதோடு, மதக் கண்ணோட்டமின்றி செயல்படும் ஓர் ஆட்சி கருநாடகத்தில் ஏற்படுதல் காலத்தின் கட்டாயம்!
மக்கள் தயாராகிவிட்டார்கள்; அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு, பொது அரசியல் எதிரியை மட்டும் குறி வைத்து, தங்களது சுயநலம், தன்முனைப்பு (ஈகோ) இவற்றைத் தள்ளிவிட்டு, மக்கள் நலத்திற்கான முன்னுரிமை, அரசமைப்புச் சட்ட மாண்பு களையும், விழுமியங்களையும் காப்பாற்றும் கடமை உணர்வுடன் செயல்படவேண்டும்.
கருநாடக வாக்காளர்களே! இந்த அரிய வாய்ப்பு – இதன் முடிவுகள் வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் அமையும்.
ஜனநாயகம் காப்பாற்றப்பட காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்!
எனவே, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதன் படியே – நிலைத்த ஆட்சி – நியாயமான சமூகநீதி ஆட்சி ஏற்படும். இல்லையேல் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளும் நிலைதான் ஏற்படும்!
எனவே, ஜனநாயகம் காப்பாற்றப்பட காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.5.2023