நில அளவைக் கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு பெரிய சர்ச்சை தானாக உருவாகவில்லை – மாறாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகையறாக்கள் தாங்கள் ஒரு பகுதியிலோ, மாநிலத்திலோ காலடி பதிக்கத் திட்டமிட்டார்களேயானால் முதலில் அவர்கள் கையில் எடுத்துக் கொள்வது ஜாதி, மதப் பிரச்சினையைத்தான்.

நீண்ட காலமாக இவற்றில் ஊறித்திளைத்த மக்களிடையே, உடனடியாகப் பற்றிக் கொள்ளக் கூடிய உணர்வு ரீதியான பிரச்சினை இவைதான்.

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பிேஜபி வகையறாக்களின் உள்ளார்ந்த நோக்கமே இந்து நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்பதே! இஸ்லாமியர்களுக்கென்று தனித் தனி நாடுகள் இருக்கும்போது – இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாடு ஏன் இருக்கக் கூடாது என்று நாக்கில் தேன் தடவுவார்கள்.

அவர்கள் கூறும் அந்த ‘இந்து ராஜ்ஜியம்’ என்பதுகூட, இந்து மதத்தில் உள்ள எண்ணிறந்த ஜாதியைச் சேர்ந்த மக்கள் சமத்துவம் உடையவர்கள் – சம உரிமையுடையவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாததுதான்.

உண்மையிலேயே இந்துக்கள் எல்லாம் ஓரணியில் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் அதற்குத் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று ஒரே ஒரு முறை கூறச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

இந்துக்களுக்கான மாநாடுகளை நடத்துபவர்கள் ‘ஜாதி ஒழிந்து – நாமெல்லோரும் இந்துக்கள் மட்டுமே’ என்று ஒரே ஒரு தீர்மானத்தை அத்தகைய மாநாட்டில் நிறைவேற்றச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

‘ஜாதிக்கான அடையாளச் சின்னங்களை அகற்றுவோம்’ என்று அறிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்! கடவுளுக்கே தங்கத்தால் பூணூலை அணிவிக்கிறவர்கள் எப்படி ஜாதியை ஒழிக்க ஒப்புக் கொள்வார்கள்?

கடவுள்களையும், கோயில்களையும் காப்பாற்ற முன் வரிசையில் நிற்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரான பார்ப்பனர்களே!

காரணம் அந்தக் கடவுள்கள்தான் ஜாதியை உண்டாக்கின என்று கூறி, தங்களின் பாதுகாப்புக் கவசமாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் – பிஜேபி வகையறாக்கள் கடவுள், மதம், கோயில் பிரச்சினைகளைக் கையில் எடுத்து வருவது பார்ப்பனர்கள் தங்கள் சுய நலனுக்காகவும், ஆதிக்கத்துக்காகவும் மேற்கொள்ளும் யுக்தியே! இதனை அவர்கள் ஆரம்பிக்கும் பிரச்சினையின் நுனியிலேயே தெரிந்து கொள்ளலாம்!

அப்படியே கடவுள், மதம் தங்களுக்குத் தேவையென்றால்   நம் மக்கள் அவற்றைத் தங்கள் வீட்டு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; மாறாக பார்ப்பனர்கள் விரிக்கும் சதி வலைக்குள் சிக்கிக் கொண்டு அவர்களுக்கு அடிமையாகும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.

இப்பொழுதுகூட தமிழ்நாட்டில் தாங்கள் கால் ஊன்ற முடியாது என்கிற நிலையில் ‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது’ என்ற பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்குச் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இந்த நேரத்தில் மக்களிடையே மதப் பிரச்சினையைக் கிளப்பி, ஒரு பிரிவினரை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டுவதுதான் இதற்குள்ளேயிருக்கும் சூட்சுமம்!

திருப்பரங்குன்ற மலையில் சட்ட விரோதமாகக் கூடிய சிறு கூட்டம் ‘ஜெய் ராம்!’, ‘பாரத மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டதன் மூலம் அவர்கள் யார் என்பது தெரிந்து விட்டதே!

‘கார்த்திகைத் தீபம்’ என்று சொல்லி, திருப்பரங்குன்றம் மலையில் ‘நில அளவைக் கல்’லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

வழக்கமாக கார்த்திகைத் தீபத்தன்று எந்த இடத்தில் தீபம் ஏற்றுவார்களோ, அந்த இடத்தில் தீபம் ஏற்றிய நிலையில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடமாகிய தர்காவை அடுத்துள்ள ஒரு ‘நில அளவைக் கல்’லிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று வீண் வம்பு செய்கிறார்கள்.

’நில அளவைக் கல்’ என்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல; பல இடங்களிலும் இருக்கக் கூடியதுதான்!

அரசு அல்லது தனியார் நிலங்களின் அளவு, எல்லை, பரப்பு மற்றும் வரம்பு எவை என்பதை சட்டப்படியாகக் காட்டும் எல்லைக் கல்லாகும்.

ஒவ்வொரு நிலத்துக்கும் அரசு சர்வே செய்த பிறகு, அதனதனின்  எல்லைப் பகுதியில் இந்தக் கல் வைக்கப்படும். வருவாய்த் துறையினரைக் கேட்டால், சர்வேயர்களைக் கேட்டால் இதன் விவரத்தை விளக்குவார்கள்.

இந்த நிலையில், திருப்பரங்குன்ற மலையில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தையும் தாண்டி, இந்த ‘நில அளவைக் கல்’லிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று அழிச் சாட்டியம் செய்வது – இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக்கள் வழமையாக பின்பற்றும் வழிமுறையாகும்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் ஒரு நூற்றாண்டுக் காலம் பிரச்சாரம் செய்து பாடுபட்டு மக்களைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் இந்துத்துவாவாதிகள் எடுத்த முயற்சி படுதோல்வியை அடைந்து விட்டது. என்னதான் நீதிமன்றத்தையே துணைக்கு வைத்துக் கொண்டு, குட்டிக் கரணம் போட்டாலும், அவர்களின் தந்திரம் இங்கு எடுபடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு நேற்றைய நிகழ்வாகும்.

தங்களுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்ய வேண்டும் (5.12.2025) என்று இந்த இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வேண்டுகோள் விடுத்தும், வலியுறுத்தியும் தங்களால் ஆன எல்லா முயற்சிகளைச் செய்து பார்த்தனர்.

ஆனால் நடந்தது என்ன? முழு அடைப்பு முழு தோல்வியில் முடிந்தது. வியாபாரிகள் வெளிப்படையாகவே கூறி வி்ட்டனர். நாங்கள் ‘‘இங்கு மத பேதமின்றி அண்ணன், தம்பியாக வாழ்ந்து கொண்டுள்ளோம். வெளியூர்க்காரர்கள் இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்’’ என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்லி விட்டனர். தொலைக்காட்சிகளிலும் வியாபாரிகள் கூறிய கருத்து ஒலி பரப்பானது.

இது தந்தை பெரியார் மண் – திராவிடர் மண் என்பதை மீண்டும் ஒரு முறை நம் மக்கள் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

உணர வேண்டியவர்கள் எந்த உயர்ப் பதவியில் இருந்தாலும் உணர்ந்து கொள்ளட்டும் புத்தி கொள் முதல் பெறட்டும்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *