சென்னை, டிச.5- இந்தியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.28 ஆயிரம் ஆகும். இதில் தமிழ்நாட்டில் சராசரி வருமானமாக ரூ.29 ஆயிரம் சொல்லப்படுகிறது.
மாத வருமானம்
“மாத வருமானம்” இந்த இரட்டை சொற்களில்தான் இந்தியா வில் பல கோடி மக்களின் வாழ்க்கை சக்கரம் சுழலுகிறது. வருமானம் தடைபட்டால், வாழ்க்கை சக்கரம் அச்சாரமின்றி கழன்று ஓடி நிலைத் தடுமாறிவிடும்.
அப்படியாக ஒவ்வொரு குடும் பத்தினரும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மாத வருமானத்தை அடிப்படையாக வைத்தே மாதாந்திர பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
இந்திய பொருளாதாரம், முறை சாராத்துறை மற்றும் சுயதொழில் செய்பவர்களை அதிகளவில் சார்ந்திருப்பதால் மாத வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக இருந் தாலும், அந்த வருமானத்தை முக்கிய ஆதாரமாக நம்பியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சராசரியாக ரூ.28 ஆயிரம்…
2023-2024-ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த தரவுகளின்படி, இந்தியாவில் தொழிலாளர்களில் 5-இல் ஒரு பங்கை சார்ந்தவர்கள் மாத வரு மானம் பெறுபவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில் 2025-ஆம் ஆண் டில் இந்தியர்கள் மாத வருமானம் சராசரியாக ரூ.28 ஆயிரம் பெறுவ தாக சமீபத்திய ஒரு புள்ளி விவரத் தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக கருநாடகா மாநிலத்தில் சராசரியாக ரூ.33 ஆயிரம் மாத வருமானம் பெறுவதாகவும், அதற்கடுத்தபடியாக மராட்டியாவில் (2-வது இடம்) ரூ.32 ஆயிரமும், தெலங்கானாவில் (3-ஆவது இடம்) ரூ.31 ஆயிரமும் சராசரியாக மாத ஊதியம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புள்ளிவிவரம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை யில், மாத ஊதியம் பெறுபவர் களின் தேசிய சராசரியில், தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் மாத வருமானம் பெறுபவர்களாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. தோராயமாக சுமார் 1 கோடியே 40 பேர் மாத சம்பளம் பெறுபவர்களாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் மாத சம்பளம் சராசரியாக ரூ.29 ஆயிரம் வரை தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாத ஊதியம் சராசரி மதிப்பில் அதிகம் வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சராசரியாக மாத ஊதியம் வழங்குவதில் பீகார் மாநிலம் பின்தங்கியுள்ளது. அங்கு சராசரியாக ரூ.13,500 மாத வருமானம் வழங்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
