கோவாவில் ராமன் சிலையைத் திறந்து வைத்த மோடி, அதன் பிறகு உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்குச் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மடத்தலைவர் சுகுனேந்திர சாமியார் மகாபாரத ஸ்லோகத்தில் மோடியின் பெயரைச் சேர்த்துக் கூறினார் –
‘‘மோடி ரக்ஷதி ரக்ஷிதஃ
யதி மோடி ரக்ஷிதஃ
தர்மஃ தேஶஃ ரக்ஷிதஃ
மோடி ஹஸ்தே ஸமக்ர விஶ்வம் ஸுரக்ஷிதம் ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து’’
அதாவது மகாபாரத ஸ்லோகமான
‘‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித
(தர்மத்தைக் காப்பவன் தர்மத்தால் காக்கப்படுவான்) என்பதில் தர்மத்தைத் தூக்கி விட்டு, மோடி ஸநாதன தர்மத்தால் காக்கப்படுபவர், ஸநாதன தர்மம் மோடியால் காக்கப்படுகிறது, மோடியின் கையில் உலகமே பாதுகாப்பாக உள்ளது, அவர் உலக நன்மையைக் கிருஷ்ணனிடம் அர்ப்பணம் செய்கிறார் என்று பேசினார்.
பார்ப்பனர்கள் எப்படி தொடர்ந்து அதிகாரத்திலும், செல்வத்திலும், பதவிகளிலும் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்பதற்கு கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி நிகழ்கால சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
அதிகாரத்தில் இருப்பவர்களைப் புகழ்ந்து பாடியே, பார்ப்பனர்கள் அரண்மனைகளில் வசித்து வந்தனர். அவர்கள் ஹிந்து அரசர்களாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லிம் அரசர்களாக இருந்தாலும் சரி. ஆட்சியாளர்களை, தாங்களே மக்களின் இறுதியான பாதுகாவலர்கள் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் மக்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்றும் புகழத் தயாராக இருந்தனர்.
அரசர்கள் மற்றும் அதிகார மய்யங்களைச் சுற்றியிருந்த பார்ப்பனர்கள் ராஜ குருக்களாக அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்காக ஆட்சியாளர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பாடுவார்கள். அரசர் அல்லது சுல்தானின் ஆதரவைப் பெறுவது, வெகுமதிகளைப் பெறுவது, மற்றும் சமூகத்தில் தங்களுக்கான உயர்வான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது, ஆட்சியாளரின் வீரத்தை, அறிவை – ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அதீதமாகப் புகழ்வது எல்லாம் பார்ப்பனர்களுக்கு உரித்தான கைவந்த கலை!
எடுத்துக்காட்டாக, ராமசரித்திரமானஸ் என்ற தற்போதையை ராமாயணத்தை எழுதிய துளசி தாஸ் அக்பரைப் புகழ்ந்து பாடி, ராமசரித்திர மானஸ் (ராமாயணத்தை) பார்சியில் மொழி பெயர்ப்பதாகக் கூறிப் பெரும் செல்வத்தைப் பெற்றார். இதில் உண்மை என்னவென்றால் துளசிதாஸுக்கு சமஸ்கிருதமும் அவரது தாய்மொழியான பிரிஜ் மற்றும் கொஞ்சம் அவதி மொழி மட்டுமே தெரியும். அப்படி இருந்தும் அக்பரிடம் பொய் சொல்லி பெரும் செல்வத்தைப் பெற்றார். அதே போல் அவர் ராமாயணத்தை பார்சி மொழியில் மொழி பெயர்க்கவே இல்லை. இதை அக்பரின் அரச சபை அறிஞரான அப்துல் ரஹீம் கான்-இ-கானா (Abdul Rahim Khan-i-Khana) தனது ‘‘அக்பர் நாமா’’ (அரச சபைக் குறிப்பு)வில் குறிப்பிட்டுள்ளார்.
மராட்டிய அவைகளில் சத்ரபதி சிவாஜி போன்ற அரசர்களை பார்ப்பனர் தர்மத்தைக் காக்கும் அவதாரமாகப் புகழ்ந்து, தங்கமும் பெரும் செல்வங்களும் பசு மற்றும் நிலங்களையும் பெற்றனர். அதாவது, ஆட்சியில் இருந்தவர் ஹிந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, அரண்மனையில் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் நலனுக்காக ஆட்சியாளரின் புகழை வானளாவப் பாடும் போக்கைக் கொண்டிருந்தனர். அது இன்றும் தொடர்கிறது என்பதற்கு கோவா நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு!
‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன் புலி வேஷம் போடுகின்றான் பொது மக்கட்குப் புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?’’ என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இந்தப் பாடல் வேறு எந்தக் காலத்திற்கும் பொருந்தி யதைவிட இக்காலத்திற்கு மிகவும் பொருந்துகிறது அல்லவா! இன்னும் பார்ப்பன வலையில் சிக்கி ஏமாறும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!
