பெங்களூரு, மே 5– கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சுரபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார்?. இங்கு புதிதாக எந்த தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம். சமுதாயத்தை முன்னேற்றும் பணியை பா.ஜனதா எப்போதும் செய்தது இல்லை.
பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கொடுக்காவிட்டால் எந்த பணியும் நடைபெறாது. ஊழல், விலைவாசி உயர்வு, தவறான ஆட்சி நிர்வாகம் தான் பா.ஜனதா அரசின் சாதனை ஆகும். கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கலவரம் ஏற்படும் என்று அமித்ஷா சொல்கிறார். நாட்டில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. எங்கு கலவரம் நடைபெற்றது என்பதை அவர் கூற வேண்டும். கருநாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.