பிறந்த நாள் விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்களும், இளம் பேச்சாளர்களும், சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் வீரமணி அய்யாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி உண்டு! எதைப்பற்றிப் பேசினாலும், ஆதாரம் இல்லாமல் அவர் பேசுவதில்லை!
பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனிதன் துடிப்பதுபோன்று,
வீரமணியைப் பாதுகாக்கவேண்டும் என்று நாம் துடிக்கின்றோம்!

சென்னை, டிச.5 – திராவிடர் கழகத்தின் தேவை தீரவே தீராது; திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்களும், இளம் பேச்சாளர்களும், சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் வீரமணி அய்யாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி உண்டு. எதைப்பற்றிப் பேசினாலும், ஆதாரம் இல்லாமல் அவர் பேசுவதில்லை.  பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனிதன் துடிப்பதுபோன்று, வீரமணியைப் பாதுகாக்கவேண்டும் என்று நாம் துடிக்கின்றோம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

Contents

சென்னை பெரியார் திடலில்  2.12.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற புத்தக வெளியீட்டு  விழாவில், புத்தகத்கதை வெளியிட்டு, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அவருக்கு செவிப்புலன் மட்டும்தான் சற்றே ஒத்து ழைக்கவில்லையே தவிர, இருதயம் ஒத்துழைக்கிறது, மூளை ஒத்துழைக்கிறது, கல்லீரல் ஒத்துழைக்கிறது, சிறுநீரகம் ஒத்துழைக்கிறது, நரம்பு மண்டலம் ஒத்துழைக்கிறது, வயிறு ஒத்துழைக்கிறது, எங்களோடு அவர் உரையாடுகின்றபோது, எங்களுக்கும், அவருக்கும் வயது வித்தியாசம் இல்லை என்ற நிலையை எங்கள் தோல் உணருகிறது. இது போதாதா? இவர் நீண்ட காலம் வாழ்வதற்கு!

தமிழர்களின் நூற்றாண்டை நீங்கள்
பதிவு செய்கிறீர்கள் என்று பொருள்!

வாழ்வார்! ஆனால், பெரியார் திடலின் நண்பர்களே, பொறுப்பாளர்களே, நிர்வாகிகளே, அறிவாளிகளே, அவருக்கென்று நீங்கள் ஒரு நினைவு செலுத்துகிறபோது, இப்போதிலிருந்தே அவர் பெருமைகளைத் தொகுக்க வேண்டும்.

அந்தத் தொகுப்பு, ஒரு நாள், இரண்டு நாள் பணி யல்ல. அந்தத் தொகுப்பு என்பது இரண்டு 10 ஆண்டுகள் தொகுக்கவேண்டி இருக்கும்.

பெரியாருக்கு ஒரு நினைவகமும்; ஆசிரியர் அய்யாவுக்கு ஒரு நினைவகமும் நீங்கள் அமைப்பதின் வாயிலாக, தமிழர்களின் நூற்றாண்டை நீங்கள் பதிவு செய்கிறீர்கள் என்று பொருள் என்று, நான் கருதுகிறேன்.

‘‘உலகம் கண்டதுண்டா,
இப்படி ஓர் இயக்கத்தை?’’

நண்பர்களே, ஒரு நூலை வெளியிடப் பணித்தி ருக்கின்றார்கள். அது என்ன நூல் என்றால், ‘‘உலகம் கண்டதுண்டா, இப்படி ஓர் இயக்கத்தை?’’ என்ற நூல்தான். இந்த நூல், உட்கார்ந்து எழுதப்பட்டதல்ல நண்பர்களே!

90 சதவிகிதம் சொற்பொழிவுகளை
நான் கேட்பதில்லை!

இந்த நூல், சொற்பொழிவு!

சொற்பொழிவு என்பது, தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது தெரியுமா?

சொற்பொழிவு என்பது ஆடம்பரக் குரல்களின் அணிவகுப்பு.

சொற்பொழிவு என்பது என் குரலை நானே நேசிக்கும் சுய மோகம்.

சொற்பொழிவு என்பது என்னை நான் அடை யாளப்படுத்திக் கொள்ளக்கூடிய கருவி.

சொற்பொழிவு என்பது அறிவுக்கு நான் செய்து கொள்கிற விளம்பரம்.

சொற்பொழிவு என்பது என்னுடைய முகவரி அட்டை என்று பல பேர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.

90 சதவிகிதம் சொற்பொழிவுகளை நான் கேட்ப தில்லை. காரணம், அந்தச் சொற்பொழிவுகள் எல்லாம் இதன் அடிப்படையில் உண்டானவைதான். இதில் நான் தெரிந்துகொள்வதற்கு ஒன்றுமில்லை.

இதில், பேச்சாளன் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றான்.  இதில் கருத்து என்பதற்கு எதுவு மில்லை. கருத்தை அவன் கொன்றுவிட்டு, அந்தக் கொன்ற கருத்தின்மீது தன்னுடைய நர்த்தனத்தை ஆடிக்கொண்டிருக்கின்றான் என்று எனக்குத் தோன்றும்.

‘‘நிறுத்துப்பா!’’ இது வேண்டாம் என்று போய்விடுகிறது.

சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை!

ஆசிரியருடைய சொற்பொழிவைப் படித்துப் பார்க்கின்றபோது, இந்த மனிதன் எந்தச் சொற்பொழிவை யும் சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை.

இதுதானய்யா உங்கள் வெற்றி!

உங்கள் வெற்றியே, சமூகத்தின் நன்மை!

நான் ஏன் பேசவேண்டும்? எனக்குப் புகழ் வேண்டுமா?

தயவு செய்து புகழைக் கொடுத்துவிடாதீர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பணமும், புகழும் நமக்கு எதிரான விஷங்கள்.

ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் புகழ் வேண்டும். தேன் குடிக்கின்ற தேனீ, வயிற்றுக்குத்தான் குடிக்க வேண்டும்; தேன் குடத்திற்குள் விழுந்துவிட்டால், தேனே, தேனீயின் சமாதியாகி விடுகிறது. பணமும், புகழும் அப்படித்தான்.

இந்த இரண்டையும் தெரிந்துகொண்டவர் வாழ்வியல் அறிந்தவர் அய்யா வீரமணி அவர்கள்.

புகழுக்கு எல்லைக் கட்டத் தெரிந்தவனும், பணத்திற்கு எல்லைக் கட்டத் தெரிந்தவனும், எதிர்ப்பைத் தன்னுடைய வாழ்வின் அங்கமாகக் கருதுகின்றவனும் வாழ்வில் தோற்பதில்லை. வீரமணி அவர்கள் தன் வாழ்வில் தோற்றதில்லை. இனி தோற்கப் போவதுமில்லை.

ஒரு வெற்றிகரமான தலைவனுக்கு நாம் இன்று பிறந்த நாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இதில், எவ்வளவு செய்திகள், வரலாற்று உண்மைகள், சட்டம், பாரம்பரியம், கலாச்சாரம், தன்மானம், அரிய செய்திகள் அடங்கியிருக்கின்றன.

இந்த நூலில், ஓரிடத்தில் ‘‘உண்மையைச் சொல்லு கிறேன், என்னைக் கேட்காமல் கண்ணீர் கண்ணை விட்டுக் கீழே விழுந்தது. கண்ணீர் என்பது எப்படித் தெரியுமா? திட்டமிட்டு வருவதல்ல கண்ணீர். ஒருவர் சொல்லி விழுவதல்ல கண்ணீர். கிளிசரின் இட்டுக்கொண்டு வருவதல்ல கண்ணீர். வெங்காயம் உரிக்கும்போது வருவதல்ல கண்ணீர். புகைச்சல் பார்த்து வருவதல்ல கண்ணீர்.

கண்ணீர் என்பது உரிமை உள்ள விருந்தாளியைப் போல. சொல்லாமல் வரவேண்டும்.

அப்படி சொல்லாமல் வந்தது ஒரு கண்ணீர். எந்த இடத்தில் தெரியுமா?

இந்த உலகத்தில்
யாரும் செய்யாத தியாகத்தைச் செய்தார்  மணியம்மையார்!

மணியம்மையாரைப்பற்றி சொல்லிக் கொண்டே வருகிறார். அந்த ஒரு வரி போதும் அய்யா, திராவிடர் இயக்க வரலாற்றில் சுமத்தப்பட்ட களங்கத்தையெல்லாம் தூக்கி அடித்துவிடுகிறது.

அதைப் படித்தவுடன் எனக்குச் சிலிர்த்துப் போய்விட்டது.

மணியம்மை எதைத் தியாகம் செய்தார்? என்று சொல்கிறார்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர் ஒன்றைத் தியாகம் செய்யவேண்டும்.

நிச்சயமாக!

இளமையைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

பணத்தைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

பதவியைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

செல்வத்தைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

உறவுகளைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

தூக்கத்தைத் தியாகம் செய்திருக்கவேண்டும்.

தன் உடல் ஒழுங்கை தியாகம் செய்திருக்கவேண்டும்.

ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்யாவிட்டால், பொதுவாழ்க்கையில் நீங்கள் தடம் பதிக்க முடியாது.

மணியம்மையார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லுகிறார், இந்த உலகத்தில் யாரும் செய்யாத தியாகத்தைச் செய்தார். மணியம்மையார், தன்மானத்தைத் தியாகம் செய்தார்.

எந்தப் பெண் இதற்குச் சம்மதிப்பார்?

அந்த அம்மையாருக்குத் தெரியாதா! பெரியாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டால், இந்த உலகம் பெரியாரைப் பழிக்குமா?  என்னைப் பழிக்குமா? என் இளமையைப் பழிக்குமா? என் தியாகத்தை ஏற்றுக் கொள்ளுமா? என்னை ஒரு காமுகச்சி என்று சொல்லியிருக்குமா? ‘‘கிழவன் சுகம் தேடுதாடி உனக்கு?’’ என்று பெண்கள் சொல்வார்களா?

‘‘சொத்துக்கு ஆசைப்பட்டு விட்டாயடி’’ என்று சொல்லுவார்களா?

‘‘தலைமைப் பண்புக்கு ஆசைப்பட்டு விட்டாயடி’’ என்று சொல்லுவார்களா?

‘‘நீ வேலை பார்த்தது தாதியாகவா அல்லது வேறு ஏதாவதா?’’ இப்படிக் கேட்பார்களா?

இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, இன்றைக்கு ஒரு பெண் செய்ய முடியுமா?

இன்றைய நவீன  யுகத்தில் செய்ய முடியுமா?

அடுத்த நூற்றாண்டில்,
கல்யாணம் இருக்காது!

கல்யாணம் என்கிற நிறுவனம் உடைந்து கொண்டிருக்கின்ற காலகட்டம்; உடையப் போகின்ற காலகட்டம். அடுத்த நூற்றாண்டில், கல்யாணம் இருக்காது.

நேற்று ஒரு ஆச்சரியம், அமிதாப்பச்சனின் மனைவியான ஜெயாபச்சன், தன் பெயர்த்தியை அழைத்து, அதாவது அய்ஸ்வர்யா ராயின் மகள் – அவரை அழைத்துச் சொல்கிறார், ‘‘பெயர்த்தியே, திருமணம் என்ற காலாவதியான பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே’’ என்று.

இதைத் ‘டுவிட்டரில்’ படித்துவிட்டு, வியந்து போனேன்.

கல்யாணம் என்ற நிறுவனம் கலைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இன்றைக்கு 50 வயது உள்ள இரண்டு பெண்கள் பேசிக்கொள்கின்ற விஷயங்களில் மகிழ்ச்சி என்ன தெரியுமா?

லட்சுமி, தெரியுமா உனக்கு?

என்ன வத்சலா?

என் பொண்ணு, கல்யாணத்திற்குச் சம்மதித்து விட்டாள்.

அடேயப்பா, சம்மதித்துவிட்டாளா? எவ்வளவு பெரிய லக்கி யூ ஆர்.

ஆமாம், சம்மதித்துவிட்டாள், இனிமேல்தான் மாப்பிள்ளை பார்க்கவேண்டும். அவளுக்கு வயது 31.

31 வயதில், கல்யாணத்திற்கு ஒரு பெண் சம்மதித்து விட்டாள், அவளுக்கு 34 வயதில் ஒரு மாப்பிள்ளை பார்க்கவேண்டும்.

இது இன்றைக்கு சமூகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மக்கள் மாளிகையில்,
மக்கள் இருக்கமாட்டார்கள்!

அன்றைக்கு மணியம்மையார் அவர்கள் மிசா காலகட்டத்தில், ஆளுநர் மாளிகைக்குப் போகிறார்.

இன்றைக்கு அது மக்கள் மாளிகையா? மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது.

மக்கள் மாளிகையில், மக்கள் இருக்கமாட்டார்கள், அவர் மட்டும் இருப்பார்.

மிசா கைதிகளாக ஆசிரியர் உள்பட திராவிடர் கழகத்தினர், தி.மு.க.வினர் உள்பட சிறைச்சாலையில் இருக்கிறார்கள்.

அதற்காக,  ஆளுநர் மாளிகைக்குச் சென்று அந்நாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியைச் சந்திக்கிறார்.

அப்போது அவரிடம், ‘‘நாங்கள் அரசியல் கட்சி இல்லையே; எங்கள் இயக்கம் சமுதாய இயக்கமாயிற்றே. அரசியல் கட்சியினரை நீங்கள் கைது செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இயக்கத்தில் இருப்பவர்களை கைது செய்வதற்கு என்ன நியாயம்
இருக்கிறது? அவர்களை விடுதலை செய்துவிடுங்கள்’’ என்கிறார்.

உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி, ‘‘நான் பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஒரே ஒரு நிபந்தனை’’ என்கிறார்.

மணியம்மையாரின் துணிச்சல்!

என்ன நிபந்தனை? என்று மணியம்மையார் கேட்கிறார்.

‘‘இனிமேல், தி.மு.க.வோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள், உடனே நான் திராவிடர் கழக ஆட்களையெல்லாம் விடுதலைச் செய்யச் சொல்கிறேன்’’ என்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர்.

உடனே மணியம்மையார் அவர்கள் சொன்ன பதில், ‘‘எங்கள் தோழர்கள் சிறைக் கொட்டடியில் செத்தே மடியட்டும்; நீங்கள் விடுதலை செய்ய வேண்டாம்’’ என்கிறார்.

இது வரலாறு. இந்த வரலாறைச் சொல்ல வீரமணி அய்யாவைத் தவிர, இன்றைக்கு வேறு யார் இருக்கி றார்கள்?

ஏன், உங்களைப் பாதுகாக்கவேண்டும்? என்று துடிக்கிறோம்.

பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனிதன் துடிப்பதுபோன்று, வீரமணியைப் பாதுகாக்கவேண்டும் என்று நாம் துடிக்கின்றோம்.

யார் சொல்ல முடியும், இவரை விட்டால்?

இன்னும் எத்தனையோ எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைக்குத் திராவிட இயக்கத்தின் தேவை தீரவே இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இன்னும் சொல்லப் போனால், திராவிடர் கழகத்தின் தேவை தீரவே தீராது போலிருக்கிறது என்பது என்னு டைய கருத்து.

இதைச் சொல்லுவதற்கு நான் ஆதாரத்தோடு பேசுகிறேன்.

ஆதாரம் இல்லாமல் பேசுவதில்லை
வீரமணி அய்யா!

திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்களும், இளம் பேச்சாளர்களும், சிந்தனையாளர்களும், அறிவாளிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி அவரிடம் உண்டு. எதைப்பற்றிப் பேசினா லும், ஆதாரம் இல்லாமல் பேசுவதில்லை.

இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!

இந்த விசயத்தை அவரிடம் பார்த்து, நான்  வியக்கின்ற விஷயம்.

எங்கேதான் வைத்திருப்பாரா, ஆதாரங்களை! பேப்பர் கட்டிங்கை எங்கேதான் வைத்திருப்பாரோ தெரியவில்லை!

பல பேர் எந்தக் கட்டிங்குக்காக அலைவார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

அய்யா வீரமணி அவர்கள், ‘‘இது ‘இந்து’ பத்திரிகையில், 1933, ஏப்ரல் 21 ஆம் தேதி வெளிவந்தது என்று அந்தப் பேப்பர் கட்டிங் வைத்திருப்பார். அதேபோல, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழிலிருந்து கட்டிங் வைத்திருப்பார். அதேபோன்று ‘முரசொலி’, ‘தீக்கதிர்’ போன்ற நாளிதழ்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளை வைத்திருப்பார்.

ஆதாரம் இல்லாமல் அவர் பேசமாட்டார். அதனால்தான் அவரை, யாராலும் வெல்ல முடியவில்லை.

வீரமணி சொன்னால், ஆதாரமில்லாமல் இருக்காது; எதிர்வாதம் செய்ய முடியாது அவரிடம்.

வழக்குரைஞராகிய
சமூக அறிஞர் அவர்!

அவர் வழக்குரைஞர் என்பது வேறு விஷயம். ஆனால், சமூக அறிஞர் என்பது இதைவிட முக்கிய விஷயம். வழக்குரைஞராகிய சமூக அறிஞர் அவர்.

நான் சொல்வது மிக முக்கியமான கருத்து. அவர் ஒருமுறை பேசியதை நான் இங்கே சொல்கிறேன். மிகவும் நுட்பமான கருத்து அது.

மனுதர்மத்தின் சுலோகம் 241 இல்,

ஒரு பதார்த்தம், எவ்வெப்பொழுதெல்லாம் அசுத்த மாகிறது என்று மனுதர்மம் சொல்கிறது.

சூத்திரன் தொடுவதால் உணவுப் பொருள்
அசுத்தம் ஆகிறதாம்!

அதற்கு நான்கு காரணங்களைச் சொல்கிறார்கள்.

  1. பன்றி மோத்தலினாலும் (பன்றி மோந்து பார்த்து விட்டால்),
  2. கோழி சிறகின் காற்றினாலும் (குப்பைகளில் மேய்கிற கோழி, இறகை சிறகடிக்கும்போது, தூசி, அழுக்கு அதில் விழுந்துவிடுமாம்),
  3. நாயின் பார்வையினாலும் (நாய் பார்த்துவிட்டாலும் அசுத்தமாகிவிடுமாம்),
  4. சூத்திரன் தொடுவதனாலும் உணவுப் பொருள் அசுத்தம் ஆகுமாம்.

இதைக் கேட்டு ‘உச்சு’க் கொட்டுகிறீர்களே, இந்த உச்சுக்கு வயது 3 ஆயிரம் ஆண்டுகள்.

பெரியார் வந்தார், இதையெல்லாம் மாற்றினார். இன்றைக்கு இந்தியாவெங்கும் 5 நட்சத்திர விடுதிகளில் சூத்திரன்தான்  ‘செஃப்’.

எல்லா 5 நட்சத்திர விடுதிகளிலும் எங்கள் கருப்புத் தமிழனோ, கருப்பு இந்தியனோதான் ‘செஃப்’பாக இருக்கிறான்.

அவன் தொடாமல் பதார்த்தம் உண்டா?

நான் வெளிநாடுகளுக்குச் சென்றால், விடுதிகளுக்குச் செல்லும்போது, அந்த விடுதியின் ‘செஃப்’பைத்தான் அழைப்பேன். ஏனென்றால், அவருடைய ஸ்பெஷல் என்னவென்று கேட்பேன். இன்னொன்று, இன்றைக்கு வந்த காய்கறிகள், இன்று வந்த இறைச்சி, இன்று வந்த பால் இவற்றையெல்லாம் கேட்டுவிட்டுத்தான் சாப்பிடுவேன். நேற்றைக்கு வந்த பொருள்களை பிரிட்ஜ்ஜில் வைத்து  சமைத்திருந்தால், அதை சாப்பிட மாட்டேன்.

பெரியார் கொடுத்த கொடை –
பெரியாரின் வெற்றி!

இந்தியா முழுக்க இருக்கின்ற ‘செஃப்’ இன்றைக்குச் சூத்திரனாக இருப்பதே, பெரியார் கொடுத்த கொடை – பெரியாரின் வெற்றி என்று உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

இன்னும் திராவிடர் இயக்கத்தின் தேவை தீரவில்லை என்று ஏன் சொல்லுகிறேன் தெரியுமா, அய்யா?

அவினாசியில், உயர்நிலைப்பள்ளியில், சத்துணவுப் பிரிவில் பணியாற்றிய ஒரு பெண்மணியின் பெயர் பாப்பா. அவர், பட்டியலினத்தைச் சார்ந்த சகோதரி. அதனால், 12 இடங்களுக்கு இடமாற்றம் செய்தனர் மேல்ஜாதிக்காரர்கள். இந்தப் பெண் சமைத்து, எங்கள் பிள்ளைகள் சாப்பிடக்கூடாது என்று மேல்ஜாதிக்காரர்கள் அதனைச் செய்தனர்.

அந்தச் சகோதரி பல துன்பங்களை அனுபவித்து, துன்பப்பட்டு, வேலையே விட்டே விரட்டப்பட்டு இருந்தபோது, நண்பர்கள் சிலர், அவருக்காக வழக்கு மன்றத்திற்குச் சென்றார்கள்.

6 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கடைசியில், அந்த அம்மாவை 12 ஆண்டுகளாகத் தடுத்து விரட்டி, துரத்திய அந்தக் கூட்டத்திற்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்தி ருக்கிறார்கள், வழக்குரைஞர்கள்.

இது எப்படி?

ஒரு பட்டியலின சகோதரிக்கு சட்டப் பாதுகாப்பு வந்தது எப்படி?

திராவிட மாடல் ஆட்சி!

ஸ்டாலின் ஆட்சி!

பெரியார் வழி வந்த ஆட்சி!

கலைஞருடைய ஆட்சி!

முற்போக்கு ஆட்சி!

இப்படித்தான் தமிழன் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல விடுதலை பெறுகிறான் என்று நினைக்கிறேன். இந்த விடுதலைக்கெல்லாம் நீங்கள்தான் சாட்சி!

இன்னும் பேசவேண்டும் என்று ஆசை! ஆனாலும் மழை நம்மையெல்லாம் வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கவேண்டுமே என்று நினைக்கிறேன்.

நண்பர்களே, நிறைவாக ஒரு செய்தி சொல்கிறேன்.

உங்கள்மீது நாங்கள் அளப்பரிய மதிப்பும்,
அன்பும் வைத்திருக்கின்றோம்!

அய்யா, வீரமணி அவர்களே, உங்கள்மீது நாங்கள் அளப்பரிய மதிப்பும், அன்பும் வைத்திருக்கின்றோம். என்னைப் போன்றவர்களுக்கு அதைக் காட்டிக் கொள்ள நேரமில்லை, வாய்ப்பில்லை. நாங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். ஆனால், உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.

உங்களுக்கு வயது 93.

சில பேர் உங்களை வாழ்த்துகிறார்கள் தப்பாக, நூறாண்டு வாழ்கவென்று!

என்ன வாழ்த்து அது?

நீங்கள் விரும்பும் வரை வாழ்க!

இன்னும் 7 ஆண்டுகள்தான் இருக்கிறது என்று அதற்கு அர்த்தம்!

ஏழு ஆண்டுகள்தானா?

நீங்கள் விரும்பும் வரை வாழ்க!

நீங்கள் வாழ்வீர்கள் அய்யா!

எப்படி என்று கேட்டீர்கள் என்றால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு வயது 103.

10 ஆண்டுகள் பொறுத்திருந்தீர்கள் என்றால், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் வந்துவிடும். உங்கள் உடலில் எந்த உறுப்புப் பழுதாகி இருக்கிறதோ, அதை மட்டும் மாற்றிவிடலாம்.

கல்லீரலா? மூளையா? கிட்னியா? இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளலாம்.

அதற்குப் பிறகு, நீங்கள் நிலாவிற்கு ஒரு பயணம் போய்விட்டு வந்து, பூமியில் வாழலாம்.

நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

‘பெரியார் உலக’த்திற்கு
ரூ.லட்சம் நன்கொடை

இந்த நேரத்தில், என் அன்புக் காணிக்கையாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.லட்சம் நன்கொடையை அளிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு  கவிப்பேரரசு  வைரமுத்து  அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *