கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்; அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளலாமா?
ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச்
சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச்
சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
சென்னை, டிச.5 கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான். அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளலாமா? ‘‘ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்பட’’ வேண்டிய கடமை நீதிபதிகளுக்கு உண்டு. ஆனால், அந்த நீதிபதிகள் இன்றைக்கு எப்படி நடந்து கொள்கிறார்கள்? வேதனையாக இருக்கிறது, கண்டனத்துக்குரியதாக இருக்கிறது. ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்; அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளலாமா? ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
- நீதிப் போக்கில் முறைகேடு
- தமிழர் தலைவர் பேச்சில் தெறித்த பொறிகள்:
- நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் திரட்டக்கூடிய ஓர் இயக்கம்!
- வடக்கே பதவிக் கூட்டணி; தமிழ்நாட்டில் கொள்கைக் கூட்டணி!
- ஆளுநர் என்பவர் டில்லி அரசாங்கத்தினுடைய சி.அய்.டி. என்றார் தந்தை பெரியார்!
- தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண், சுயமரியாதை மண்!
- தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது!
- ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’
நேற்று (4.12.2025) மாலை சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில், இங்கே முழக்கங்கள் மூலமாக தெளிவாகச் சொன்ன, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து நடக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில், இன்னொன்றும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது
நீதிப் போக்கில் முறைகேடு
அதுதான் இங்கே எனக்கு முன்னாலே உரையாற்றிய நம்முடைய நண்பர்கள் சுட்டிக்காட்டிய போது தமிழ்நாட்டிலே நீதிப்போக்கு எப்படி இருக்கிறது? எவ்வளவு முறைகேடாக நடந்து கொண்டிருக்கிறது? என்பதையும் சேர்த்துக் கண்டிக்க வேண்டிய ஒரு கண்டன நிகழ்ச்சியாகவும் கூடுதலாக இது ஆகி இருக்கிறது.
உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
தமிழர் தலைவர் பேச்சில்
தெறித்த பொறிகள்:
தெறித்த பொறிகள்:
4 தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்த கூட்டணி சிறப்பாக வெற்றி பெறுகிறது. கூட்டணியைக் கலைக்க நினைத்து முடியாததால், குறுக்கு வழியில் கலவரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
4 நீதிபதி ஆகும் முன் யாருக்கும் எந்தக் கருத்தும் இருக்கலாம். நீதிபதி ஆனபின், ‘ஓர்ந்து கண்ணோடாது’ நீதி வழங்க வேண்டும்.
4 மதச் சுதந்திரம் என்பது பொது அமைதிக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டதே!
4 ஆளுநரும், நீதிபதிகளும் தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்டு உறுதிமொழிக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
4 அவதூறு வழக்குப் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம். 93 வயதில் வெளியில் இருப்பதை விட, சிறையில் இருப்பதே பாதுகாப்பானது!
நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக
மக்களைத் திரட்டக்கூடிய ஓர் இயக்கம்!
மக்களைத் திரட்டக்கூடிய ஓர் இயக்கம்!
முதலாவதாக இங்கே நம்முடைய தோழர்கள் என்னு டைய 93 ஆவது ஆண்டுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். ‘‘வயதாகிவிட்டது வயதாகிவிட்டது’’ என்பதை அவர்கள் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான், இன்றைக்கு இந்தப் போராட்டத்திலே மிக முக்கியமாக கலந்து கொள்ளக் கூடியவனாய் இருக்கிறேன். காரணம், அது புதிதல்ல; ‘‘95 வயது ஆனாலும் களத்திலே நிற்பேன்’’ என்று சொன்ன தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன் நான். ஆகவேதான், இந்த இயக்கம் எப்போதும் களத்திலே நிற்கக்கூடிய ஓர் இயக்கம். அந்த வகையிலே, எங்கே அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் திரட்டக்கூடிய ஓர் இயக்கம், அந்தப் பணியை செய்வதற்கு நியாயங்கள் இருக்கின்றன; நியாயங்கள் தோற்கக் கூடாது.
நம்முடைய நாட்டிலே மிக ஆபத்தான ஒரு நிலையை உருவாக்க நினைக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெற முடியுமா என்பது வேறு செய்தி. ஆனால், எதார்த்தமான நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்.
வடக்கே பதவிக் கூட்டணி;
தமிழ்நாட்டில் கொள்கைக் கூட்டணி!
தமிழ்நாட்டில் கொள்கைக் கூட்டணி!
இந்த ஆட்சி, ஒப்பற்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அது மட்டுமல்ல 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கூட்டணி வலுவுள்ள ஒரு கொள்கைக் கூட்டணியாகவே இருப்பதால், என்ன செய்தாலும் இந்தக் கூட்டணிக்குள்ளே அவர்கள் நுழைய முடியவில்லை. பீகார் வேலைகளை எல்லாம் செய்ய முடியவில்லை. வடக்கே செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் இங்கே நடக்கவில்லை. காரணம், அங்கே எல்லாம் அமைந்தது பதவிக் கூட்டணி. இங்கே நடந்த தெல்லாம் முழுக்க முழுக்க கொள்கைக் கூட்டணி. ஆகவே எத்தனை இடங்கள்? எவ்வளவு இடங்கள்? இப்படி எல்லாம் சொல்லி, இந்தக் கூட்டணியை நீங்கள் பிரித்து விட முடியாது, கலைத்து விட முடியாது.
தப்பித்தவறி, அப்படிப்பட்ட எண்ணம் வருவதற்கே இடமில்லாமல் நம்முடைய இன எதிரிகள், கொள்கை எதிரிகள் கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் அதுபோன்ற பிரச்சினைகளை வைக்கும் போதெல்லாம் கூட்டணியினர் இன்னும் சிறப்பாக இணைந்து விடுகிறார்கள். இப்படி எல்லோரும் ஒன்று சேரக்கூடிய அளவிலே இன்றைக்கு இருக்கிறோம் என்றால், நியாயத்திற்காக போராட, கொள்கைக்காகப் போராட ஆளுநர் என்பவர் சட்டப்படி என்ன அவருடைய வேலை? தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆளுநர் என்பவர் டில்லி அரசாங்கத்தினுடைய சி.அய்.டி. என்றார் தந்தை பெரியார்!
ஆளுநரே தேவையில்லை என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள், இன்னும் ஒருபடி மேலே போய் ‘‘இந்த ஆளுநர் பதவி என்பது இருக்கிறதே, டில்லி அரசாங்கத்தினுடைய சிஅய்டி; அவர்களுடைய ஏஜென்ட்.’’ என்றார். என்ன நடக்குதுன்னு அவர்களுக்குப் பார்த்து சொல்லணும்; ஆனால், இவர் அதையும் தாண்டி ஏதோ தமிழ்நாட்டையே ஆளுவதைப் போல தன்னைக் கற்பித்துக் கொண்டு ஒரு போட்டி அரசை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு Parallel Government என்று சொல்லக்கூடிய, ஒரு போட்டி அரசை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநருக்கு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிற அந்த விதிகள், உறுப்புகள் கூறுகள் அதில் ஏதாவது ஒன்றை அவர் கடைபிடித்திருக்கிறாரா? அது மட்டுமல்ல எத்தனை முறை உச்சநீதிமன்றத்திலே கொட்டு வாங்கி இருக்கிறார் இந்த ஆளுநர். மற்றவற்றை விட்டு விடுங்கள், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திலே வேறு எந்த ஒரு ஆளுநரும் இத்தனை முறை கொட்டு வாங்கியதில்லை. ஆனால், நல்லவர்களுக்கு ஒரு வார்த்தை போதும்.
தமிழ்நாடு பெரியார் மண்,
சமூக நீதி மண், சுயமரியாதை மண்!
சமூக நீதி மண், சுயமரியாதை மண்!
தமிழ்நாட்டிலே பல வித்தைகளைச் செய்து பார்த்திருக்கிறார்கள் மீண்டும் மீண்டும் ரோட் ஷோ, காட் ஷோ எல்லா ஷோக்களையும் நடத்தி பார்க்கிறார்கள்; ஆனால், முழுக்க முழுக்க அவர்களால் தமிழ்நாட்டை தங்கள் வயப்படுத்த முடியவில்லை, காவிமயமாக்கவில்லை. காரணம் நீங்கள் அனைவரும் சொன்னபடி தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண், சுயமரியாதை மண் என்று சொல்லக்கூடிய அந்த அளவிலே மிகப்பெரிய அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்ற மண். இந்தக் கூட்டணி சிறப்பாக வெற்றி பெறுகிறது என்றால், கொள்கை வெற்றி பெறுகிறது என்று அர்த்தம். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் காரணமாகத்தான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் வடக்கே இருக்கிற ஆர்எஸ்எஸ், பிஜேபியினர் எப்படியாவது தமிழ்நாட்டை தங்கள் வயப்படுத்த வேண்டும், அரசியலிலே வென்று காட்ட வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு வேறு வழி இல்லை என்று புரிந்துவிட்டது. அதனால் குறுக்கு வழிகளில் ஈடுபடுகிறார்கள். அந்தக் குறுக்கு வழியிலே ஒன்றுதான் நிதி தராமல் இருப்பது. நமக்கு உரிய நிதியை கொடுப்பதில்லை. மும்மொழித் திட்டத்தை நீங்கள் அமல்படுத்தினால் தான், நாங்கள் நிதி தருவோம் என்று சொல்கிறார்கள்.
இது மிகப்பெரிய அளவிற்கு அரசியலமைப்புச் சட்ட விரோதம் அல்லவா! கன்கரண்ட் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒத்திசைவுப் பட்டியலில் மாநில அரசுக்கு உரிமை உண்டு; ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது ஏதோ தங்களுக்கே உரிமை உள்ளது என்று சொல்வதைப் போல இருக்கிறது. நாம் இங்கே பணத்தை திரட்டிக் கொடுப்பது, ஜிஎஸ்டி என்பது மூலம் ஏராளம் கொடுத்துவிட்டு, பிறகு பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி நிற்பதுபோல இருக்கிறது.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது!
தமிழ்நாட்டில் பேரிடர் வந்தாலும், புயல் வந்தாலும், சுனாமி வந்தாலும் அதற்கு நிதி கேட்டால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு காசும் கொடுப்பதில்லை. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
ஏன் வஞ்சிக்கப்படுகிறது? என்ன செய்தாலும், யாரோடு கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ்நாட்டைப் பிடிக்க முடியவில்லையே என்று அவர்கள் நினைத்துப் பார்த்து, அவர்களுடைய தந்திரங்களில் ஒன்றாக, ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’
ஆளுநர் ஒரு போட்டி அரசு நடத்துவது மட்டுமல்ல, இன்னொரு பக்கத்திலே ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறார், பச்சையாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் நடத்துகிறார். அது கூட அறிவு நாணயத்தோடு நடக்கிறார்களா? ஆர்எஸ்எஸ்சினுடைய கொள்கை என்ன? ஜாதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான். தீண்டாமை என்பது இருக்கிறதே அவனவனுடைய பிறவிப் பயன், முன் ஜாதி, முன்வினைப் பயன், நீ எந்த ஜாதியிலே பிறக்கிறாய் என்பதை மாற்ற முடியாது. ஏன் பிறந்தாய் அந்த ஜாதியிலே என்று சொன்னால், போன பிறவியில் நீ செய்த பாவம் – புண்ணியம். மேல் ஜாதிக்காரன் என்றெல்லாம் சொல்லிய தத்துவத்தைச் சொன்னபோது, திராவிடம் தமிழ் தத்துவம் இருக்கிறதே, இந்த தத்துவம் தமிழ்நாட்டினுடைய மண்ணினுடைய தத்துவம், செம்மொழி தமிழினுடைய தத்துவம் இருக்கிறதே அது சாதாரணமல்ல. ஒரே வரியிலே நீண்ட காலத்துக்கு முன்னாலே கணியன் பூங்குன்றனார் சொன்னார் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’, ‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ என்று.
இந்தத் தத்துவங்களை மாற்றி, ஆரியத்தை உள்ளே புகுத்திவிட வேண்டும் என்பதற்காகத்தான், வடமொழியை பிரச்சாரம் செய்வது, திராவிடம் என்று வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள் என்று அறைகுறை அரை வேக்காட்டுத்தனமாக சொல்கிறார்கள்.
– உரை நாளை தொடரும்
