சண்டிகர், டிச.4- கூடைப்பந்து கம்பம் சரிந்து இரண்டு நாட்களில் இரண்டு முன்னணி விளையாட்டு வீரர்கள் பலியான கொடூரம்.
அரியானா மாநிலம்
லக்கன் மஜ்ராவில் உள்ள மைதானத்தில் ஹார்திக் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த பேஸ்கட் பால் கம்பம் சரியாகப் பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர் பயிற்சி எடுக்கும்போது திடீரென அந்த கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது.
இதைப் பார்த்தவுடன் அருகே இருந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் ஹார்திக் மைதானத்தில் அவர் பயிற்சி செய்கிறார். அப்போது ஓடி வந்து கூடைப்பந்து போலில் எகிறிக் குதித்து ஷூட் செய்வது போல பயிற்சி செய்கிறார்.
கூடைப்பந்து வீரர்கள் வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளைச் செய்வார்கள். ஹார்திக் முதலில் இதைச் செய்யும்போது எல்லாம் இயல்பாகவே இருந்துள்ளது. இருப்பினும், இரண்டாவது முறையாக அதைச் செய்தபோது எதிர்பாராத விதமாகக் கூடைப்பந்துக் கம்பம் அப்படியே சாய்ந்து அவர் மீது விழுந்தது. அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியது. அருகிலிருந்த நண்பர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ஓடிவந்து கம்பத்தை அகற்றி ஹார்திக்கை மீட்டனர். இருப்பினும், அதற்குள் 16 வயதுடைய ஹார்திக் பரிதாபமாக உயிரிழந்தார். ஹார்திக் சமீபத்தில் தான் இந்தியக் கூடைப்பந்து தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் பயிற்சி முகாமையும் முடித்துவிட்டுத் திரும்பியிருந்தார். இந்தச் சூழலில் தான் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹார்திக் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது.
அதேநேரம் இதுபோன்ற சம்பவம் அங்கு நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த இரண்டு நாட் களுக்கு முன்பு, 15 வயதான அமன் என்பவர் இதேபோல பயிற்சி செய்தபோது கூடைப்பந்து கம்பம் அவர் மீது விழுந்தது. அமனுக்கு உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அங்கு தொடர்ச்சியாக இதுபோல இரு மரணங்கள் நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள மைதானங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மற்றும் அதன் பராமரிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னணி வீரர்கள் விளை யாட்டுக் கம்பம் விழுந்து மரணமடைந்த நிலையில் இன்றுவரை இந்த கோரநிகழ்வு தொடர்பான ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் சமீபத்தில் கட்டப்பட்ட அந்த புதிய கூடைப்பந்து மைதானத்தின் ஒப்பந்தக்காரர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை இதே அரியானாவில் தான் வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னணி குத்துச்சண்டை பெண்கள் அனைவரும் விளையாடுத்துறையையே விட்டு சென்றுவிட்டனர். இருப்பினும் மோடி அரசு பிரிஜ்பூசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பாலியல் வன்கொடுமை குற்றவாளியான பிரிஜ்பூசன் உதவியாளரை இந்திய குத்துச்சண்டை சம்மேளத்தின் தலைவராக்கியது. பிரிஜ்பூசன் மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கியதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் பிரிஜ்பூசன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் அல்ல என்று கூறி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
