தஞ்சாவூர், டிச.4- தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 02.12.2025 அன்று பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா காலை 10 மணிக்குப் பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
இந்நிகழ்விற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பதிவாளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா வேந்தரை வாழ்த்தியும், கல்வி உதவித்தொகை குறித்தும் தலைமையுரை ஆற்றினார்.
எழுத்தாளர் இமையம் சிறப்புரை
எழுத்தாளர் இமையம் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். தம் உரையில், 83 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ஆசிரியர். அவர்தம் பிறந்தநாளில் மாணவர்கள் தடையின்றிப் படிக்க கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் பெண்கள் அதிகம் படிக்கக் காரணம் தந்தை பெரியார் ஆவார்.
பெயருக்குப் பின் இருந்த ஜாதி நீங்கிப் பட்டம் இடம்பெறக் காரணமானவர் தந்தை பெரியார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றவர். சுயமரியாதையும் தன்மானமும் உண்மையாக இருப்பவர்க்கே மனிதன் எனும் தகுதி உள்ளது.
கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு…
100 ஆண்டுகளுக்கு முன் கல்வி மறுக்கப்பட்ட இச்சமூகத்திற்கு 1921 இல் தொடங்கிய நீதிக்கட்சியால் அனைவருக்கும் கல்வி கிடைத்தது. இங்கிலாந்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 3500 ஆண்டுகளுக்கு முன் இரும்பையும், செங்கல்களையும் பயன்படுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம். இந்தியாவில் தற்போது தமிழ்நாட்டுப் பெண்களின் உழைப்பு 40 சதவீதமாகும்.
சங்க காலத்தில் 42 பெண்கள் படித்துள்ளார்கள். ஆரிய சமூகம் பெண்களைப் படிக்கவிடவில்லை. சோழர் காலத்தில் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி இலக்கிய மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் திகழ்கிறது. தமிழ்ச் சமூகம் மீது கல்வி ஒளி பாய்ச்சியவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் ஆவார்.
அறிவியல் பார்வையுடன்…
மனிதர்கள் உருவாக்கிய வைகளே கடவுள்கள். மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் மேம்பட அறிவியல் பார்வையுடன் சிந்தியுங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் இல்லாத கல்வி இன்று உள்ளது. தமிழ்நாட்டில் தான் அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அறிவில் சிறந்தவர் களுக்கே தமிழ்நாட்டில் சிலைகள் உள்ளன என்று பேசினார்.
கல்வி உதவித் தொகை
இந்நிகழ்வில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை இரண்டாமாண்டு மாணவி வீ.கோ.மனோஹரிணி வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவி ஆ.ஸ்ருதிலயா நன்றியுரை கூறினார்.
கல்வி நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையான ரூபாய் மூன்றரைக் கோடியை, 2670 மாணவர்கள் பெற்றுப் பயனடைந்தனர். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வைப் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
