சென்னை, பிப்.4 பீகார் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடப்பாண்டில் நடைபெற்றன. தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் எஸ்.அய்.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்பப் படிவங்களை வாக்கு மய்ய நிலை அலுவலர்கள் வழங்கினர்.
இந்த விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்தப் பணியை செய்து முடிப்பது என்பது இயலாதது என தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் பலர் மனஅழுத்தம், நெருக்கடி என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில், எஸ்.அய்.ஆர். நடைமுறைகள் 4-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில், இந்த கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. எஸ்.அய்.ஆர். பணிகளுக்கு தமிழ்நாடு, கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்பின்னர், டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
எஸ்.அய்.ஆர். பணிகளில் ஏற்பட்ட நெருக்கடியால் நாடு முழுவதும் 40 பேர் உயிரிழந்து உள்ளனர் எனக் கூறி, அதுபற்றி நாங்கள் விவாதிக்க வேண்டும் என்று கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் உள்ளிட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணமாக வாக்காளர்களின் ஆதார் கைப்பேசி எண்கள் பொதுவெளியில் சென்றது குறித்து பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை அந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை (பூத் லெவல்) அலுவலர்கள் வீடு, வீடாக வந்து கொடுப்பார்கள் என்றும், அதனை நிரப்பி பொதுமக்கள் மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. மேலும் ஒரு வீடு பூட்டப்பட்டு படிவம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் 3 முறை அந்த வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியிருந்தது.
ஆனால் இதற்கு நேர்மாறாக தான் நடக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். முதலில் வாக்குச் சாவடி அலுவலர்கள் ஒரு முறை தான் வீடுகளுக்கு வந்து படிவம் கொடுத்தனர். அடுத்த முறை பொதுமக்களே அலுவலர்கள் முகாமிட்டுள்ள இடத்திற்கு சென்றுதான் படிவங்களை பெற வேண்டி உள்ளது. அதே போல் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கும், மக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருக்கும் இடத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது என்று கூறுகின்றனர்.
இதில், மிக முக்கியமாக கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி மற்றும் அதனை திரும்பப் பெறும் பணியினை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள்தான் செய்கின்றனர். அவர்கள் தான் படிவங்களை ஆன்லைனிலும் ஏற்றுகின்றர். அதனால் நாங்கள் படிவத்தில் கொடுத்து இருக்கும் ஆதார் கைப்பேசி எண்கள் அவர்கள் வசம் சென்று விடுகிறது என்று ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.
அதன்மூலம் ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் யார்? யார்? அவர்களின் கைப்பேசி எண்கள் என்ன என்பதனை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வாரி இறைத்து விட்டது. இதற்கு முன்பு அரசியல் கட்சிகள், அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள கைப்பேசி எண்களை பெற்று பரப்புரை செய்வார்கள். ஆனால் இனி தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில இடங்களில் பொதுமக்களை கைப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களது கணக்கெடுப்புப் படிவத்தில் சில தகவல்கள் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர்.
அதற்கு பொதுமக்கள் நீங்கள் வாக்குச் சாவடி அலுவலரா? என்று கேட்டால் இல்லை என்கின்றனர். அப்போது நீங்கள் யார் என்றால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனவே வாக்காளர்களின் கைப்பேசி எண்கள் தவறான நோக்கத்தோடு பயன்படுத்துவது தடுக்கப்ப வேண்டும். அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
