சென்னை, டிச.4 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி மற்றும் ரூ.35.95 லட்சத்திலான முழுமையாக தானியங்கும் புற இரத்தக்குழாய் நோயறிதல் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (3.12.2025) கொண்டு வந்தார்.
தொடர்ந்து, உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு, அரசு புனர்வாழ்வு மருத்துவ நிலையம் சார்பில், ரூ.4.56 லட்சம் செலவில் அதிநவீன செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள் ஆகிய உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், வளைவான முதுகெலும்புக் குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளிகள் மூலம், சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் பணிபுரியும் 7 பெண் மருத்துவர்கள், 26 வயதுடைய பீகார் இளைஞருக்கு செய்த கை மாற்று அறுவை சிகிச்சை மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி மூலம், தினந்தோறும் 40 பேர் பயன்பெறுவார்கள். ரூ.65 கோடியில் 1.12 லட்சம் சதுர அடி பரப்பளவில் நரம்பியல் கட்டடம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரால் இக்கட்டடம் 10 நாட்களுக்குள் திறக்கப்படவுள்ளது” என்றார்.
