கடந்த பெரியார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆசிரியர் அவர்களுடன் மன்ற உறுப்பினர்கள், விழாவிற்குத் துணையாக நின்றவர்கள் எனக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாங்கள் நிகழ்விடத்தை அடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பே ஆசிரியர் வந்துவிட்டார்.
மிக எளிமையாக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தான் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர், நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்த்த வேளையில்…..
ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு மேசைக்கும் வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, கைகுலுக்கி ஓரிரு வார்த்தைகள் பேசி, பின்னர் நிகழ்ச்சியைத் துவங்கினார்.
நாங்கள் அனைவரும் அவரைப் பார்க்க வந்திருக்கின்றோம், அவரது வயதைக் கணக்கில் கொண்டால் அவர் எங்கள் இருக்கைக்கு வந்து கைகுலுக்காவிட்டாலும் அந்து குறையாகத் தெரியப் போவதில்லை. நீங்கள் அனைவரும் எந்த மரியாதையுடனும் மகிழ்வுடனும் என்னைக் காண வந்தீர்களோ, அதே மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் உங்களைக் காண்கிறேன் என மதிப்பளித்த விதத்தை அன்று நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். சுயமரியாதை என்பது வெறும் சொல்லல்ல, செயல்பாட்டில் புரிய வைக்க வேண்டும்.
ஆசிரியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாம் விரைந்து விடைபெற வேண்டிய சூழல், அருகில் சென்று தயக்கத்துடன் “ஆசிரியர் சாப்பிடுறாங்க” என அருகில் இருந்த அக்காவிடம் கூற அவரோ “ஆசிரியர் சாப்பிடுவது கூட ஆச்சர்யமா?” எனக் கலாய்த்தார். “இல்லைக்கா, கிளம்பணும் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என அக்காவிடம் சொல்லும் போது திரும்பினார்.
அய்யா, அவசரப் பணி காரணமாகக் கிளம்புகிறேன் என்றேன். அடுத்த நொடி…
“மகள் வரவில்லையா?” என்றார். இன்னும் கல்லூரியில் இருந்து வரவில்லை அய்யா என்றேன். இவ்ளோ பேர் வந்திருந்த போதிலும் மகளைக் கருத்தில் கொண்டு விசாரித்தது மகிழ்ச்சி.
குறிப்பாக தலைவர்களைச் சந்திக்கும் போது நாம் 100% ‘comfortable’ ஆக உணர் முடியாது. ஆனால் ஆசிரியர் மீது உச்சபட்ச மரியாதை இருந்தாலும் நான் ‘comfort’ ஆக இல்லாமல் இருந்ததில்லை. நிற்க வைத்துப் பேச மாட்டார். முதல்ல உட்காருங்க என்பார்.
இன்னொரு விசயம் நான் வியந்தது.
எந்த மேடைக்கு வந்தாலும் வழக்குரைஞர் கேஸ் கட்டு கொண்டு வருவது போல நிறைய புத்தகம், பத்திரிகைச் செய்திகள் என சுமந்து கொண்டு மேடையேறுவார். அவருக்கு அதில் உள்ள செய்திகள், தகவல்கள் எல்லாம் அத்துபடி. ஆனால் உலகுக்குக் காட்ட வேண்டிய ஆதாரம் அவை. பொய்யோ புரட்டோ பேச வேண்டிய அவசியம் பகுத்தறிவாளர்களுக்கு இல்லை என்பதைப் பறைசாற்றும் விதமாக மேடையேறுவது அதிகம் கவர்ந்த விசயம்.
‘முரசொலி’ முடிந்தால் செய்யும்
‘விடுதலை’ நிச்சயம் செய்யும் என்ற முத்தமிழறிஞரின் வரிகளுக்குள் புதைந்துள்ள செய்தி ஏராளம்.
தொடரட்டும் தொண்டறம்… பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா!
– நரசிம்மன் நரேஷ், சிங்கப்பூர்
