ஆசிரியருடைய எந்தச் சொற்பொழிவிலும் சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை; இதுதானய்யா உங்கள் வெற்றி!
உங்கள் வெற்றியே, சமூகத்தின் நன்மை!
எதிர்ப்பைத் தன்னுடைய வாழ்வின் அங்கமாகக் கருதுகின்றவர்கள் வாழ்வில் தோற்பதில்லை!
சென்னை, டிச.4 – ஆசிரியருடைய சொற்பொழிவைப் படித்துப் பார்க்கின்றபோது, இந்த மனிதன் எந்தச் சொற்பொழிவிலும் சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை. இதுதானய்யா உங்கள் வெற்றி! உங்கள் வெற்றியே, சமூகத்தின் நன்மை! புகழுக்கு எல்லை கட்டத் தெரிந்தவனும், பணத்திற்கு எல்லை கட்டத் தெரிந்தவனும், எதிர்ப்பைத் தன்னுடைய வாழ்வின் அங்கமாகக் கருதுகின்றவனும் வாழ்வில் தோற்பதில்லை. வீரமணி அவர்கள் தன் வாழ்வில் தோற்றதில்லை. இனி தோற்கப் போவதுமில்லை என்றார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் 2.12.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், புத்தகத்கதை வெளியிட்டு, கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இந்த இனிய விழாவின் பாட்டுடைத் தலைவர் தமிழர் தலைவர், திராவிடர் கழகத்தின் ஒரு தனிப்பெரும் தமிழர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களே,
விழாவின் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களே, தொல்லியல் அறிஞர் அருமை நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களே,
இந்த அவையில் நிறைந்திருக்கின்ற பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே, பாசத்திற்குரிய பத்திரிகை யாளர்களே, ஊடக உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டம் மிகுந்த கூட்டம்!
நீங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் இந்த மன்றத்தில் கூட்டம் குறைவு என்று. மழையினால் என்று நீங்கள் கருதலாம். காரணம் எனக்குத் தேவையில்லை. ஆனால், இது குறைந்த கூட்டம் என்றாலும், ஊட்டம் மிகுந்த கூட்டம் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.
இவர்கள் அறிவாளர்கள்; அதாவது மழையில் வெளியில் வந்தால் நனைந்து கரைந்து விடுவோமோ என்று கருதிய வெல்லக்கட்டிகள் வீட்டில் இருக்கிறார்கள். மழையில் நனைந்தாலும் கரைந்துவிட மாட்டோம் என்று கருதுகின்ற தங்கக்கட்டிகள் பெரியார் திடலுக்கு வந்திருக்கிறார்கள். தங்கக் கட்டிகளே உங்களுக்கெல்லாம் என் நன்றி, வணக்கம்!
ஒவ்வொரு ஊடகத்திற்குப் பின்னாலும், ஒரு பத்தாயிரம் தமிழன்
பார்த்துக் கொண்டிருக்கின்றான்!
கூட்டம் குறைவு என்று நான் கருதமாட்டேன். ஊடகங்களைப் பார்த்தேன். 10 ஊடகத்தார் வந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு ஒளிப்பதிவுக் கருவியின் பின்னால், ஒரு ஊடகத் தோழர் நிற்கிறார். அவரை ஒருவர் என்று நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு ஊடகத்திற்குப் பின்னாலும், ஒரு பத்தாயிரம் தமிழன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பெரிய உண்மை எனக்குத் தெரியும். அதனால், அந்த ஒரு லட்சம் பேருக்கு முன்னால், நான் நின்று பேசிக்கொண்டிருக்கின்றேன் என்ற உணர்வோடு, நான் உங்களோடு பேசுகின்றேன்.
உங்கள் இருதயம் கொஞ்ச நேரம், என் உதட்டுக்குப் பக்கத்தில் துடிக்கவேண்டும்; உங்கள் காதுகள் என் மொழியோடு இயங்கவேண்டும். உங்கள் கண்கள், என் கண்களோடு ஒத்திசையவேண்டும். ஒரு 15 நிமிடமோ, 16 நிமிடமோ தெரியாது, நான் 15 நிமிடத்திற்கு முன்பே முடித்துக்கொண்டால், அதற்கு நான் காரணம். 15 நிமிடத்திற்கு மேலும் நீண்டால், அதற்கு நீங்கள் காரணம்.
அதனால், நீங்களா? நானா? என்பது இந்தப் பேச்சு முடியும்போது தெரிந்துவிடும் என்று உங்களுக்கு நான் சொல்லிக்கொண்டு என் உரையைத் தொடங்குகின்றேன்.
அகராதியைப் போன்ற நினைவாற்றல்!
இவருக்கா வயது 93?
அவர் நடை, சிந்தனை, ஒரு கீற்றிலிருந்து இன்னொரு கீற்றுக்கு அணில் தாவுவதுபோன்ற சுறுசுறுப்பு. ஒரு காட்டு வெள்ளத்தின் ஒரு பிரவாகம் போன்ற சுறுசுறுப்பு. அகராதியைப் போன்ற நினைவாற்றல். இன்னும் இளமை – துடிக்கின்ற உடம்பு.
நான் பார்த்தேன், அவர் பேனாவை எடுத்து எழுதினார். நான் கள்ளக் கண்ணால் பார்த்தேன், என்ன எழுதுகிறார் என்று பார்த்தேன். அது எனக்குப் பிடிபடவில்லை. ஆனால், எழுத்தின் வடிவம் பிடிபட்டது.
கலைஞரின் ஆதங்கம்!
90 வயதில், கலைஞர் என்னை அழைத்து, ‘‘பார்த்தீர்களா, வைரமுத்து என் எழுத்து எவ்வளவு கோணல் மாணலாகிவிட்டது பார்த்தீர்களா? எப்படி இருந்த என் கையெழுத்து, எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? கையெழுத்து என்பது வேறு; கையொப்பம் என்பது வேறு.
கையெழுத்து Handwriting; கையொப்பம் Signature; அவர் கையெழுத்தைச் சொன்னார், என் கையெழுத்து எவ்வளவு கோணல் மாணலாகிவிட்டது; வயதின் தாக்கம் என்று சொன்னார்.
90 வயதில் தன்னுடைய கையெழுத்து கோணல் மாணலாகிவிட்டது என்று கருதி, என்னை அழைத்து, தன் துயரத்தைப் பகிர்ந்துகொண்ட கலைஞரையும் பார்க்கிறேன். 93 வயதில், 17 வயது காதல் கடிதம் போன்ற கையெழுத்தையும் பார்க்கிறேன்.
இந்தக் கையெழுத்து மாறாமல் இருக்கிறது; தெளிவாக இருக்கிறது; உணர்ச்சி உண்மையாக இருக்கிறது. அவர் உடம்பின் நரம்பு, அவர் சொல்வதைக் கேட்கிறது.
விரல்கள் நடுங்கவில்லை,
இதயம் அடங்கவில்லை,
கொள்கை முடங்கவில்லை.
அதே திறத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
காலம் எங்களுக்குக் கொடுத்த
கொடை அய்யா நீங்கள்!
நண்பர்களே, மொத்த வயதுக்கும் மனிதனுக்கு மூன்று வயது. ஒன்று, காலண்டர் சொல்லுகின்ற வயது. அது காலண்டர் சொல்கின்ற பொய். அது Date of Birth. பிறந்த நாள் சொல்லும் வயது.
இரண்டாவது வயது உண்டு – அது உடம்பு சொல்லும் வயது.
மூன்றாவது வயது உண்டு – மனது சொல்லும் வயது.
காலண்டர் சொல்லுகிற பொய்யின்படி அவருக்கு வயது 93.
அவர் உடம்பு சொல்லுகின்ற வயது அவருக்கு 63.
மனம் சொல்லுகின்ற வயது 33.
இந்த வயதில்தான் அவர் இயங்கிக் கொண்டி ருக்கின்றார்.
காலம் எங்களுக்குக் கொடுத்த கொடை அய்யா நீங்கள்.
உங்களைப்பற்றி உங்களோடு நாங்கள் விதந்து சொல்வது இல்லை.
அது சில நேரங்களில், விதந்து சொல்வது என்பதுகூட, புகழ்ந்து சொல்வது என்ற பொய்மையில் அடங்கிவிடும். அதனால், நாங்கள் உங்களைப்பற்றி உணர்கின்றோம்.
We feel it. We are not going to express it. We feel it.
நாங்கள் உணர்கிறோம். உங்களைத் தனியாக நினைக்கின்றபோது, அதை ஆனந்தத்தோடு ஓடவிட்டுப் பார்க்கிறோம்; பேசவிட்டுக் கேட்கிறோம். ‘விடுதலை’யில் உங்கள் உரையைப் பார்க்கின்றோம். பத்திரிகைகளில் உங்கள் பேச்சைப் பார்க்கிறோம். தொலைக்காட்சியில் உங்கள் நடை பார்க்கின்றோம். என்ன வியப்புக்குரிய மனிதர்? எப்படி இவர் வந்தார்? இன்னும் இவர் பல்லாண்டுகள் வாழவேண்டுமே என்ற ஆசை நெஞ்சில் துடிக்கிறது.
காலத்தின்மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. காலம் கருணை மிக்கது. தமிழர்களுக்கு, தமிழர் ஜாதிக்குக் காலம் சில நன்மைகளைச் செய்திருக்கிறது.
அண்ணா, மறைந்து போனார்; வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது விதி. அண்ணாவை யாராலும் நிரப்ப முடியாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
நான் முயற்சிக்கிறேன் என்று நிரப்ப வந்தார், காற்றாக, கலைஞர்.
நீங்கள் மட்டும் இல்லையென்றால், பெரியாருக்கு இவ்வளவு நீட்சி கிடைத்திருக்குமா?
பெரியார் மறைந்தார், ஒரு பெரிய வெற்றிடம் உண்டா னது. அந்த வெற்றிடத்தைக் காற்றாக வந்து நான் நிரப்பப் பார்க்கிறேன் என்று நிரப்பிக் கொண்டே இருப்பவர் நம்முடைய தலைவர் அய்யா வீரமணி அவர்கள்.
இது காலம் கொடுத்த கொடை! நீங்கள் மட்டும் இல்லையென்றால், பெரியாருக்கு இவ்வளவு நீட்சி கிடைத்திருக்குமா?
கலைஞர் இல்லையென்றால், பெரியாரின் ஆட்சி கிடைத்திருக்காது. வீரமணி இல்லையென்றால், பெரி யாருக்கு நீட்சி கிடைத்திருக்காது.
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்–
இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்!
ஆட்சி கொடுத்தவர் ஒருவர்; நீட்சி கொடுத்தவர் இன்னொருவர். அதனால்தான், நூற்றாண்டு கடந்த பிறகும்கூட, அந்தக் கிழவன், தாடி நரைத்தாலும், அறிவு நரைக்காமல் இந்த மண்ணிலே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
ஆச்சரியம்! இவர் பொதுவாழ்க்கைத் தொடங்கியதை இந்த சமூகம் இன்னும் சரியான முறையில் அங்கீகரிக்க வில்லை.
பெரியார் திடலில் பேசுகின்றவன், கருப்பாக இருக்கின்றவன், கருப்புத் துணி அணிந்திருக்கின்றவன், கருப்பை நேசிக்கின்றவன் நான், கருப்புத் தோலோடு பிறந்தவன் என்று கருதப்படுகின்றவன் – அத்துணைப் பேருக்குமே உரிய அங்கீகாரத்தை எந்த நூற்றாண்டும் தருவதில்லை, தந்ததில்லை.
நாம், அது வேண்டும் என்று துடித்தாலும், அது அவ்வளவு சீக்கிரம் அடைவதில்லை. இவர் எத்தனை வயதில் மேடை ஏறியவர் தெரியுமா, தோழர்களே?
உலக அகராதி குறித்து வைக்கின்றன!
சில பேருடைய பெருமைகளை உலக அகராதி குறித்து வைக்கின்றன.
புதிய எண்ணங்கள் புறப்பட்டபோது, மாஜினிக்கு வயது 10.
கவிதை எழுதத் தொடங்கியபோது, தாகூருக்கு வயது 11.
மாணிக்க வாசகர், திருவாசகத்தை எழுதி முடித்தபோது, அவருக்கு வயது 24.
கீட்ஸ் எழுதி முடித்து மறைந்தபோது வயது 24.
இந்த உலகம் முழுவதையும் வென்று, இனிமேல் வெல்லுவதற்கு நாடு இல்லை என்று கவலைப்பட்ட அலெக்சாண்டர் மறைந்தபோது வயது 32.
பாரதியார் ஒரு யுகக் கவிதை எழுதி முடித்துவிட்டு மறைந்தபோது அவருக்கு வயது 39.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்தபோது அவருக்கு வயது 29.
ஏசு பெருமான் சிலுவை சுமந்து மடிந்தபொழுது அவருக்கு வயது 33.
இதையெல்லாம் உலக வரலாறு பொன்னெழுத்துகளில் பொறித்து வைக்கிறது. தூண்களில் எழுதி வைக்கிறது. உலகப் பல்கலைக் கழகங்களில் பதிவு செய்கின்றன. கல்வெட்டுகளில் எழுதி வைக்கின்றன. எங்கள் இனத்தின் பெருமை என்று கொண்டாடுகின்றது இந்த வயதுகளை.
எங்கள் ஆசிரியர் வீரமணியைக் குறித்து வைக்க நாதி இருக்கிறதா, நாட்டில்? அவர் முதலில் மேடை யேறியபோது அவருடைய வயது 10.
திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்னபோது, வயது 11.
11 வயதில், ‘‘மணமக்கள் பல்லாண்டு வாழ்க’’ என்று வாழ்த்தி இருக்கிறார்.
வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை!
இங்கே உரையாற்றிய பாலகிருஷ்ணன் உரை யாற்றும்போது, ‘‘இங்கு சித்தார்த் என்ற பெரியார் பிஞ்சு, அய்யாவை வாழ்த்துகிறேன்’’ என்று சொன்னார் என்று.
அதில் என்ன தவறு இருக்க முடியும்?
‘கடவுள் மிகப்பெரியவர்’ என்று ஒரு கருதுகோள், நீண்ட நாள்கள் இருந்திருக்கின்றது. எல்லாரையும்விட பெரியவர் என்ற கருதுகோள் இருந்திருக்கின்றது.
வள்ளுவர், திருக்குறளில் முதல் அதிகாரம், ‘கடவுள் வாழ்த்து’ என்று வைத்தார்.
‘கடவுள்’, என்னைவிடப் பெரியவனாக இருந்தாலும், கடவுளை நான் வாழ்த்துகிறேன்; வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனது வேண்டும். அந்தப் பிள்ளைக்கு மனது இருக்கிறது.
நினைவாற்றல் உள்ளவன்
நீண்ட ஆயுள் இருப்பான்!
10 வயதில், திருமணத்திற்குத் தலைமை.
12 வயதில், மாநாட்டிற்குக் கொடியேற்றம்.
27 வயதில், இயக்கத்திற்குச் செயலாளர்,
29 வயதில், ‘விடுதலை’ ஆசிரியராகிறார்,
45 வயதில், அவர் கழகத்திற்குத் தலைவராகிறார்.
இந்த வரலாறுகளையெல்லாம் இளைய தலைமுறையினர் பொதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அவருக்கு வயது 93. இன்னும் பல்லாண்டுகள் இருப்பார்; எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. நினைவாற்றல் உள்ளவன் நீண்ட ஆயுள் இருப்பான்.
அவருக்கு செவிப்புலன் மட்டும்தான் சற்றே ஒத்துழைக்கவில்லையே தவிர, இருதயம் ஒத்துழைக்கிறது, மூளை ஒத்துழைக்கிறது, கல்லீரல் ஒத்துழைக்கிறது, சிறுநீரகம் ஒத்துழைக்கிறது, நரம்பு மண்டலம் ஒத்துழைக்கிறது, வயிறு ஒத்துழைக்கிறது, எங்களோடு அவர் உரையாடு கின்றபோது, எங்களுக்கும், அவருக்கும் வயது வித்தியாசம் இல்லை என்ற நிலையை எங்கள் தோல் உணருகிறது. இது போதாதா? இவர் நீண்ட காலம் வாழ்வதற்கு!
(தொடரும்)
