பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் ரகுவன்சி அய்.ஏ.எஸ்.! இவரது மனைவி வருமானம் ஆண்டுக்கு 1.47 கோடி; தாயார் மிகப்பெரிய தனியார் அப்பள நிறுவனம் நடத்துகிறார்.
தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, தற்போது அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். ஒட்டு மொத்த குடும்பத்தில் வருவாயைக் கூட்டினால் ஆண்டுக்கு 13 கோடிக்கு மேல் செல்லும். ஆனால், சந்தீப் ரகுவன்சி ‘இ.டபுள்யூ.எஸ்.’ (EWS – Economically Weaker Section) கோட்டாவில் அய்.ஏ.எஸ் ஆகி உள்ளார்.
‘இ.டபுள்யூ.எஸ்.’ கோட்டாவில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி அடைந்த உடன் அவரது சொந்த ஊரான குனாவில் மேள தாளத்தோடு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் ‘‘என்னை விட எனது மனைவி ஆண்டுக்கு ரூ.1.47 கோடி ஊதியமாக வாங்குகிறார்’’ என்று கூறியபோது, அவரது மனைவி ‘வெட்கத்தால்(!)’ முகத்தை மூடிக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள நாக்பூரில்
‘‘பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை உயர் ஜாதிகள்’’ (EWS) சான்றிதழ் விற்பனைக்கு உள்ளதாம்; இங்கிருந்து இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து ஆதார் கார்டை உள்ளூர் முகவரிக்கு மாற்றி, அவர்களுக்குப் போலி ‘இ.டபுள்யூ.எஸ்.’ சான்றிதழ் கொடுத்த நிகழ்வு 2020ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.
இன்றுவரை வழக்கு நடக்கிறது; அது ஒருபுறம் நடந்துகொண்டு இருக்கும்போது போலிச் சான்றிதழ் வியாபாரமும் பலே ஜோராக நடக்கிறது.
இ.டபுள்யூ.எஸ். என்பது பார்ப்பனர் கொல்லைப்புற வழியாக மருத்துவக் கல்லூரிக்குள் எளிதாக நுழைவதற்கான திட்டமிட்ட ஏற்பாடு என்பது இப்பொழுது புரிகிறதா?
ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் சம்பாதிக்கும் உயர் ஜாதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயர் ஜாதி ஏழைப் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி?
இ.டபுள்யூ.எஸ். என்ற பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு அப்பட்டமாகத் தலைக்குப்புற வீழ்ந்து தோல்வி அடைந்து விட்ட ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இ.டபுள்யூ.எஸ். மூலம் ‘தகுதி மதிப்பெண்’ பெற்று தரவரிசையில் கீழே இருந்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் மருத்துவமனையில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து எளிதில் இடத்தைப் பெறுகிறார்; ஆண்டு ஒன்றுக்குப் பல லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டுகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன?
இ.டபுள்யூ.எஸ். மூலம் இடம் கிடைத்தவர்கள் பற்றி விவரங்களை அறிந்து, உண்மை நிலையைக் கண்டுபிடிக்க உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டை எதிர்த்து என்னென்ன முயற்சிகளை அதிகபட்சமாக மேற்கொள்ள முடியுமோ, அவற்றையெல்லாம் மேற்கொண்டு, அதில் வெற்றி பெற முடியாமல்போன உயர் ஜாதிப் பார்ப்பனர்கள், இப்படி வேறு வழியில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட இத்தகைய குறுக்கு வழிகளில், பார்ப்பனீயத்துக்கே உரித்தான தந்திர உபாயங்களி்ல ஈடுபட்டுள்ளனர்.
சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் இந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்! குறுக்கு வழி முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
பெரும்பான்மை மக்கள் ஒன்றும் ஏமாளி அல்ல –என்பதை நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
