தொண்ணூற்(று) மூன்று காணும்
தொல்குடித் தமிழர் தலைவர்
விண்ணிலும் பெரியார் கொள்கை
வியக்கவே கண்டார் வாழி
கண்ணெனக் கழகம் காத்து
கற்பனைக் கெட்டா வண்ணம்
மண்ணிலே பெரியார் உலகம்
மாபெரும் புரட்சி அன்றோ!
தளர்ந்திடும் நிலையில் கூட
தகுதியாய் உடலைக் காத்திவ்
உலகுல உரிமை எல்லாம்
உன்னத மனிதம் தந்து
பழகிட ஒரு கருத்துப்
பறந்திடும் உறவைப் பேணி
களத்திலே தமிழர் மானம்
காத்திடும் அறமே வாழ்க!
தமிழக முதல்வர் தம்மின்
தகைசால் தமிழர் வாழ்க
அமிழ்தமாம் பெரியார் கொள்கை!
ஆற்றலே வாழ்க வாழ்வில்
சிமிழே காக்கும் விளக்காய்!
சிந்தையே வாழ்க வாழ்க
தமிழினம் போற்றும் தலைவா!
தரணியின் ஊக்கம் வாழ்க
ஸநாதானப் பேயை விரட்டும்
சரித்திரச் சான்றே வாழ்க!
இனமானத் தமிழைக் கோயில்
இயம்பிடச் செய்தாய் வாழ்க!
குணம் எனும் குன்றே
குறிக்கோள் மழையே வாழ்க!
வினைத் திட்ப வீரா எங்கள்
வித்தகத் தலைவா வாழ்க!

தமிழ்மாமணி
வா.மு.சே.திருவள்ளுவர்
தலைவர்,
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
