நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் ‘‘கார்த்திகை தீபம்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

– தந்தை பெரியார் –

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை டின் டின்னாய் கற்பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளை போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டி சட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுப் பொட்டணம், பருத்தி விதைப் பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்தச் சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும்.

ஆகவே, இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகிய வைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந்தகைச் செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ, சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிர யோஜனமாவதுமுண்டா என்ப தையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது.

அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவு ளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம்.

ஆனால், இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத்துரோகமாகவும்,  நாஸ்தி கமாகவும் சொல்லப்படுகின்றது.

இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே, ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசாகர வேலைகளும் சிறிதாவது குறையும் படியாக வேலை செய்வார்களேயானால் அது மற்ற எல்லா முயற்சிகளையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக் கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

நன்றி : ‘‘குடிஅரசு’’ இதழ்
– துணைத் தலையங்கம் –
30.11.1930.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *