தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

16 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பாசிஸ்டுகளையும், அவர்களுடைய அடிமைகளையும் வீழ்த்த, நாம் அத்துணை பேரும் ஓரணியில் திரளுவோம்!

200–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைய ஆசிரியர் பிறந்த நாளில் உறுதியேற்போம்!

தாத்தாவின் வீட்டிற்குப் பெயரன் உதயநிதி கருப்புச் சட்டையோடு வந்திருக்கின்றேன்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை

சென்னை, டிச.2 – 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், பாசிஸ்டுகளையும், அவர்களுடைய அடிமைகளையும் வீழ்த்த, நாம் அத்துணை பேரும் ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். நம்முடைய தலைவர் அவர்கள், 200–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கின்றார். அந்த இலக்கை அடைய, நாம் அனைவரும் சேர்ந்து அயராது உழைப்போம்! அதற்கான உறுதிமொழியை, ஆசிரியர் அய்யா அவர்களுடைய பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்றார் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு

சென்னை பெரியார் திடலில் இன்று (2.12.2025) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது பிறந்த நாள் விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

வாழ்த்துரை என்பதைவிட, நன்றியுரை என்று சொல்வதுதான் சிறந்தது.

இன்றைக்குப் பிறந்த நாள் விழா காணுகின்ற எங்களுடைய ஆசிரியர் அய்யா அவர்களே, மரியா தைக்குரிய அம்மா மோகனா வீரமணி அவர்களே, மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பொறுப்பாளர்களே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆசிரியர் அய்யாவை வாழ்த்த வந்திருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய கருஞ்சட்டை வீரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தினுடைய திசை காட்டி ஆசிரியர் அய்யா அவர்களுடைய பிறந்த நாள் விழாவில், உங்களோடு சேர்ந்து நானும் இங்கே வருகை தந்து, ஆசிரியருடைய வாழ்த்துகளைப் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

சரியாக 5 நாள்களுக்கு முன்பு, இதே பெரியார் திடலுக்கு, என்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக நான் இங்கே வருகை தந்திருக்கின்றேன். இன்றைக்கு அய்யாவினுடைய பிறந்த நாள் விழாவிற்காக, வருகை தந்திருக்கின்றேன்.

என்னுடைய பொது வாழ்வில்
மறக்க முடியாத பெரியார் திடல்!

இந்தப் பெரியார் திடல் என்பது, என்னுடைய பொது வாழ்வில், என்னால் மறக்க முடியாது, மறக்க முடியாத தருணங்களை, பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கக்கூடிய திடல்தான் இந்தப் பெரியார் திடல்.

கடந்த  2019 ஆம் ஆண்டு முதன் முதலில், அரசியல் பொதுவாழ்விற்கு வந்த பிறகு, நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இதே பெரியார் திடலில் நடைபெற்றது.

அதன் பிறகு, நிறைய முறை இங்கே வந்திருக்கின்றேன். சென்ற மாதம், இளைஞரணியின் சார்பாக, ‘‘தி.மு.க. 75 பவள விழா’’வை முன்னிட்டு, ‘அறிவுத் திருவிழாவை’ வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினோம். அப்போது, ஆசிரியர் அய்யா அவர்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

‘‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’’ புத்தகம்!

அவர், சென்னைக்கு வந்த பிறகு, அவரை உடனடியாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்தேன். தி.மு.க. இளைஞரணியின் சார்பாக, ‘‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’’ என்ற புத்தகத்தை வெளியிட்டியிருந்தோம். . அந்தப் புத்தகத்தை ஆசிரியர் அய்யாவிடம் கொடுத்துவிட்டு, அவருடைய வாழ்த்துகளைப் பெறுவதற்காக நானும், இளைஞரணி தோழர்களும் வந்திருந்தோம்.

அதற்கு 10 நாள்களுக்கு முன்பு, முரசொலியில் வெளிவருகின்ற ‘பாசறை’ பக்கத்தைத் தொடர்ந்து ஆசிரியர் அய்யா அவர்கள் படித்து வருகிறார். அதற்காக அந்தக் குழுவினரைப் பாராட்டவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று தெரிந்தவுடன், இதைவிட மிகப்பெரிய பாராட்டு, பாசறைப் பக்கத்திற்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறது என்று, நானும், இளைஞரணி துணை செயலாளர்களும், அந்தப் பாசறைப் பக்கக் குழுவினர்களும் பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியரைச் சந்தித்து அவருடைய வாழ்த்தைப் பெற்றுச் சென்றோம்.

தந்தை பெரியாருடைய கொள்கைப் பெயரனாக வந்திருக்கின்றேன்!

இந்தக் கொள்கை உறவின் தொடர்ச்சியாகத்தான், அந்த உரிமையோடுதான் இன்றைக்கு இந்த மேடையில் உங்கள் மு்னபு நான் நின்று கொண்டிருக்கின்றேன். இந்த மேடையில் நான் துணை முதலமைச்சராக அல்ல; தி.மு. கழகத்தினுடைய இளைஞரணி செயலாளராக மட்டுமல்ல, அதைவிட நான் பெருமையாகக் கருதுவது, தந்தை பெரியாருடைய கொள்கைப் பெயரனாக இன்றைக்கு நான் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றேன்.

திராவிடர் கழகம் என்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தாய்வீடு என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுச் செல்வார்.

எல்லோருமே, தாய் வீட்டிற்குச் செல்லும்போது, மகிழ்ச்சியாக செல்வோம். குறிப்பாக, தாத்தா வீட்டிற்குச் செல்லும்போது, இன்னும் கூடுதல் மகிழ்ச்சியோடு செல்வோம். அப்படித்தான் என்னுடைய தாத்தா வீட்டிற்கு ஒரு பெயரனாக நான் இங்கே வந்திருக்கின்றேன்.

நானும், கருப்புச்சட்டை அணிந்திருக்கின்றேன்!

இங்கே நம்முடைய ஆசிரியரின் 93 ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட, இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து கருஞ்சட்டை வீரர்கள் வருகை தந்திருக்கின்றீர்கள். நானும், கருப்புச்சட்டையோடு வருகை தந்திருக்கின்றேன்.

இது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்; சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிலருக்குச் சந்தேகமாகவும் இருக்கலாம்.

இவன் கருப்புச் சட்டையைத் தெரிந்து போட்டுக் கொண்டு வந்தானா? தற்செயலாகப் போட்டு வந்தானா? என்று.

நிச்சயமாக, விரும்பித்தான் இந்தக் கருப்புச் சட்டையை அணிந்து வந்திருக்கின்றேன்.

ஒரு ஒளிப்படம் இருக்கிறது. உங்களில் பல பேர் அந்த ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான ஒளிப்படம். மார்ஃபிங் செய்யப்பட்டது அல்ல.

2 வயது குழந்தையாக இருக்கும்போதே
கருப்புச் சட்டை அணிந்தவன்!

1979 ஆம் ஆண்டு, எனக்கு அப்போது 2 வயது. கலைஞர் அவர்களுடைய கோபாலபுரம் வீட்டின் முன்பு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய கையில் 2 வயது குழந்தையாக ஒரு குழந்தை இருக்கும். அந்தக் குழந்தை நான்தான்.

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த ஒரு போராட்டத்தில், கருப்புச் சட்டை அணிந்துகொண்டு நான் பங்கேற்றேன். மூன்று பேருமே கருப்புச் சட்டை அணிந்திருப்போம்.

மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் நான்!

எனவே, கலைஞர் வழியில், தலைவர் வழியி்ல், மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகின்றேன்.

இங்கே கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; அதேநேரத்தில், மிகுந்த வியப்பாகவும் இருக்கிறது.

தமிழ்நாடு

ஏனென்றால், நேற்றைக்கு இயக்கத்தை ஆரம்பித்து, இன்றைக்கு நான்தான் முதலமைச்சராக வேண்டும் என்று இன்றைக்குப் பலர் அந்த ஆசையில் வருகிறார்கள்.

ஆனால், ஒரு கவுன்சிலர் பதவிகூட எனக்குத் தேவையில்லை. ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பதவிகூட எனக்குத் தேவையில்லை. எங்களுக்குக் கொள்கை முக்கியம். சமுதாயத் தொண்டு மட்டுமே முக்கியம் என்று பெரியாருடைய காலத்திலிருந்து நீங்கள் பணியாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

‘‘நீங்களெல்லாம் துறவிகளைவிட மேலானவர்கள்’’ என்றார் தந்தை பெரியார்!

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், ‘‘என்னுடைய தொண்டர்கள், துறவிகளைவிட மேலானவர்கள்’’ என்று அடிக்கடி சொல்வார்.

ஆனால், அந்தத் துறவிக்குக்குக்கூட ஓர் ஆசை இருக்கும். இறந்த பிறகு, சொர்க்கத்திற்குப் போகவேண்டும் என்று.

ஆனால், அந்த சொர்க்கத்தில்கூட, நம்பிக்கை இல்லாதவர்கள்தான், இங்கே வந்திருக்கக்கூடிய கருஞ்சட்டை வீரர்களாகிய நீங்கள்.

ஆசை மட்டும் இல்லை என்பது கிடையாது. அதேநேரத்தில், கட்டுப்பாடோடும், கடமை உணர்வோடும் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்றால், உங்களையெல்லாம் வழிநடத்துகின்ற ஆசிரியர் அய்யா அவர்களுக்குத்தான் அந்தப் பெருமை சேரும்.

இன்றைக்குச் சுயமரியாதை இயக்கம், நூற்றாண்டைக் கடந்திருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவைக் கொண்டாடி இருக்கின்றது.

திராவிட இயக்கத்தினுடைய நேரடி வரலாற்றுச் சாட்சி ஆசிரியர் அய்யா!

இந்தச் சூழலில், தன்னுடைய 83 ஆண்டு கால பொதுவாழ்க்கை மூலமாக, திராவிட இயக்கத்தினுடைய நேரடி வரலாற்றுச் சாட்சியாக ஆசிரியர் அய்யா அவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்.

தமிழ்நாடு

இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைகள், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. பெரியாரை இன்றைக்கு உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

ஆசிரியர் அய்யாவின் உழைப்புதான் காரணம்!

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினர் Zens Kids அவர்களும் பெரியாருடைய கொள்கைகளை இன்றைக்குப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், அதனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றோம்.

அதற்கெல்லாம் காரணம், இங்கு இருக்கக்கூடிய ஆசிரியர் அய்யா அவர்களுடைய உழைப்பு என்று சொன்னால், அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆசிரியர் அய்யா அவர்கள், தன்னுடைய 10 வயதில் பெரியாருடைய கொள்கைகளை மேடைகளில் பேசத் தொடங்கிவிட்டார்.

10 வயதில், பெரியாருடைய கொள்கைகளைப் பேசத் தொடங்கிய ஆசிரியர் அய்யா அவர்கள், இன்றைக்கு அவருடைய 93 வயதிலும், அதே கொள்கைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றார். இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் இருந்திருந்தால், நம்மையெல்லாம் எப்படி வழிநடத்துவாரோ, அந்த இடத்தில், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் இருந்து, நம்மையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.

எச்சரிக்கை மணியாகத் திகழ்கிறார் ஆசிரியர்!

குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு எந்த நேரத்தில், எந்த ஆபத்து வந்தாலும், அது ஹிந்தித் திணிப்பாக இருக்கட்டும்; எஸ்.அய்.ஆர் ஆக இருக்கட்டும்; EWS பிரச்சினையாக இருக்கட்டும் இப்படி எந்த ஆபத்து வந்தாலும், நமக்கெல்லாம் அதனை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடிய ஓர் எச்சரிக்கை மணியாக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

அதனால்தான், ஒவ்வொரு விஷயத்திலும், ஆசிரியர் அவர்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பதில், தலைவராக இருக்கட்டும்; திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும் தெளிவாக இருப்போம்.

தலைவர் கலைஞர் அவர்கள், ‘‘இன்றைய முரசொலியைப் படித்துவிட்டார்களா’’ என்று செக் செய்வாராம்.

இன்றைக்கு நான் முரசொலியைப் படிப்பதற்கு முன், விடுதலையைப் படித்துவிடுகிறேன். அந்தக் காலச் சூழலில்தான் நாம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றோம்.

பெரியாருடைய கொள்கைகளிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!

இளம் வயதில், கொள்கைகளை வேகமாகப் பேசுவார்கள். வயதாக வயதாக, அந்தக் கொள்கைகளைப் பின்பற்ற முடியாத சூழல் ஏற்படும். ஆனால், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள், பெரியார் கொள்கைகளைப் பேசுவது மட்டுமல்லாமல், அந்தக் கொள்கைகளிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆசிரியர் அவர்கள், சட்டப் படிப்பு படிக்கும்போது, தேர்விற்கான ஹால்டிக்கை, ராகுகாலத்தில் போய்  வாங்குகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தாராம். அப்போது எல்லோரும் அவரிடம் கேட்டார்களாம், ‘‘ஏம்பா, ராகு காலத்தில் போய் வாங்குகிறாயே?’’ என்று.

ராகுகாலத்தில் ஹால்டிக்கெட் வாங்கியவர் நம்முடைய ஆசிரியர்!

அப்போது ஆசிரியர் சொன்னாராம், ‘‘மற்றவர்கள் கெட்ட நேரம் என்று நினைக்கின்ற ராகுகாலத்தில் போய் ஹால் டிக்கெட்டை வாங்கச் செல்லும்போது, கூட்டம் இருக்காது. எளிதாக வாங்கிக் கொண்டு வந்துவிடலாம்’’ என்று அவர்களுக்குப் பதில் சொன்னாராம்

பகுத்தறிவுவாதியாக இருப்பதினால், இப்படி பல்வேறு நன்மைகள் நமக்குத் தாமாகவே அமைந்துவிடுகின்றன.

நாங்கள் அண்மையில், தி.மு.க. இளைஞரணி சார்பாக நடத்திய அறிவுத் திருவிழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டுப் பேசினேன். ஏன், அறிவுத் திருவிழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள்.

கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம், அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, சீரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கி, சீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சர், அதனைத் திறந்து வைத்தார். அதன் பிறகு, பெரிய அளவிற்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

அறிவுத் திருவிழாவை நடத்துவதற்காக வள்ளுவர் கோட்டத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், பல பேர் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார்கள். யோசித்து செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

எனக்குத் தெரியும், அவர்கள் எதற்காக அப்படிச் சொல்கிறார்கள் என்று. அந்த ஒரு காரணத்திற்காகவே நான் சொன்னேன், வள்ளுவர் கோட்டத்தில்தான் அறிவுத் திருவிழாவை நடத்துவேன் என்று சொல்லி, அப்படியே நடத்திக் காட்டினேன். இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி விழாவாகவே அது அமைந்தது.

தன்னுடைய செயல்களால்,
பெரியாருடைய நம்பிக்கையைப் பெற்றவர்!

அதுபோல, நம்முடைய ஆசிரியர் அவர்கள், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையால் மட்டுமல்லாமல், தன்னுடைய செயல்களால், பெரியாருடைய நம்பிக்கையைப் பெற்றவர் அவர். அதனால், அவருடைய 30 வயதிலேயே, ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக அவரைப் பொறுப்பேற்கச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

அன்றிலிருந்து, இன்றுவரை 63 ஆண்டுகளாக ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக இருந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார்.

உலக அளவில், ஒரு பத்திரிகைக்கு 63 ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியராக இருப்பவர் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள். அவருக்கு மட்டும்தான், அந்தப் பெருமை!

சில நாள்களுக்கு முன்பு ‘‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’’ என்ற புத்தகத்தை ஆசிரியர் அய்யாவிடம் கொடுத்தோம். அந்தப் புத்தகத்தில், முதல் பேட்டி, அய்யா ஆசிரியர் அவர்களுடையதான்.

அந்தப் பேட்டியில், தி.மு.க. இளைஞரணியின் பணிகளைப் பாராட்டியிருக்கிறார். ஓர் ஆசிரியரிடம், நல்ல மதிப்பெண் வாங்கியது போன்ற உணர்வு எங்களுக்கு அந்த நேரத்தில் கிடைத்தது.

‘கண்ணீர்த் துளிகள்’ என்பது தி.மு.க. என்று மாறியதற்கு நம்முடைய ஆசிரியர்தான் காரணம்!

பெரியாரும் – அண்ணாவும் பேசிக் கொள்ளா காலகட்டத்தில், ‘விடுதலை’ நாளிதழில், தி.மு.க.வைப்பற்றி எழுதும்போ, தி.மு.க என்று எழுத மாட்டார்கள். ‘கண்ணீர்த் துளிகள்’ என்று குறிப்பிட்டுத்தான் செய்தி வரும்.

அதற்குப் பிறகு, பெரியாரும், அண்ணாவும் பேசத் தொடங்கிய பிறகு, ‘விடுதலை’யில் கண்ணீர் துளிகள் என்பது, தி.மு.க. என்று மாறியது. அதற்குக் காரணமாக இருந்தவர், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்தான்.

அப்போது கண்ணீர்த் துளியாக இருந்த தி.மு.க. இப்போது உங்களுடைய கண்களில், ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கக் கூடிய வகையில், பெரியார் வழியில், நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தை, ‘‘இந்த அரசு, தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை’’ என்று சொன்னார்.

‘‘தி.மு.க. செல்லுகின்ற பாதையை எப்போதுமே தீர்மானிப்பது பெரியார் திடல்தான்!’’

அதேபோல், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் உரையாற்றும்போது, ‘‘தி.மு.க. செல்லுகின்ற பாதையை எப்போதுமே தீர்மானிப்பது பெரியார் திடல்தான்’’ என்று குறிப்பிட்டுப் பேசிானர்.

ஆகவே, பெரியாருடைய கொள்கைப் பாதையில்தான் தி.மு.க. எப்போதும் செல்லும். அதை யாராலும் நிச்சயம் மாற்ற முடியாது.

ஆசிரியர் அய்யா அவர்களுடைய 93 வயது பிறந்த நாள் இன்று. ஆனால், ஆசிரியர் அய்யா அவர்கள், தன்னுடைய 74 ஆவது பிறந்த நாள் வரையில், அவருடைய பிறந்த நாளை அவர் கொண்டாடியதே கிடையாது. அவருடைய 75 வயதை, பவள விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, முடியாது என்று சொல்லிவிட்டார்.

அந்தச் செய்தியை பிறந்த நாள் விழாக் குழுவினர், கலைஞரிடம் சென்று சொன்னார்கள். உடனே கலைஞர் அவர்கள், ஆசிரியருடைய பவள விழாவை கொண்டாடவேண்டும் என்று முடிவெடுத்தார்.

‘‘நான் சொன்னால் மறுக்க மாட்டார், அவருடைய 75 வயது பவள விழா என்னுடைய தலைமையில் நடக்கும் என்று போயச் சொல்லுங்கள்’’ என்றார்.

அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல், ஆசிரியர் அய்யா அந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகுதான், பிறந்த நாள் விழாவில், ஆசிரியர் அய்யா அவர்கள் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

அதன்படி பார்த்தால், இன்று நடைபெறுகின்ற பிறந்த நாள் விழாவிற்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்தான், இந்தப் பிறந்த நாள் விழாவிற்கும் காரணம்.

அந்த அளவிற்கு, ஆசிரியர் அய்யா அவர்கள்மீது கலைஞர் அவர்களுக்கு, தனிப் பிரியம், தனிப் பாசம், தனி மரியாதை.

‘‘அவர் வெறும் கி.வீரமணி கிடையாது. என்னுடைய ‘கீ’ஆகவும் எப்போதும் இருக்கிறார்!’’ – கலைஞர்

அதனால்தான் கலைஞர் அவர்கள், ஆசிரியர் அவர்களைக் குறி்ப்பிட்டுப் பேசும்போது, ‘‘அவர் வெறும் கி.வீரமணி கிடையாது. என்னுடைய ‘கீ’ஆகவும் எப்போதும் அவர் இருந்துகொண்டிருக்கின்றார் என்றார்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக பல தியாகங்களைச் செய்தவர்தான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்.

நம்முடைய தலைவரைத் தாங்கிப் பிடித்த கரங்கள்!

குறிப்பாக, மிசா சட்டத்தில் நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாக ஆசிரியர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையி்ல இருந்தார். நம்முடைய முதலமைச்சர் அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளியபோது, அதே அறையில் இருந்து அவரைத் தாங்கிப் பிடித்த கரங்கள்தான், ஆசிரியர் அய்யா அவர்களுடைய கரங்கள்.

தி.மு.க. ஓர் அரசியல் கட்சி. அதனால், மிசா காலகட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகளைத் தேடித் தேடி கைது செய்தார்கள். ஆனால், திராவிடர் கழகம் என்பது ஒரு சமுதாய இயக்கம். தி.மு.க.வை ஆதரித்த ஒரே காரணத்திற்காக, திராவிடர் கழக நிர்வாகிகளையும் சேர்த்து கைது செய்தார்கள். அப்படித்தான் ஆசிரியர் அய்யா அவர்களையும் கைது செய்து சிறையி்ல் அடைத்தனர்.

இந்த நேரத்தில்,  அன்னை ணியம்மையாருடைய வீரத்தைப்பற்றி நான் இங்கே குறிப்பிடவேண்டும். அந்தக் காலத்தில், ஒன்றிய அரசில் இருந்தவர்கள், இப்போது போன்றே, அன்றைக்கும் ‘பிளாக் மெயில்’ செய்தனர்.

அன்னை மணியம்மையாரின் துணிச்சல்!

அன்மனை ணியம்மையாரிடம் சொன்னார்கள், ‘‘தி.க.விற்கும், தி.மு.க.விற்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள், அனைவரையும் விடுதலை செய்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

அதற்கு அன்னை மணியம்மையார்  அவர்கள் துணிச்சலோடு பதில் சொன்னார். ‘‘தி.க. –தி.மு.க என்ற உறவு, தந்தை பெரியார் உருவாக்கிய உறவு. அது கொள்கை அடிப்படையிலான ஓர் உறவு. அதனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எங்கள் இயக்கத்தவர்கள் சிறைச்சாலையிலேயே இருக்கட்டும். நீங்கள் சொன்னதுபோன்று என்னால் எழுதிக் கொடுக்க முடியாது’’ என்று சொன்னார்.

செத்தாலும் சாகட்டும், ஆனால், தி.மு.க.வுடன் உறவு இல்லை என்று என்னால் சொல்ல முடியாது’’ என்னால் சொல்லவே முடியாது என்று சொன்ன வீரப் பெண்மணிதான் அன்னை மணியம்மையார் அவர்கள்.

எப்போதுமே துணையாக நிற்பது எங்கள் கடமை!

இவ்வளவு தாக்குதல்கள், சிறைவாசங்கள், ஒடுக்குமுறைகளை நமக்காகத் தாங்கிக் கொண்ட ஆசிரியர் அவர்களுக்கு நாங்கள் எப்போதுமே துணையாக நிற்போம், நிற்கவேண்டும், அது எங்கள் கடமை!

ஆனால், ஆசிரியர் அவர்களைப் பார்க்கும்போது, அவருக்கு 93 வயது என்று யாராலும் நம்ப முடியாது. 39 வயது என்று சொன்னால் நம்பலாம்.

93 வயதில் இன்றைக்கும், எங்களைவிட சுறுசுறுப்போடு, இன்னும் சொல்லப்போனால், எங்களைவிட சின்ன வயது பையன் போன்று, சுறுசுறுப்பாகப் பயணித்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்நாடு முழுவதும் சூறாளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். தொடர்ந்து ‘விடுதலை’ பத்திரிகையைப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், சென்னை, திருச்சி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, காரைக்குடி என்று ஒவ்வொறு நாளும், ஒவ்வொரு ஊரில் தன்னுடைய பிரச்சாரப் பணியை செய்துகொண்டிருக்கின்றார்.

பெரியாருடைய கருத்துகளைப் பரப்பவேண்டும் என்கின்ற அந்த உந்துதல் இருப்பதின் காரணமாகத்தான், ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த வயதிலும் உற்சாகத்தோடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

ஒருமுறை தந்தை பெரியாருடைய வயதைப்பற்றி கலைஞர் அவர்கள் சொல்லும்போது, ‘‘தமிழ்ச் சமுதாயம் ஒரு படி முன்னேறினால், பெரியாருடைய வயதி்ல் ஒன்று குறையும்’’ என்று சொன்னார்.

கலைஞரிடத்தில் இரவல் வாங்கிச் சொல்கிறேன்!

நான், கலைஞரிடத்தில் அதை இரவல் வாங்கி, இன்றைக்கு ஆசிரியர் அய்யாவிற்கும் அதையே குறிப்பிட விரும்புகின்றேன்.

‘‘தமிழர்கள் ஒருபடி முன்னேறினால், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களுடைய வயதில் ஒன்று நிச்சயமாகக் குறையும்.’’

அதற்காக உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய உங்களின் வழிகாட்டுதலோடு நாங்கள் பயணிக்க விரும்புகின்றோம்.

நிறைவாக, பெரியார் திடலைப்பற்றி கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதைச் சொல்லி நான் என்னுரையை முடிக்க விரும்புகின்றேன்.

‘‘கீரிக்கும், பாம்புக்கும் சண்டை வரும்போது, பாம்பைக் கொன்று எப்போதுமே கீரிதான் வெற்றி பெறும்.

ஆனால், பாம்பிடம் கடிபட்ட கீரி, அந்த விஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அதற்கு மட்டுமே தெரிந்த மூலிகைகளில் விழுந்து புரளும். அப்படி பொதுவாழ்க்கையில் பல பாம்புகளிடம் கடி படும் நான், பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் எனும் மூலிகையைத் தடவினால், அந்த விஷமெல்லாம் முறிந்து போகும்’’ என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

என்னையும் சில நேரங்களில், நிறைய
பாசிசப் பாம்புகள் சீண்டிக் கொண்டிருக்கின்றன!

கலைஞர் அவர்களை மட்டுமல்ல, இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களை மட்டுமல்ல, என்னையும் சில நேரங்களில், நிறைய பாசிசப் பாம்புகள் சீண்டிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, எங்களுக்கும், பெரியார் திடலினுடைய மூலிகை கண்டிப்பாகத் தேவைப்படும்.

எனவே, நிச்சயம் அடிக்கடி நாங்கள் இந்தப் பெரியார் திடலுக்கு வரவேண்டிய கட்டாயம் எங்களுக்கும் ஏற்படும்.

‘‘இன்றைய அரசியல் சூழ்நிலையில், திராவிடர் இயக்கத்திற்குச் சமமான போட்டியே இல்லை; வெறும் சூழ்ச்சிகள் மட்டும்தான் இருக்கின்றன’’ என்று ஆசிரியர் அண்மையில் சொல்லியிருக்கிறார்.

மும்மொழிக் கொள்கை, பண மதிப்பிழப்பு, எஸ்.அய்.ஆர்., நிதி ஒதுக்குவதில் பாகுபாடு என்று பாசிஸ்டுகள் எவ்வளவுதான் சூழ்ச்சிகள் செய்தாலும், அவையெல்லாம் தமிழ்நாட்டில் நிச்சயம் எடுபடாது.

தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகளால்
தொட்டுக்கூட பார்க்க முடியாது!

தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என்று எத்தனை அடிமைகள் வேண்டுமானாலும் கிடைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், சுயமரியாதை உணர்வுள்ள கோடான கோடி, பெரியாருடைய கருப்புச் சட்டைப் பட்டாளங்களும், கலைஞருடைய உடன்பிறப்புகளும் இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டை அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

உறுதிமொழி ஏற்போம்!

ஆகவே, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், பாசிஸ்டுகளையும், அவர்களுடைய அடிமைகளையும் வீழ்த்த, நாம் அத்துணை பேரும் ஓரணியில் திரண்டு செயல்படவேண்டும்.

நம்முடைய தலைவர் அவர்கள், 200–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கின்றார். அந்த இலக்கை அடைய, நாம் அனைவரும் சேர்ந்து அயராது உழைப்போம்!

அதற்கான உறுதிமொழியை, ஆசிரியர் அய்யா அவர்களுடைய பிறந்த நாளில் ஏற்போம்!

இங்கே, கலைஞர் வழியி்ல், பெரியார் உலகத்திற்கு நிதி செலுத்துவதற்காக உண்டியலை வைத்திருக்கிறார்கள். இங்கே வந்து, வெறுமனே வாழ்த்திவிட்டு, ஆசிரியர் அய்யா அவர்களின் வாழ்த்துகளை வாங்கிவிட்டுச் சென்றால் மட்டும் சரியாக இருக்காது.

பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நன்கொடை!

ஆகவே, திராவிட முன்னேற்றக்  கழக இளைஞரணியின் சார்பாக ரூ.10 லட்சத்தினை பெரியார் உலகத்திற்காக ஆசிரியர் அவர்களிடம் கொடுக்கின்றேன்.

வாழ்க தந்தை பெரியார்!

ஓங்கட்டும், ஆசிரியர் அய்யாவினுடைய புகழ்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *